பிரதமர் அலுவலகம்

உள்நாட்டுத் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் பிரதமர் உரையாடல்

100 கோடி தடுப்பூசிகள் எனும் மைல்கல்லை இந்தியா கடக்கக் காரணமாக இருந்த தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

கடந்த ஒன்றரை வருடங்களாகக் கற்றுக்கொண்ட சிறந்த நடைமுறைகளை நாடு அமைப்பு ரீதியானதாக ஆக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தல்

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் துடிப்பானத் தலைமைக்கு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் புகழாரம்: இதுவரை இல்லாத அளவிலான அரசு மற்றும் தொழில்துறைக் கூட்டுக்கு பாராட்டு


Posted On: 23 OCT 2021 7:41PM by PIB Chennai

உள்நாட்டுத் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். 

100 கோடி தடுப்பூசிகள் எனும் மைல்கல்லை இந்தியா கடக்கக் காரணமாக இருந்த தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களின் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்ததோடு இந்தியாவின் வெற்றிப் பயணத்தில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்றார். அவர்களது கடின உழைப்பையும் பெருந்தொற்றின் போது அவர்கள் வழங்கிய நம்பிக்கையையும் அவர் பாராட்டினார்.

 கடந்த ஒன்றரை வருடங்களாகக் கற்றுக்கொண்ட சிறந்த நடைமுறைகளை நாடு அமைப்பு ரீதியானதாக ஆக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், சர்வதேச தரங்களுக்கு ஏற்றவாறு நமது செயல்முறைகளை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இது என்றார். தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின் வெற்றியைத் தொடர்ந்து ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை உற்று நோக்குகிறது என்று அவர் கூறினார். எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 தடுப்பு மருந்து தயாரிப்பில் தொடர்ந்து வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் வழங்கியதில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் துடிப்பானத் தலைமைக்கு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுவரை இல்லாத அளவிலான அரசு மற்றும் தொழில்துறை கூட்டுக்குப் பாராட்டு தெரிவித்த அவர்கள், இந்த முயற்சியின் போது செய்யப்பட்ட ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள், எளிமையாக்கப்பட்ட நடைமுறைகள், குறித்த நேரத்தில் ஒப்புதல்கள் மற்றும் அரசின் ஆர்வமிக்க தொடர் ஆதரவைப் பாராட்டினர். பழைய நடைமுறைகளை நாடு பின்பற்றி இருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்கும் என்றும் தற்போது நாம் அடைந்துள்ள தடுப்பூசி வழங்கல் அளவை எட்டியிருக்க முடிந்திருக்காது என்றும் அவர்கள் கூறினர்.

அரசு கொண்டுவந்த ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்களை திரு அடார் பூனாவாலா பாராட்டினார். பெருந்தொற்றுக் காலம் முழுவதும் பிரதமரின் தலைமையை திரு சைரஸ் பூனாவாலா பாராட்டினார். கோவாக்சினுக்கு ஒப்புதல் அளித்ததற்காகவும்  அதன் உருவாக்கத்தில் அவரது தொடர் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்திற்கும் பிரதமருக்கு டாக்டர் கிருஷ்ணா எல்லா நன்றி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொது சபையில் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசிப் பற்றி பேசியதற்காக பிரதமருக்கு திரு பங்கஜ் பட்டேல் நன்றி தெரிவித்தார். தடுப்பூசி மைல்கல்லை நாடு எட்ட உதவியாக இருந்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை திருமிகு மகிமா தட்லா பாராட்டினார். தடுப்பூசி தயாரிப்பில் புதுமைகள் மற்றும் ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து டாக்டர் சஞ்சய் சிங் பேசினார். இந்த முயற்சி முழுவதும் அரசு மற்றும் தொழில்துறைக்கு இடையே நீடித்தக் கூட்டுறவை திரு சதீஷ் ரெட்டி பாராட்டினார். பெருந்தொற்றின் போது அரசின் தொடர் தகவல் தொடர்பை டாக்டர் ராஜேஷ் ஜெயின் புகழ்ந்தார்.

 இந்திய சீரம் நிறுவனத்தை  சேர்ந்த திரு சைரஸ் பூனாவாலா மற்றும் திரு அடார் பூனாவாலா, பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் டாக்டர் கிருஷ்ணா எல்லா மற்றும் திருமிகு சுசித்ரா எல்லா, சைடஸ் காடிலா  நிறுவனத்தைச் சேர்ந்த திரு பங்கஜ் பட்டேல் மற்றும் டாக்டர் ஷெர்வில் பட்டேல், பயாலஜிக்கல் ஈ நிறுவனத்தைச் சேர்ந்த திருமிகு மகிமா தட்லா மற்றும் திரு நரேந்தர் மண்டேலா, ஜெனோவா பயோ பார்மாசுட்டிகல்ஸ் லிமிடெட்டைச் சேர்ந்த டாக்டர் சஞ்சய் சிங் மற்றும் திரு சதீஷ் ரமன்லால் மேத்தா, டாக்டர் ரெட்டிஸ் லேபைச் சேர்ந்த திரு சதீஷ் ரெட்டி மற்றும் தீபக் சப்ரா, பனாக்கியா பயோடெக் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஹர்ஷத் ஜெயின் ஆகியோர் இந்த உரையாடலில் கலந்து கொண்டனர். மத்திய சுகாதார அமைச்சர், சுகாதார இணை அமைச்சர், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

*****************



(Release ID: 1766017) Visitor Counter : 261