பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உ.பி. பல்ராம்பூரில் சரயு கால்வாய் தேசியத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

’ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு தேசபக்தருக்கும் பேரிழப்பு’’
‘’நாம் இழந்துள்ள வீரர்களின் குடும்பங்களுடன் நாடு உள்ளது’’
‘’ சிந்தனை நேர்மையாக இருந்தால், பணியும் உறுதியாக இருக்கும் என்பதற்கு சரயு கால்வாய் தேசிய திட்டத்தின் நிறைவே சான்று’’

‘’50 ஆண்டுகளில் சரயு கால்வாய் திட்டத்தில் செய்ததை விட ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் அதிகப் பணிகளை நாங்கள் செய்துள்ளோம். இது இரட்டை எஞ்சின் அரசு. இது இரட்டை எஞ்சின் அரசின் வேகமான பணி’’

Posted On: 11 DEC 2021 3:29PM by PIB Chennai

உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்ராம்பூரில், சரயு கால்வாய்  தேசியத் திட்டத்தை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் முதல் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு மரியாதை செலுத்தினார். அவரது மறைவு, ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு தேசபக்தருக்கும் பேரிழப்பு என்று பிரதமர் கூறினார். ‘’ ஜெனரல் பிபின் ராவத் அவர்கள், நாட்டின் படைகளை தன்னிறைவு பெற்றதாக மாற்ற ஆற்றிய அரும்பணியை நாடு முழுவதும் கண்டது’’ என அவர் கூறினார். இந்தியா கவலையில் ஆழ்ந்துள்ள போதிலும், வேதனையால் பாதிப்புக்குள்ளான நிலையிலும், நமது வேகத்தையோ, முன்னேற்றத்தையோ நிறுத்திக்கொள்ளவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியா நின்று விடாது. நாட்டின் ஆயுதப்படைகள் தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகள் மூன்று படைகளின் ஒத்துழைப்புடன் வலுப்படும். நாம் தொடர்ந்து முன்னேறுவோம். வரும் நாட்களில் ஜெனரல் பிபின் ராவத், இந்தியா புதிய உறுதியுடன் முன்னேறுவதைக் காணுவார். நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை முன்னேற்றும் பணி, எல்லைப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணி தொடரும் என்று அவர் கூறினார். உத்தரப்பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த புதல்வர் குரூப் கேப்டன் வருண் சிங்கின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.’’அவரது உயிரைக்காப்பாற்றுமாறு அன்னை பாதேஸ்வரியை நான் பிரார்த்திக்கிறேன். வருண் சிங் அவர்களின் குடும்பத்தினருடன் நாடு இன்று உள்ளது. நாம் இழந்த வீரர்களுடைய குடும்பத்தினருடனும் நாடு உள்ளது’’ என்று பிரதமர் கூறினார்.

நாட்டின் ஆறுகளின் தண்ணீர் முறையாகப் பயன்படுத்தப்படுவதால், விவசாயிகளின் வயல்களில் போதிய தண்ணீர் பாய்கிறது என்று கூறிய பிரதமர், இது அரசின் உயர் முன்னுரிமைகளில் ஒன்று என்றார். சிந்தனை நேர்மையாக இருந்தால், பணியும் உறுதியாக இருக்கும் என்பதற்கு சரயு கால்வாய் தேசிய திட்ட நிறைவேற்றம்  சான்றாக உள்ளது  என்றார். .

இந்தத் திட்டத்தின் பணிகள் தொடங்கிய போது, அதன் செலவு மதிப்பீடு வெறும் ரூ.100 கோடிதான் என்று பிரதமர் கூறினார். இன்று சுமார் ரூ.10 ஆயிரம் கோடிகளைச் செலவழித்து அது நிறைவேற்றப்பட்டுள்ளது. முந்தைய அரசுகளின் புறக்கணிப்பால், நாடு 100 மடங்கு பணத்தை ஏற்கனவே அளித்துள்ளது. ‘’ இது அரசின் பணமாக இருக்கும் நிலையில் , நான் எதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்ற  சிந்தனை நாட்டின் சமன்பாடான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய இடையூறாகும். இந்த சிந்தனை சரயு கால்வாய் திட்டத்தையும் தொங்கலில் விட்டது’’.

