பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தில் சத்குரு சதாஃபல்டியோ விஹங்கம் யோக் சன்ஸ்தானின் 98-வது ஆண்டு விழாவில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
Posted On:
14 DEC 2021 6:52PM by PIB Chennai
ஹர் ஹர் மகாதேவ்!
ஸ்ரீ சத்குரு சரண் கமலேப்யோ நமஹ்!
மேடையில் வீற்றிருக்கும் உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்திபென் படேல் அவர்களே, உத்தரப் பிரதேசத்தின் ஆற்றல்மிக்க கர்மயோகி, முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, சத்குரு ஆச்சார்யா ஸ்ரீ சுதந்திரதேவ் ஜி மகராஜ் அவர்களே, சந்த் பிரவர் ஸ்ரீ விக்யாந்தேயோ ஜி மகராஜ் அவர்களே, அமைச்சரவையில் எனது சகாவும், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகேந்திர நாத் பாண்டே அவர்களே, உங்கள் பிரதிநிதியும் யோகி அவர்களின் அரசில் அமைச்சருமான திரு அனில் ராஜ்பார் அவர்களே, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து பக்தர்களே, சகோதர சகோதரிகளே, நண்பர்களே!
காசியின் ஆற்றல் வற்றாதது மட்டுமல்ல, அது தொடர்ந்து புதிய பரிமாணங்களைப் பெறுகிறது. நேற்று, மகாதேவரின் பாதத்தில் பிரமாண்டமான 'விஸ்வநாத் தாம்'-ஐ காசி சமர்ப்பித்தது, இன்று இந்த அற்புதமான நிகழ்வை 'விஹங்கம் யோகா சன்ஸ்தான்' ஏற்பாடு செய்துள்ளது. இந்த தெய்வீக பூமியில், இறைவன் தமது பல ஆசைகளை நிறைவேற்றுவதற்காக துறவிகளை கருவிகளாக ஆக்குகிறார்.
அகில இந்திய விஹங்கம் யோகா சன்ஸ்தானின் 98-வது ஆண்டு விழா, சுதந்திரப் போராட்டத்தின் போது சத்குரு சதாபல்தியோ ஜியின் 100 ஆண்டுகள் சிறைவாசம் மற்றும் நாட்டு விடுதலையின் அமிர்த மகோத்ஸவம் ஆகியவற்றை ஒன்றாகக் காண்கிறோம். இத்தனை நற்செயல்களுடன் கீதா ஜெயந்தியின் மங்களகரமான சந்தர்ப்பமும் இன்று கூட சேர்ந்திருக்கிறது. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் படைகள் நேருக்கு நேர் மோதிய இந்நாளில், யோகம், ஆன்மிகம் மற்றும் ‘பரமார்த்தம்’ பற்றிய மிகச்சிறந்த அறிவை மனிதகுலம் பெற்றது. கிருஷ்ணரின் பாதத்தில் பணிந்து வணங்கி, கீதா ஜெயந்தியை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் மற்றும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
சத்குரு சதாஃபல்தியோ ஜி அவர்கள், 'விஹங்கம் யோகத்தை' மக்களிடம் கொண்டு செல்ல சமுதாய எழுச்சிக்காக 'யாகம்' நடத்தினார். அந்த உறுதியின் விதை இவ்வளவு பெரிய ஆலமரமாக இன்று நம் முன் உள்ளது. இன்று, 5101 யாக குண்டங்களைக் கொண்டு, உலக அமைதி வேத மகாயக்ஞம் என்ற கூட்டு யோகப் பயிற்சி முகாமின் வடிவில், அந்த துறவியின் உறுதி நிறைவேற்றப்படுவதை நாம் பார்க்கிறோம்.
நான் சத்குரு சதாபல்டியோ ஜிக்கு தலை வணங்குகிறேன். இந்த பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்து, புதிய விரிவாக்கத்தை அளித்து, இன்று ஒரு பிரமாண்டமான ஆன்மிக பூமியை உருவாக்கி வரும் ஸ்ரீ சுதந்திரதேவ் ஜி மகராஜ் மற்றும் ஸ்ரீ விக்யாந்தேயோ ஜி மகராஜ் ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது தயாரானதும் காசிக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெரும் பரிசாக அமையும்.
