பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்


""உலகின் மருந்தகம்" என்று சமீப காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது"

"நாங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நல்வாழ்வை நம்புகிறோம். மேலும், கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றின் போது இந்த உணர்வை முழு உலகிற்கும் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்”

“தொழில்துறையை உயரத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளனர். "டிஸ்கவர் அண்ட் மேக் இன் இந்தியா"வுக்கு இந்த வலிமையை பயன்படுத்த வேண்டும்.

"தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கான முக்கிய மூலப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்தியா வெல்ல வேண்டிய ஒரு துறை இது”

“இந்தியாவில் சிந்தித்து, இந்தியாவில் கண்டுபிடித்து, உலகத்திற்காக இந்தியாவில் உற்பத்தி செய்யுமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.

உங்களது உண்மையான வலிமையைக் கண்டறிந்து உலகிற்கு சேவை செய்யுங்கள்"

Posted On: 18 NOV 2021 4:45PM by PIB Chennai

மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மருந்துத் துறை மீதான கவனத்தை பெருந்தொற்று அதிகரித்துள்ளது என்றார். வாழ்க்கைமுறை, அல்லது மருந்துகள், மருத்துவ தொழில்நுட்பம் அல்லது தடுப்பூசிகள் என எதுவாக இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதாரப் பாதுகாப்பின் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய மருந்துத் துறையும் அதற்கேற்ப முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார். ""உலகின் மருந்தகம்" என்று சமீப காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது", என்று திரு மோடி கூறினார்.

ஆரோக்கியம் பற்றிய நமது வரையறை எல்லைகளால் வரையறுக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றின் போது இந்த உணர்வை முழு உலகிற்கும் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்,” என்று பிரதமர் கூறினார். ​​பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் 150 நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்தோம். கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு 65 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை இந்த ஆண்டு ஏற்றுமதி செய்துள்ளோம்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

மருந்து கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான மருத்துவ சாதனங்களில் இந்தியாவை முன்னோடியாக மாற்றும் புதுமைக்கான சூழலியலை உருவாக்க பிரதமர் விருப்பம் தெரிவித்தார். அனைத்து பங்குதாரர்களுடனுனான விரிவான ஆலோசனையின் அடிப்படையில் கொள்கை தலையீடுகள் செய்யப்படுகின்றன என்றார் அவர். தொழில்துறையை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெரிய குழுவை இந்தியா கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். "டிஸ்கவர் அண்ட் மேக் இன் இந்தியா"வுக்கு இந்த வலிமையை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவது குறித்து பிரதமர் வலியுறுத்தினார். “இன்று, 1.3 பில்லியன் இந்திய மக்கள் இந்தியாவை தற்சார்பு ஆக்குவதற்குத் உறுதி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கான முக்கியப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்தியா வெல்ல வேண்டிய ஒரு துறை இதுஎன்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் சிந்தித்து, இந்தியாவில் கண்டுபிடித்து, உலகத்திற்காக இந்தியாவில் உற்பத்தி செய்யுமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்,” என்று கூறிய பிரதமர், “உங்களது உண்மையான வலிமையைக் கண்டறிந்து உலகிற்கு சேவை செய்யுங்கள்" என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

                                                                                               ------

 


(Release ID: 1773041) Visitor Counter : 317