 ‘’ 50 ஆண்டுகளில் சரயு கால்வாய் திட்டத்தில் செய்ததை விட ஐந்து ஆண்டுகளுக்கும்  குறைவான காலத்தில் அதிகப் பணிகளை நாங்கள் செய்துள்ளோம். இது இரட்டை எஞ்சின் அரசு. இது இரட்டை எஞ்சின் அரசின் வேகமான பணி. திட்டத்தைக் குறித்த காலத்திற்குள் முடிப்பதே எங்களது முன்னுரிமை’’ என பிரதமர் கூறினார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த திட்டங்களான பான் சாகர் திட்டம், அர்ஜூன் சகாயக் பாசன திட்டம், எய்ம்ஸ் மற்றும் கோரக்பூர் உர ஆலை ஆகியவற்றை இரட்டை எஞ்சின் அரசு நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்த அரசின் அர்ப்பணிப்புக்கு கென்-பெட்வா இணைப்பு திட்டம் ஒரு எடுத்துக்காட்டு என அவர் கூறினார். ரூ.45,000 கோடி திட்டத்துக்கு அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. புந்தேல்காண்ட் பிராந்தியத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும். முதல் முறையாக, சிறு விவசாயிகள் அரசின் திட்டங்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றனர் என பிரதமர் கூறினார். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி, மீன் வளம், பால் வளம், தேனீ வளர்ப்பு, எத்தனால் வாய்ப்புகள் ஆகியவை மாற்று வருமான வாய்ப்புகளுக்காக  எடுக்கப்பட்டு வரும்  சில நடவடிக்கைகள் . கடந்த நான்கரை ஆண்டுகளில், உத்தரப்பிரதேசத்தில் இருந்து மட்டும் ரூ.12,000 கோடி மதிப்பிலான எத்தனால் வாங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் வேளாண்மை குறித்து டிசம்பர் 16-ம்தேதி ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வலுவான வீடுகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களில் வழங்கப்பட்டுள்ளதை  அவர் சுட்டிக்காட்டினார். ஸ்வமித்வா திட்டத்தின் பயன்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். 

இந்த கொரோனா காலத்தில், எந்த ஏழையும் பட்டினியுடன் தூங்கக்கூடாது என்று உண்மையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று கூறிய பிரதமர், இப்போது வரை, பிஎம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், இலவச ரேசன் வழங்குவது ஹோலி பண்டிகை காலத்துக்குப்  பிறகும்  நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

முன்பு மாபியா பாதுகாக்கப்பட்டதாகவும் , இன்று அது துடைத்தெறியப் பட்டிருப்பதாகவும்  குறிப்பிட்ட பிரதமர், இப்போது வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது என்றார். முன்பு வலுத்தவர்கள் வளர்ச்சியடைந்தனர். இன்று, யோகி அரசில், ஏழைகள், அடிமட்டத்தில் உள்ளவர்கள், பிற்படுத்தப்படோர், பழங்குடியினருக்கு  அதிகாரமளிக்கும்  பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால்தான் உ.பி மக்கள்,வேறுபாடு கண்கூடாகத் தெரிகிறது என்கின்றனர். முன்பு, மாபியாக்கள் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர், இன்று அந்த ஆக்கிரமிப்புகளை யோகி அவர்கள் புல்டோசர் கொண்டு அகற்றியுள்ளார். அதனால்தான்  வேறுபாடு கண்கூடாகத் தெரிகிறது என்று உ.பி மக்கள் கூறுவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

                                                                  ***************

 

 


(Release ID: 1780473) Visitor Counter : 308