நண்பர்களே,
நம் நாடு மிகவும் அற்புதமானது, பாதகமான சூழ்நிலையை மாற்ற ஒரு துறவி அல்லது ஒரு சக்தி இங்கே வந்து இறங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சுதந்திர நாயகன் உலகத்தால் மகாத்மா என்று அழைக்கப்படுகிறார், சுதந்திர அரசியல் இயக்கத்தின் போதும் ஆன்மீக உணர்வு தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தியா இது.
நண்பர்களே,
இங்கு ஒவ்வொரு யோகியும் தமது ஆன்மீக குரு சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு வழிகாட்டுதலை வழங்கியதாக பெருமிதம் கொள்கிறார், மேலும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது சிறையில் அடைக்கப்பட்ட முதல் நபர்களில் சந்த் சதாபால்டியோ ஜியும் ஒருவர்.
நண்பர்களே,
பல நூறு ஆண்டு கால வரலாற்றில், நாட்டை ஒற்றுமையாக வைத்திருந்த நமது சுதந்திரப் போராட்டத்தில் இது போன்ற பல அம்சங்கள் உள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல மகான்கள் இருந்தனர். ஆனால் வரலாற்றில் இது உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை. நாம் அமிர்த மகோத்ஸவம் கொண்டாடும் போது, இந்த பங்களிப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது நமது பொறுப்பு. எனவே இன்று நாடு தனது துறவிகள் மற்றும் குருக்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்து இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. விஹங்கம் யோகா சன்ஸ்தானும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
எதிர்கால இந்தியாவை வலுப்படுத்த நமது மரபுகள், அறிவு மற்றும் தத்துவத்தை விரிவுபடுத்துவது காலத்தின் தேவை. காசி போன்ற நமது ஆன்மீக மற்றும் கலாச்சார மையங்கள் இந்த சாதனைக்கு ஒரு சிறந்த ஊடகமாக மாறும். நமது நாகரிகத்தின் இந்த பண்டைய நகரங்கள் முழு உலகிற்கும் திசை காட்ட முடியும்.
சகோதர சகோதரிகளே,
இன்று லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்துள்ளனர். நீங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை, ஆற்றல் மற்றும் சாத்தியக்கூறுகளை இங்கு கொண்டு வந்துள்ளீர்கள். நீங்கள் காசியை விட்டு வெளியேறும்போது, இங்கிருந்து புதிய எண்ணங்கள், தீர்மானங்கள், ஆசிகள் மற்றும் அனுபவங்களை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். இந்த புனித தலத்தின் அவலநிலை மக்களை ஏமாற்றமடையச் செய்தது. ஆனால் இன்று இந்த நிலை மாறி வருகிறது.
இன்றைக்கு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் மாறியிருக்கும் சூழலை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டினரும் உணர்கிறார்கள். விமான நிலையத்திலிருந்து நகரத்தை அடைய நீண்ட நேரம் ஆவதில்லை. காசி சுற்று சாலை பணியையும் சாதனை நேரத்தில் முடித்துள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வருவதில்லை. பனாரஸுக்குச் செல்லும் பல சாலைகளும் அகலப்படுத்தப்பட்டுள்ளன. பனாரஸுக்கு சாலை மார்க்கமாக வருபவர்களுக்கு இந்த வசதியின் பலனாக வித்தியாசம் தெரியும்.
பாபா விஸ்வநாதரைத் தரிசித்தாலும் அல்லது கங்கை அன்னையின் படித்துறைகளாக இருந்தாலும் நீங்கள் எங்கு சென்றாலும் காசியின் பிரகாசம் தெளிவாகத் தெரியும். காசியில் நிலத்தடி மின் கம்பிகள் அமைக்கப்பட்டு பல லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. நம்பிக்கை மற்றும் சுற்றுலாவுடன், கலை மற்றும் கலாச்சாரமும் இந்த வளர்ச்சியால் பயனடைகிறது.
நண்பர்களே,
நான் காசியில் இருந்தாலும் சரி, தில்லியில் இருந்தாலும் சரி பனாரஸின் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவது எனது முயற்சி ஆகும். நேற்றிரவு 12 மணிக்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் காசியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க வெளியே வந்தேன். அங்கு பலருடன் உரையாடினேன். பழையதைத் தக்கவைத்துக்கொண்டு புதுமையைத் தழுவி, நாட்டிற்கு புதிய திசையை பனாரஸ் அளித்து வருகிறது.
