பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 15 JUL 2021 2:52PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே, ஹர ஹர மகாதேவ்!

நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. காசி மக்களுக்கு வாழ்த்துகள்! மக்களின் துன்பங்களுக்கு முடிவு காட்டும் போலோநாத், அன்னை அன்னபூர்ணா ஆகியோருக்கு தலை வணங்குகிறேன்.

உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, பேரும், புகழும் பெற்று, கடின உழைப்பை மேற்கொண்டுள்ள ஆற்றல் மிக்க முதலமைச்சர் திரு யோகி ஆதித்ய நாத் அவர்களே, மாநில அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, வாரணாசியின்

சகோதர, சகோதரிகளே வணக்கம்.

காசியில் இன்று ரூ.1500 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கவும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் நான் வாய்ப்பு பெற்றுள்ளேன். வாரணாசியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு மகாதேவரின் அருளும், காசி மக்களின் முயற்சிகளுமே காரணமாகும். மிகவும் நெருக்கடியான நேரத்திலும் காசி சோர்வடைவதில்லை என்பதைக் காட்டியுள்ளது.

சகோதர, சகோதரிகளே, கடந்த சில மாதங்கள் நம் அனைவருக்கும், மனித குலம் முழுவதற்கும் மிகுந்த நெருக்கடியான காலமாக இருந்தது. உருமாறிய  பயங்கர உயிர் கொல்லி நோயான கொரோனா முழு வீச்சில் தாக்கியது. ஆனால், காசியும், உத்தரப் பிரதேசமும் இந்த சவாலை முழு ஆற்றலுடன் எதிர்கொண்டன. முன்னெப்போதும் கண்டிராத இரண்டாவது அலையை, உலகின் பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிக மக்களைக் கொண்ட பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம்  தொற்றை எதிர்கொண்டு, அதனை சிறப்பாகக் கையாண்டு பரவலைத் தடுத்துள்ளது. இதனால், உத்தரப் பிரதேச மக்கள் காப்பாற்றப்பட்டு, பெரும் உயிரிழப்பிலிருந்து தப்பியுள்ளனர். இல்லாவிட்டால், மூளைக்காய்ச்சல் நோயால் ஏற்பட்ட பாதிப்பு போல உயிரிழப்பு அதிகரித்திருக்கும்.

முன்பெல்லாம், உத்தரப் பிரதேசத்தில் சிறு சிக்கல் ஏற்பட்டாலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், மன உறுதி இல்லாததாலும், பயங்கர அனுபவங்களைப் பெற நேர்ந்ததுண்டு. இந்த பெருந்தொற்று, 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் உலகம் முழுவதையும் தாக்கிய பேரிடராக மாறியுள்ளது. இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் உத்தரப் பிரதேசம் மேற்கொண்ட முயற்சிகளும், எடுத்த நடவடிக்கைகளும் மிகச்சிறப்பானவையாகும். இதற்காக, காசி மக்கள், நிர்வாகத்தினர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.காசியில் கொரோனாவுக்கு எதிரான பணியில் இரவு, பகலாக செயல்பட்டு ஏற்பாடுகளை செய்திருப்பது மிகப் பெரிய சேவையாகும்.

நான் சில சமயங்களில் நடு இரவில் வெகு நேரத்துக்குப் பின்னர் தொடர்பு கொண்டாலும், அந்த நேரத்திலும் பணியாளர்கள் விழித்திருந்து பணியாற்றியதை நான் எண்ணிப் பார்க்கிறேன்சிக்கலான நாட்களிலும், உங்களது உறுதியை விட்டுக் கொடுக்காமல்  ஓயாமல் பணியாற்றியதால், இன்று உத்தரப் பிரதேசத்தில் நிலைமை மீண்டும் மேம்பட்டுள்ளது.

இன்று அதிக அளவு பரிசோதனை நடைபெறும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. நாட்டிலேயே அதிக தடுப்பூசிகள் போட்ட மாநிலமாகவும் .பி. உள்ளது. ஏழை, நடுத்தரப் பிரிவு மக்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு இலவசமாக இன்று தடுப்பூசி வழங்கி வருகிறது.

