பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்: மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி தொடங்கி வைத்தார்

Posted On: 27 JUL 2021 3:29PM by PIB Chennai

நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பெண்களின் ஒட்டுமொத்த நலனை வலுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஏதுவாகவும், தேசிய மகளிர் ஆணையத்தின் 24 மணி நேர உதவி எண்ணை (7827170170) மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இராணி இன்று தொடங்கி வைத்தார். வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களை காவல்துறை, மருத்துவமனைகள், மாவட்ட சட்டச் சேவை ஆணையகம், உளவியல் சேவைகள் போன்ற தகுந்த அதிகாரிகளுடன் இணைப்பதே இந்த இணைய வழி உதவி எண்ணின் நோக்கமாகும்.

காணொலி வாயிலாக இந்த சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் திருமதி இராணி, தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். எப்போதெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களது அரசும் ஆணையமும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தியை இந்த மின்னணு உதவி எண் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். பெண்களுக்கு உதவும் வகையில், குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்தில் இத்தகைய அபாரமான முயற்சிகளை மேற்கொண்ட ஆணையத்தின் ஒட்டுமொத்த குழுவையும் அமைச்சர் பாராட்டினார். பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு உதவுவதற்கு தேசிய மகளிர் ஆணையமும் பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகமும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமிகு ரேகா ஷர்மா, ஆணையத்தின் தற்போதைய புகார் அமைப்புமுறையை இந்தப் புதிய உதவி எண் வலுப்படுத்துவதுடன், ஆதரவு மற்றும் ஆலோசனை தேவைப்படும் பெண்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் அளிக்கவும் இது உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். பெண்களின் நல்வாழ்விற்காக அயராது உழைக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி, தங்களுக்கு எப்போதும் ஊக்கமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

பயிற்சி பெற்ற நிபுணர்கள், இந்த உதவி எண்ணில் பணிபுரிவார்கள். தில்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து இயங்கும் இந்த உதவி எண்ணை, 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதிலான பெண்கள் அல்லது மகளிர் தொடர்பு கொள்ளலாம். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இந்த மின்னணு உதவி எண் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739451

----


(Release ID: 1739654) Visitor Counter : 355