நிதி அமைச்சகம்

“இணைந்து மீளுதல், வலுவாக மீளுதல்” குறித்த ஜி-20 கருத்தரங்கில் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்

Posted On: 09 DEC 2021 2:29PM by PIB Chennai

ஜி-20-ன் தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தோனேஷியாவால் பாலியில் நடத்தப்பட்ட ஜி-20 சர்வதேசக் கருத்தரங்கில் புதுதில்லியிலிருந்து மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இணையவழி கலந்து கொண்டார்.

இணைந்து மீளுதல், வலுவாக மீளுதல்என்ற இந்த ஆண்டுக்கான ஜி-20-ன் மையப்பொருளில் பேசிய நிதியமைச்சர், வலுவான, நீடித்த, சமச்சீரான, அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய பொருளாதாரத்தின் மீட்சி குறித்து வலியுறுத்தினார். அனைத்து நாடுகளின் கூட்டான முன்னேற்றத்தை உறுதி செய்வது மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கை அடைவதற்குப் பல நாடுகளைக் கொண்ட அமைப்பின் பங்களிப்பும், கூட்டான செயல்பாடும் முக்கியமானது என்று அவர் கூறினார். உலகளாவிய மீட்சியின் பாதையில் உதவியாக இருப்பதற்கு அனைவரையும் உட்படுத்துதல், முதலீடு, புதிய கண்டுபிடிப்பு, நிறுவனங்கள் முக்கியமானவை என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

குறைந்த செலவில் சம அளவில் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்தல், சிகிச்சை முறையில் உள்ள வேறுபாடுகளை சரிசெய்தல் ஆகியவை உலகளாவிய பொருளாதார மீட்சியில் முக்கியமானதாகக் காண வேண்டும் என்பதையும் நிதியமைச்சர் வலியுறுத்தினார். இந்தச் சூழலில், இந்தியா இதுவரை 1.25 பில்லியனுக்கும் கூடுதலாக தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியிருப்பதையும் உலகளாவிய செயல்பாட்டுக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், மானிய வழிமுறை உட்பட 90-க்கும் அதிகமான நாடுகளுக்கு 72 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி  டோஸ்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதையும் திருமதி. நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.

அரசுகளின் முயற்சிகளை மறுகட்டமைப்பு செய்வதில் சுற்றுச்சூழல்  பாதுகாப்புள்ள முதலீடுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை வலியுறுத்திய திருமதி. சீதாராமன், வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கிய முயற்சிகளை வேகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் பருவநிலை மாற்ற ஈட்டு நிதி, சூழல் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை கிடைக்கச் செய்வது ஜி-20 அமைப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



(Release ID: 1779774) Visitor Counter : 185