சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான பொது சுகாதார முன்னேற்பாடுகள் மற்றும் தேசிய தடுப்பூசி இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு

Posted On: 02 JAN 2022 2:46PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்     மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள், முதன்மை செயலர்கள் உள்ளிட்டோருடன் மெய்நிகர் வடிவில் இன்று கலந்துரையாடினார். இந்தக்கூட்டத்தில் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான பொது சுகாதார முன்னேற்பாடுகள் மற்றும் தேசிய தடுப்பூசி இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், 15-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பிரிவினருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் சமீபத்திய முடிவைச் செயல்படுத்துதல் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷண் ஏற்பாட்டின்படி இது நடத்தப்பட்டது.

திரு மா.சுப்பிரமணியன் (தமிழ்நாடு), திரு என்.கே.தாஸ் (ஒடிசா), டாக்டர் பிரபுராம் சவுத்ரி (ம.பி.), திரு சத்யேந்திர ஜெயின் (தில்லி), திரு அனில் விஜ் ( அரியானா), திரு கேசப் மகந்தா( அசாம்) உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவக்கூடியது என்பதை உலக நாடுகள் கண்டு வருவதாகவும்அதிகப் பரவல் மருத்துவ நடைமுறைகளையும் மிஞ்சியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். மாநிலங்கள் இந்த  தொற்று பரவலில் இருந்து தப்பிக்க தீவிரமான முயற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

எந்த வகை தொற்று என்று பாராமல், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்பு போல மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார். மாநில அரசுகள் தங்கள் குழுக்களை முடுக்கி விட்டு, கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பரிசோதனைகளை அதிகரித்து, மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்தி, பரவல் சங்கிலியை முறியடிக்க நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் நலனை உறுதிப்படுத்தும் அதே வேளையில், பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை பொறுமையுடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டு வரும் மாநில அரசுகளை பாராட்டிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, ‘ கொரோனாவுக்கு எதிரான முந்தைய போராட்டத்தின் படிப்பினை மற்றும் அனுபவத்துடன், ஒமிக்ரானுக்கு எதிராகவும் நாம் கவனம் செலுத்தி, அதை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

மேலும் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையிலும் முனைப்புடன் செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார். சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

****



(Release ID: 1786946) Visitor Counter : 325