பிரதமர் அலுவலகம்
உஜ்வாலா 2.0 திட்டத்தை உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவிலிருந்து பிரதமர் தொடங்கி வைத்தார்
புந்தேல்கண்ட் மண்ணின் மற்றொரு மைந்தரான மேஜர் தியான் சந்த் அல்லது தாதா தியான் சந்த்தை நினைவு கூர்ந்தார்
முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வை உஜ்வாலா திட்டம் ஒளிமயமாக்கியுள்ளது: பிரதமர்
சகோதரிகளின் சுகாதாரம், வசதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டம் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது: பிரதமர்
வீடு, மின்சாரம், தண்ணீர், கழிவறை, எரிவாயு, சாலைகள், மருத்துவம் மற்றும் பள்ளி போன்ற அடிப்படைத் தேவைகள் பல தசாப்தங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்கலாம்: பிரதமர்
லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உஜ்வாலா 2.0 திட்டம் அதிகபட்சப் பயனை அளிக்கும்: பிரதமர்
எரிபொருளில் தன்னிறைவு அடைவதற்கும், நாடு வளர்ச்சி பெறுவதற்கும், கிராமங்கள் மேம்படுவதற்குமான ஆதாரமாக உயிரி எரிபொருள் விளங்குகிறது: பிரதமர்
திறமை வாய்ந்த இந்தியாவின் உறுதியை அடைவதில் சகோதரிகள் சிறப்பான பங்களிப்பை வழங்கவிருக்கிறார்கள்: பிரதமர்
Posted On:
10 AUG 2021 3:24PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ரக்க்ஷா பந்தன் பண்டிகையையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தின் சகோதரிகளுடன் உரையாடுவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வை உஜ்வாலா திட்டம் ஒளிமயமாக்கியுள்ளதாக அவர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான மங்கள் பாண்டேவின் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் பாலியாவிலிருந்து 2016-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இன்று, உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் பதிப்பும் உத்தரப் பிரதேசத்தின் வீரம் விளைந்த பூமியான மஹோபாவிலிருந்து தொடங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். புந்தேல்கண்ட் மண்ணின் மற்றொரு மைந்தரான மேஜர் தியான் சந்த் அல்லது தாதா தியான் சந்த்தை அவர் நினைவு கூர்ந்தார். நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருது, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று தற்போது அழைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் ஈடுபட ஆர்வம் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு, இது ஊக்கமளிக்கும் என்றார் அவர்.
வீடு, மின்சாரம், தண்ணீர், கழிவறை, எரிவாயு, சாலைகள், மருத்துவம் மற்றும் பள்ளி போன்ற அடிப்படை தேவைகளைப் பெறுவதற்காக நாட்டு மக்கள் பல தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று பிரதமர் கவலை தெரிவித்தார். இது போன்ற ஏராளமான வசதிகள் பல தசாப்தங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்கலாம். இல்லத்திலிருக்கும் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட்டால் தான் நமது புதல்விகள் வீடு மற்றும் சமையல் அறைகளை விட்டு வெளியேறி, தேச கட்டமைப்பில் விரிவானப் பங்களிப்பை அளிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். எனவே, கடந்த 6-7 ஆண்டுகளில் இதுபோன்ற ஒவ்வொரு தீர்வும் இயக்க கதியில் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் கூறினார். தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிவறைகள் கட்டப்படுவது; பெரும்பாலும் பெண்களின் பெயரில் இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகள் ஏழைக் குடும்பங்களுக்காக அமைக்கப்படுவது; கிராம சாலைகள்; 3 கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருப்பது; ரூ. 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 50 கோடி பேர் பயனடைந்து வருவது; மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பகாலத்தின் போது தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்துக்கு வங்கிகளில் நேரடி பணப் பரிமாற்ற வசதி; கொரோனா காலகட்டத்தில் பெண்களின் ஜன் தன் கணக்குகளில் அரசு செலுத்திய ரூ. 30,000 கோடி; ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் நமது சகோதரிகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் தண்ணீர் போன்ற ஏராளமான நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். இது போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
பெண்களின் சுகாதாரம், வசதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டம் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், 8 கோடி ஏழைகள், பட்டியலினத்தவர், நலிவடைந்தோர், பிற்படுத்தப்பட்டோர்,பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. இந்த இலவச எரிவாயு இணைப்பின் பலன், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உணரப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். உஜ்வாலா திட்டத்தால் சமையல் எரிவாயு உள்கட்டமைப்பு, பன்மடங்கு விரிவடைந்துள்ளது. கடந்த 6-7 ஆண்டுகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான சமையல் எரிவாயு விநியோக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு, 2000 ஆக இருந்த இந்த மையங்களின் எண்ணிக்கை, தற்போது 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 2014- ஆம் ஆண்டு இருந்ததைவிட கடந்த ஏழு ஆண்டுகளில் அதிக எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டதன் வாயிலாக 100% எரிவாயு வழங்கும் இலக்கை அடையும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் கூறினார்.
