பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

பிரதமரின் விரைவுச்சக்தி தேசியப் பெருந்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமரின் விரைவுச்சக்தி தேசியப் பெருந்திட்டம் மூன்றடுக்கு அமைப்பு மூலம் கண்கானிக்கப்படும். அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் அதிகாரமளிக்கப்பட்டச் செயலாளர்கள் குழு அமைக்கப்படும்

பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் வலையமைப்புத் திட்டமிடல் பிரிவுத் தலைவர்கள் விடுத்தக் கோரிக்கையின் பேரில் பன்முக வலையமைப்புத் திட்டமிடல் குழு அமைக்கப்படும்

வலையமைப்புத் திட்டமிடல் குழுவிற்கு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சரக்குப்போக்குவரத்துப் பிரிவு தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கும்

பிரதமரின் விரைவுச்சக்திப் பெருந்திட்டம், கட்டமைப்புத் திட்டமிடலில் அமைச்சகங்களுக்கிடையேயும், துறைகளுக்கிடையேயுமான ஒத்துழைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்

வளர்ச்சிக்குத் திட்டமிடுவதற்கான நமது அனுகுமுறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சமிக்ஞை

ஆதாரங்கள் மற்றும் திறமைகளை முழுமையாக பயன்படுத்துவதை உறுதிச் செய்வதுடன், செயல்திறனை அதிகரிப்பதோடு கழிவுகளையும் குறைக்கும்

Posted On: 21 OCT 2021 3:23PM by PIB Chennai

பிரதமரின் விரைவுச்சக்தி தேசியப் பெருந்திட்டத்திற்கான, அமைப்பு ரீதியான நடைமுறைகளை வெளியிட்டு, அதனை செயல்படுத்தவும் கண்கானிக்கவும் பன்முக இணைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கான நடைமுறைகளுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட அம்சங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பன்முனைப் போக்குவரத்து இணைப்பு வசதிக்கான பிரதமரின் விரைவுச்சக்தி தேசிய பெருந்திட்டம் பிரதமரால் 13 அக்டோபர் 2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்த, அதிகாரமளிக்கப்பட்டச் செயலாளர்கள் குழு, வலையமைப்பு திட்டமிடல் குழு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புப் பிரிவு போன்றவை தேவையானத் தொழில்நுட்பப் போட்டித்தன்மையுடன் உருவாக்கப்படும்.

மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்டச் செயலாளர்கள் குழு, 18 அமைச்சகங்களின் செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருப்பதுடன் சரக்குப் போக்குவரத்துப் பிரிவின் தலைவர் இதன் உறுப்பினர் மற்றும் அமைப்பாளராக செயல்படுவார். அதிகாரமளிக்கப்பட்டச் செயலாளர்கள் குழு, பிரதமரின் விரைவுச்சக்தி தேசிய பெருந்திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து கண்காணிப்பதுடன் மேம்பட்ட சரக்குப் போக்குவரத்தையும் உறுதி செய்யும். தேசிய பெருந்திட்டத்தில் பின்னாளில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை வகுக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பணிகளை ஒருங்கிணைப்பதற்கான உறுதியான விதிமுறைகளையும் இக்குழு வகுப்பதோடு வளர்ச்சிக்கான பல்வேறு கட்டமைப்புப் பணிகள், ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தில் ஒரு அம்சமாக இடம் பெறுவதையும் உறுதி செய்யும். தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறுக்கீட்டுத் தேவைகளையும் இக்குழு கவனிக்கும். எஃகு, நிலக்கரி, உரத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் தேவைக்கேற்ப, அதிக அளவிலான சரக்குப் போக்குவரத்தைத் திறம்பட கையாள்வதற்கான நடவடிக்கைகளையும் இக்குழு மேற்கொள்ளும்.

கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் அமைச்சகங்களுக்கான வலையமைப்புத் திட்டமிடல் பிரிவின் தலைவர்களைக் கொண்ட வலையமைப்புத் திட்டமிடல் குழுவிற்கானச் செயல்பாட்டு வரம்பு, உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றிற்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், வலையமைப்புகளை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைப்பதில் உள்ளச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு பகுதியும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கானப் பணிகள் இரண்டு அமைப்புகளால் மேற்கொள்ளப்படுவதைத் தவிர்ப்பதுடன் குறு-திட்டமிடல் மூலம் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பது பற்றி நடவடிக்கை எடுக்க தொழில்நுட்ப ஒத்துழைப்புப் பிரிவு ஒன்றை அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் குழுவின் கட்டமைப்பிற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்குழு விமானப் போக்குவரத்து, கடல்சார், பொதுப் போக்குவரத்து, ரயில், சாலை & நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் போன்ற பல்வேறு கட்டமைப்புத்துறைகளின் நிபுணர்களை உள்ளடக்கியதாக இருக்கும். நகர்ப்புற & போக்குவரத்து திட்டமிடல், கட்டமைப்புப் பணிகள் மின்சாரம், எரிவாயுக் குழாய், புள்ளி விபர பகுப்பாய்பு போன்றத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இதில் இடம்பெறுவர்.

பிரதமரின் விரைவுச்சக்தி தேசிய பெருந்திட்டம் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்த்து, ஒட்டுமொத்த மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடலை மேம்படுத்தி, திட்டப்பணிகளின் செயலாக்கத்தை விரைவுபடுத்துவதுடன் பல்வகைப் போக்குவரத்து மற்றும் தொலைதூரப் பகுதிகளை இணைக்கும் திட்டங்களும் மேற்கொள்ளும். இது சரக்குப்போக்குவரத்துச் செலவை பெருமளவுக் குறைக்க உதவும். நுகர்வோர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வணிகத்துறையினருக்கு பெருமளவிலான பொருளாதார ஆதாயத்தையும் அளிக்கும்.

இந்த அனுமதி மூலம் பிரதமரின் விரைவுச்சக்தித் திட்டம் செயல்பாட்டிற்கு வருவது விரைவுபடுத்தப்படுவதுடன், நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடல் கட்டமைப்பையும் உருவாக்கும்.

இந்த அனுமதி மூலம் பிரதமரின் விரைவுச்சக்தித் திட்டம் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்து, பல்வகை சரக்குப் போக்குவரத்தையும் ஒருங்கிணைக்க உதவும். பல்வகை இணைப்பிற்கான இத்திட்டம், இந்திய மக்கள், இந்திய தொழிற்சாலைகள், இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய விவசாயிகளுக்கான மத்திய அரசின் முழுமையான ஆளுகையை உறுதி செய்யும்.

*********


(Release ID: 1765499) Visitor Counter : 349