தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் உரையாற்றினார்

Posted On: 25 SEP 2021 11:08AM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தை ஒட்டி நியூயார்க்கில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் மற்றும் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் உரையாற்றினார். லடாக்கின் லேவில் இருந்து இந்த வட்ட மேசை விவாதத்தில் அமைச்சர் பங்கேற்றார்.

கொவிட் பெருந்தொற்றின் போது இந்தியா எதிர்கொண்ட தவறான தகவல்களின் தாக்குதல் குறித்து பேசிய அமைச்சர், "தொற்றுநோயை தொடர்ந்து இரட்டை தகவல் சவாலை உள்நாட்டில் இந்தியா எதிர்கொண்டது. ஒரு பக்கம் நகர்ப்புற மக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் திறன்பேசி செயலிகள் மூலம் வேகமாக பரவும் தவறான மற்றும் பொய் தகவல்களின் சவாலை எதிர்கொண்டனர். மறுமுனையில், கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் பல மொழிகளை பேசும் மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதில் சவால் ஏற்பட்டது,” என்றார்.

பெருந்தொற்றுக்கு இந்தியா விரைந்து எதிர்வினை ஆற்றியது பற்றி தெரிவித்த திரு தாக்கூர், "அறிவியல் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் இந்திய அரசு இந்த சவால்களுக்கு விரைவான மற்றும் தெளிவான தகவல் தொடர்பு மூலம் பதிலளித்தது. தவறான தகவல், பொய் செய்திகள் மற்றும் கட்டுக்கதைகளுக்கு எதிரான இந்திய எதிர்வினையின் முக்கிய கொள்கை அம்சாக உண்மையான செய்திகளை தொடர்ந்து உறுதிப்படுத்துதல் விளங்கியது. தொலைக்காட்சி செய்தி, அச்சு, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரவலாகப் பரப்பப்பட்ட கொவிட் குறித்த தினசரி செய்தியாளர் சந்திப்புகளை நாங்கள் நடத்தினோம்,” என்றார்.

இந்தியாவின் பத்திரிகை தகவல் அலுவலகம் அதன் பல்வேறு தளங்கள் மூலம் கட்டுக்கதைகள் மற்றும் பொய் செய்திகளை அகற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டது. பல்வேறு விஷயங்களை இந்திய மக்களுக்குத் தெரியப்படுத்த நாங்கள் நகைச்சுவையின் சக்தியைப் பயன்படுத்தினோம்,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

"வெளிப்படையான, சரியான நேரத்தில் மற்றும் நம்பிக்கைக்குரிய தகவல்களின் ஓட்டம் ஜனநாயகத்தை மேம்படுத்துகிறது மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க மக்களை அனுமதிக்கிறது. இந்தியா இதை உறுதியாக நம்புகிறது,” என்று அமைச்சர் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757951

*****************



(Release ID: 1758106) Visitor Counter : 196