பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

82-வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

“ஜனநாயகம் என்பது இந்தியாவுக்கான வெறும் நடைமுறை அல்ல. ஜனநாயகம் இந்திய வாழ்க்கையின் அங்கமாக நமது இயல்பிலேயே ஊறியது”

“இந்திய கூட்டாட்சி முறையில் ‘அனைவருக்குமான முயற்சி’ என்ற பெரிய அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் பங்காற்றுகின்றன”

“கொரோனா தொற்றுக்கு எதிரானப் போராட்டம் ‘அனைவருக்குமான முயற்சி’யின் மிகப் பெரிய உதாரணமாகும்”

“அவையில் ஆண்டுக்கு 3-4 நாட்களை ஒதுக்கி, மக்கள் பிரதிநிதிகள் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தங்கள் வாழ்க்கையின் அம்சத்தை நாட்டுக்கு கூற முன்வர வேண்டும்”

அவையில் தரமான விவாதங்களுக்கான ஆரோக்கியமான நேரம், ஆரோக்கியமான தினத்துக்கு யோசனை தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கும் நாடாளுமன்ற நடைமுறைக்கு தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை வழங்கும்
‘ஒரே நாடு, ஒரே சட்டமன்ற தளம்’ என்பதை முன்மொழிந்துள்ளார்

Posted On: 17 NOV 2021 11:37AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி 82-வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் இன்று காணொலி மூலம் உரையாற்றினார். மக்களவைத் தலைவர், இமாச்சலப்பிரதேச முதலமைச்சர், மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்றவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவுக்கு ஜனநாயகம் வெறும் நடைமுறை அல்ல என்றார். இந்திய வாழ்க்கையின் அங்கமான ஜனநாயகம் நமது இயல்பிலேயே ஊறியது. “வரும் ஆண்டுகளில், அசாதாரணமான இலக்குகளை அடையும் வகையில் நாட்டை புதிய உச்சத்திற்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். ‘அனைவருக்குமான முயற்சி-யின் மூலமே இந்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற முடியும். ஜனநாயகத்தின் கூட்டாட்சி முறையில், நாம் ‘அனைவருக்குமான முயற்சிபற்றி பேசும்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பங்கு இதற்கு பெரிய அடிப்படையாகும்என்று அவர் வலியுறுத்தினார். ‘அனைவருக்குமான முயற்சி’-யின் முக்கியத்துவம் பற்றி தொடர்ந்த பிரதமர், வடகிழக்குப் பகுதியின் மிக நீண்டகால பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருந்தாலும் அல்லது பல பத்தாண்டுகளாக தடைப்பட்டிருந்த அனைத்துப் பெரிய மேம்பாட்டுத் திட்டங்களை முடிப்பதாக இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் இது போன்ற பல பணிகள் நாட்டில் முடிக்கப்பட்டுள்ளன. அனைவரது முயற்சியாலும் இது செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் ‘அனைவருக்குமான முயற்சி’ –க்கு மிகப் பெரிய உதாரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நமது சட்டமன்ற அவைகளின் பாரம்பரியங்களும், நடைமுறைகளும் இந்தியவின் இயல்பாக இருக்க வேண்டுமென்று பிரதமர் வலியுறுத்தினார். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இந்திய உணர்வை வலுப்படுத்த அரசு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். “மிக முக்கியமாக அவையில் நமது தனிப்பட்ட நடத்தை இந்திய மாண்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் இது பொறுப்பாகும்என்று அவர் கூறினார்.

நமது நாடு முற்றிலும் பன்முகத்தன்மைக் கொண்டது என்று கூறிய பிரதமர், “ஆயிரக்கணக்கான ஆண்டு வளர்ச்சியில் பன்முகத்தன்மைக்கு மத்தியில் புனிதமான உடைக்க முடியாத ஒற்றுமை என்ற உணர்வை அளிக்க வேண்டும். பிரிக்க முடியாத இந்த ஒற்றுமை, நமது பன்முகத்தன்மையை செழுமையாக்கி பாதுகாக்கிறது என்று தெரிவித்தார்.

அவையில் ஆண்டுக்கு 3-4 நாட்களை ஒதுக்கி,  மக்கள் பிரதிநிதிகள் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தங்கள் வாழ்க்கையின் அம்சத்தை நாட்டுக்கு கூற முன்வர வேண்டும் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். இதர மக்கள் பிரதிநிதிகள், இதர சமுதாய மக்கள் ஆகியோரிடம் கற்க வேண்டியது ஏராளமாக உள்ளது என அவர் கூறினார்.

தரமான விவாதங்களுக்காக தனி நேரத்தை ஒதுக்கலாமா என்பதை பரிசீலிக்கலாம் என பிரதமர் ஆலோசனை வழங்கினார். அத்தகைய விவாதங்களில் கண்ணியமான பாரம்பரியங்கள் மற்றும் அதன் தீவிரத்தன்மை முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யார் மீதும் அரசியல் ரீதியான அவதூறுகளை கூறக் கூடாது. ஒரு வகையில் அது அவையின் ஆரோக்கியமான நேரமாகவும், ஆக்கப்பூர்வமான தினமாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

‘ஒரே நாடு ஒரே சட்டமன்ற தளம் என்ற யோசனையை பிரதமர் தெரிவித்தார். “நமது நாடாளுமன்ற நடைமுறைக்கு தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை தருவதாக மட்டுமில்லாமல் நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கப் பாடுபடுவதாக அந்த இணையதளம் இருக்க வேண்டுமென்று பிரதமர் கூறினார்.

இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். இதற்கு நாடாளுமன்றவாதிகள், கடமை கடமை கடமை என்ற ஒரே தாரக மந்திரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

*****

 


(Release ID: 1772520) Visitor Counter : 280