புந்தேல்கண்ட் உள்ளிட்ட உத்தரப் பிரதேசம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், வேலைக்காக கிராமம் முதல் நகரத்திற்கும், வேறு மாநிலங்களுக்கும் செல்வதாக தொடர்ந்து பேசுகையில் பிரதமர் தெரிவித்தார். அங்கு முகவரி சான்று பிரச்சனையை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அது போன்ற லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு உஜ்வாலா 2.0 திட்டம் அதிகபட்ச நிவாரணத்தை அளிக்கும் என்று அவர் கூறினார். இதுபோன்ற தொழிலாளர்கள், முகவரி சான்றிற்காக இனி ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைய வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர் தொழிலாளர்களின் நேர்மையின் மீது அரசு முழு நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். எரிவாயு இணைப்பை பெறுவதற்காக முகவரி குறித்த சுய வாக்குமூலம் மட்டுமே அளித்தால் போதுமானது.
குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கும் சேவையை அதிகளவில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திரு மோடி மேலும் தெரிவித்தார். குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு, சிலிண்டரை விட விலை குறைவானது என்றும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகளின் பல்வேறு மாவட்டங்களில் இந்த சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். முதல் கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் சுமார் 50 மாவட்டங்களில் 12 லட்சம் வீடுகளுக்கு இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உயிரி எரிபொருளின் பயன்கள் பற்றி பேசிய பிரதமர், உயிரி எரிபொருள் என்பது தூய்மையான எரிபொருள் மட்டுமல்ல, எரிபொருளில் தன்னிறைவு அடைவதற்கும், நாடு வளர்ச்சி பெறுவதற்கும், கிராமங்கள் மேம்படுவதற்குமான முயற்சிகளை விரைவுபடுத்தும் கருவியாகவும் அது செயல்படுகிறது என்று தெரிவித்தார். வீடு மற்றும் பண்ணை கழிவுகளிலிருந்தும், தாவரங்களிலிருந்தும், அழுகிய தானியங்களிலிருந்தும் நமக்குக் கிடைக்கக்கூடிய எரிசக்தி தான் உயிரி எரிபொருள் என்று அவர் மேலும் கூறினார். கடந்த 6-7 ஆண்டுகளில் 10% கலவையை அடையும் இலக்கை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், அடுத்த 4-5 ஆண்டுகளில் 20% கலவை என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு 7000 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் வாங்கப்பட்டது. எத்தனால் மற்றும் உயிரி எரிபொருள் சார்ந்த ஏராளமான நிறுவனங்கள் மாநிலத்தில் நிறுவப்பட்டன. கரும்பு சக்கையில் இருந்து அழுத்தமூப்பட்ட உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் மாநிலத்தின் 70 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. ‘பராளியிலிருந்து’ உயிரி எரிவாயுவை உருவாக்குவதற்காக புதௌன் மற்றும் கோரக்பூரில் ஆலைகள் உருவாக்கப்படுகின்றன.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது முதல் மேம்பட்ட வாழ்க்கை என்ற கனவை நிறைவேற்றுவதை நோக்கி தற்போது நாடு முன்னேறுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். வரும் 25 ஆண்டுகளில் இந்த ஆற்றல் திறனை நாம் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். திறமை வாய்ந்த இந்தியாவின் இந்த உறுதியை நாம் அனைவரும் இணைந்து நிரூபிக்க வேண்டும். சகோதரிகள், இதில் ஓர் சிறப்பான பங்களிப்பை வழங்கவிருக்கிறார்கள் என பிரதமர் குறிப்பிட்டார்.
-----
(Release ID: 1744482)
Visitor Counter : 416
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam