பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு கல்யாண் சிங்கின் மறைவு குறித்து ஊடகங்களிடம் பிரதமர் தெரிவித்த கருத்து

திரு கல்யாண் சிங்கிற்கு பிரதமர் இறுதி மரியாதை செலுத்தினார்
மக்களின் நல்வாழ்விற்காக தொடர்ந்து பணியாற்றிய தலைவரான திரு கல்யாண் சிங் அவர்கள், இந்தியா முழுவதிலும் உள்ள மக்களால் எப்போதும் நேசிக்கப்படுவார்: பிரதமர்

Posted On: 22 AUG 2021 4:27PM by PIB Chennai

நம் அனைவருக்கும் இது ஒரு மிகவும் சோகமான தருணம். திரு கல்யாண் சிங் அவர்களின் பெற்றோர், அவருக்கு கல்யாண் சிங் என்று பெயர் சூட்டினார்கள். அவரது பெற்றோர் வழங்கிய பெயருக்கு ஏற்றவாறு தமது வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக தமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவர் அர்ப்பணித்ததோடு, அதனை தமது வாழ்க்கையின் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார். பாரதிய ஜனதா கட்சி, பாரதிய ஜன சங் மற்றும் நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக தம்மை அர்ப்பணித்தார்.

திரு கல்யாண் சிங் அவர்களின் பெயர், இந்தியா முழுவதும் நம்பிக்கையின் மறு பெயராக மாறியது. முடிவுகளை எடுப்பதில் அவர் தீர்மானமாக இருந்ததுடன் தமது வாழ்க்கை முழுவதும் மக்களின் நல்வாழ்விற்காக தொடர்ந்து கடுமையாக உழைத்தார். சட்டமன்ற உறுப்பினராகவும், அரசு பொறுப்பிலும், ஆளுநராகவும் தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளில் பிறருக்கு உந்துசக்தியாக அவர் விளங்கினார். பெருவாரியான மக்களின் நம்பிக்கை சின்னமாக அவர் மாறினார்.

பெருமதிப்பிற்குரிய ஆளுகையையும் தலைசிறந்த தலைவரையும் நாடு இழந்துள்ளது. அவரது கொள்கைகளைப் பின்பற்றி, அவர் கண்ட கனவுகளை நனவாக்கும் வகையில் அவரது இழப்பை ஈடுசெய்யும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கு வழங்கவும் பகவான் ராமரை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவரது இழப்பால் துயரடைந்துள்ளவர்களுக்கும், அவரது மாண்புகள், கொள்கைகள் மற்றும் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பகவான் ராமர் வலிமையை வழங்கட்டும்.

குறிப்பு: இது, பிரதமர் கருத்தின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது கருத்தை இந்தியில் தெரிவித்திருந்தார்.

 

****


(Release ID: 1748231) Visitor Counter : 209