நண்பர்களே,
பனாரஸ் மற்றும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இந்த வளர்ச்சி சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2014-15 உடன் ஒப்பிடும்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2019-20-ம் ஆண்டில், கொரோனா காலத்தில் மட்டும், பாபத்பூர் விமான நிலையம் 30 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், விருப்பம் இருந்தால் மாற்றம் சாத்தியம் என்பதை காசி காட்டியிருக்கிறது.
நமது மற்ற புனிதத் தலங்களிலும் இதே மாற்றம் தெரிகிறது. 2013-ம் ஆண்டு பேரழிவிற்குப் பிறகு கேதார்நாத்திற்கு தற்போது சாதனை எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உருவாகி இளைஞர்களின் கனவுகள் நனவாகி வருகின்றன.
நண்பர்களே,
சுதந்திரப் போராட்டத்தின் போது, சுதேசி மந்திரத்தை சத்குரு வழங்கினார். தற்சார்பு இந்தியா இயக்கத்தை அதே உணர்வில் நாடு தொடங்கியுள்ளது. உள்ளூர் வர்த்தகம், வணிகம் மற்றும் பொருட்கள் பலப்படுத்தப்படுகின்றன. உள்ளூர் பொருட்கள் உலகமயமாக்கப்படுகின்றன. குருதேவ் யோகாவின் பாதையையும் விஹங்கம் யோகத்தையும் நமக்குக் காட்டினார். யோகா மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதும், இந்தியாவின் யோக சக்தி உலகம் முழுவதும் நிலைபெற வேண்டும் என்பதும் அவரது கனவாக இருந்தது. இன்று, உலகம் முழுவதும் யோகா தினத்தை கொண்டாடுவதையும், யோகாவைப் பின்பற்றுவதையும் பார்க்கும்போது, சத்குருவின் ஆசீர்வாதம் பலனளிப்பதாக உணர்கிறோம்.
நண்பர்களே,
இன்று சுராஜ் (நல்லாட்சி) ஸ்வராஜ்ஜியத்தை (சுயாட்சி) போலவே முக்கியமானது. இவை இரண்டிற்குமான வழி இந்திய அறிவு-அறிவியல், வாழ்க்கை மற்றும் செயல்முறையில் இருந்துதான் வெளிப்படும். நமது கிராமப் பொருளாதாரத்தின் தூணாக ‘கௌ-தன்’ ஐ உருவாக்க நாட்டில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து யோகிகளும் 100-வது மாநாட்டிற்கு இங்கு கூடுவார்கள். இந்த இரண்டு வருட காலம் மிக முக்கியமான காலகட்டம்.
சில தீர்மானங்களை எடுக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தீர்மானங்கள் சத்குருவின் தீர்மானங்கள் நிறைவேறும் வகையிலும், நாட்டின் விருப்பங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகத்துடன் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களாக ஆகும்.
நாம் நம் மகள்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு நம் மகள்களை தயார்படுத்த வேண்டும். ஏழை மகள்களின் திறன் மேம்பாட்டிற்கு அவர்களின் குடும்பத்துடன், வசதி படைத்தவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
மற்றொரு தீர்மானம், தண்ணீரை சேமிக்க வேண்டும். நமது நதிகள், கங்கை மற்றும் அனைத்து நீர் ஆதாரங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நான் முன்பே குறிப்பிட்டது போல், நாடு இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. லட்சக்கணக்கான விவசாய சகோதர சகோதரிகளை ஊக்குவிக்க நீங்கள் அனைவரும் நிறைய உதவலாம்.
நம்மைச் சுற்றியுள்ள தூய்மை மற்றும் சுகாதாரத்திலும் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கடவுளின் பெயரால், நீங்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையான சேவையைச் செய்ய வேண்டும், அது முழு சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்.
இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், ஞானிகளின் ஆசீர்வாதத்துடன் இந்தத் தீர்மானங்கள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும், புதிய இந்தியாவின் கனவுகளை நிறைவேற்ற உதவும் என்றும் நான் நம்புகிறேன்.
இந்த நம்பிக்கையுடன், அனைவருக்கும் மிக்க நன்றி.
ஹர் ஹர் மகாதேவ்!
மிக்க நன்றி!
குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781454
********
(Release ID: 1783580)
Visitor Counter : 176
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam