இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் விருதுகளை 22 பேருக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் வழங்கினார்

Posted On: 12 AUG 2021 2:56PM by PIB Chennai

2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் புதுதில்லியிலுள்ள விக்யான் பவனில் இன்று வழங்கினார். சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி நடைபெற்ற  நிகழ்ச்சியில், வேளாண்-தொழில்நுட்ப சவாலான சால்வ்ட் 2021-ல் வெற்றி பெற்ற 10 இளம் தொழில்முனைவோர் குழுக்களையும் அவர் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் தாகூர், “ நா சபையால் அறிவிக்கப்பட்ட சர்வதேச இளைஞர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது நாட்காட்டியில் உள்ள வெறும் நாளல்ல. இந்தியாவின் நிகழ்காலமாகவும் எதிர்காலமாகவும் இளைஞர்கள் விளங்குகிறார்கள். தற்சார்பு புதுமைகளின் காலத்தில், சிந்தனைகள் மற்றும் புதுமைகளின் ஊக்க சக்திகளாக அவர்கள் விளங்குகிறார்கள்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “உணவு அமைப்புகளை மாற்றியமைத்தல் மீது இந்த வருட சர்வதேச இளைஞர் தினம் கவனம் செலுத்துகிறது. இளைஞர்கள் தலைமையிலான வேளாண்-தொழில்நுட்ப புதுமைகள் இத்துறையில் புதிய முன்னேற்றங்களை வழிநடத்துகின்றன. இளைஞர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பு இல்லாமல் இத்தகைய சர்வதேச முயற்சியில் வெற்றியை அடைய முடியாது,” என்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தொழில்முறை கல்வி, திறன் வளர்த்தல், புது நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட் அப்) நிதி அளித்தல் என நமது இளம் குடிமக்களுக்கான பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய திறன்களை கொண்டவர்களாக இந்தியாவின் இளைஞர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். தேசிய இளைஞர் விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இளைஞர்களை திறம்பட செயலாற்ற வைக்க ஊக்குவிப்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்,” என்று அமைச்சர் கூறினார்.

தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கான பிரிவுகளில் மொத்தம் 22 தேசிய இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டன. 2017-18-ம் ஆண்டுக்கான 14 விருதுகளில் தனிநபர் பிரிவில் 10-ம், அமைப்புகள் பிரிவில் நான்கும் வழங்கப்பட்டன. 2018-19-ம் ஆண்டுக்கான எட்டு விருதுகளில் தனிநபர் பிரிவில் ஏழும் அமைப்புகள் பிரிவில் ஒன்றும் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளின் கீழ் தனிநபருக்கு ஒரு பதக்கம், ஒரு சான்றிதழ் மற்றும் ரூ 1 லட்சம் ரொக்க பணமும், அமைப்புகளுக்கு ரூ 3 லட்சம் ரொக்க பணமும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745122

 

----


(Release ID: 1745234) Visitor Counter : 270