சகோதர, சகோதரிகளே, .பி.யில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதாரம், தூய்மை தொடர்பான கட்டமைப்புகள் வருங்காலத்திலும், கொரோனா போன்ற நோய்களை எதிர்த்துப் போரிட வழிவகுக்கும். இன்று, .பி. கிராம சுகாதார மையங்கள், மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைகள் என மருத்துவ கட்டமைப்பில், வரலாறு காணாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், .பி.யில் 12 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன.இன்று இந்த எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பல மருத்துவக் கல்லூரிகள் கட்டுமானத்தில் பல்வேறு நிலைகளில் உள்ளன. இன்று மாநிலத்தில் 550 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாரணாசியில் மட்டும் இன்று 14 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளை அதிகரிக்க மாநில அரசு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட ரூ.23,000 கோடி சிறப்பு தொகுப்பு உத்தரப் பிரதேசத்துக்கு பெரிதும் உதவும்.

நண்பர்களே, பூர்வாஞ்சல் பகுதிக்கு, காசி மிகப் பெரிய மருத்துவ மையமாக மாறிவருகிறது. முன்பு தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் மட்டும் கிடைத்த மருத்துவ சிகிச்சைகள் தற்போது காசியில் கிடைக்கின்றன. இன்று தொடங்கப்பட்ட சில திட்டங்கள், வாரணாசியின் மருத்துவ கட்டமைப்பை மேலும் அதிகரிக்கும். தற்போது காசியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மண்டல கண் மருத்துவமனை ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில், மக்கள் அதி நவீன கண் சிகிச்சைகளைப் பெற முடியும்.

சகோதர, சகோதரிகளே, பழங்கால காசி நகரின் அடையாளத்தை சிதைக்காமல், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே பாலங்கள், பாதாள வயரிங், குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற திட்டங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு இதற்கு முன் இல்லாத வகையில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது கூட ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்கள் மாநிலத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

கங்கை மற்றும் காசியின் தூய்மை மற்றும் அழகு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, பூங்காக்கள் மற்றும் படித்துறைகள் அழகுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஞ்ச்கோஷி மார்க்கை அகலப்படுத்துவது, வாரணாசி காசிபூரில் பாலம் அமைப்பது ஆகியவை பல கிராமங்கள் மற்றும் அதனையொட்டியுள்ள நகரங்களுக்கு உதவும்.

காசி முழுவதும் பொருத்தப்பட்டுள்ள பெரிய எல்இடி திரைகள் மற்றும் படித்துறைகளில் உள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகைகள் பார்வையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த எல்இடி திரைகள் மற்றும் தகவல் பலகைகள், காசியின் வரலாறு, கட்டிடக்கலை, கைவினைப் பொருட்கள், கலை போன்ற தகவல்களை பக்தர்களுக்கு கவரும் வகையில் அளிக்கும்.

நண்பர்களே, காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள கங்கை நதியின் படித்துறையில் நடக்கும் ஆரத்தி ஒளிபரப்பை, நகரத்தில் உள்ள அனைத்து பெரிய திரைகளிலும் காட்ட முடியும். இன்று தொடங்கப்பட்டுள்ள படகு சேவைகள், சுற்றுலாவை ஊக்குவிக்கும் மற்றும் ருத்ராட்ச மையம், இந்நகரத்தின் கலைஞர்களுக்கு உலகத் தரத்திலான தளத்தை அளிக்கும்.

  • , நவீன காலத்திற்கு ஏற்ற மையமாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காசியில் மாதிரி பள்ளி, ஐடிஐ மற்றும் பல நிறுவனங்கள் உள்ளன. சிப்பெட் மையத்தின் திறன் மற்றும் தொழில்நுட்ப உதவி மையம், இப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நாட்டின் முன்னணி முதலீட்டு தலமாக உத்தரப் பிரதேசம் வேகமாக வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வர்த்தகம் செய்வதற்கு சிரமமான இடமாக உத்தரப் பிரதேசம் இருந்தது. தற்போது மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த இடமாக மாறி வருகிறது. சமீபகாலமாக உத்தரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. பாதுகாப்பு வளாகம், பூர்வாஞ்சல் விரைவுச் சாலை, புந்தேல்கண்ட் நெடுஞ்சாலை, கோரக்பூர் நெடுஞ்சாலை, கங்கா விரைவுச் சாலை போன்ற திட்டங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டவையாகும்.

சகோதர, சகோதரிகளே, நாட்டின் வேளாண் கட்டமைப்பை நவீனப்படுத்த ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இது நமது வேளாண் சந்தைகளுக்கும் பயனளிப்பதுடன், நாட்டின் வேளாண் சந்தைகளை நவீனமாக மாற்றுவதிலும் இது மிகப் பெரிய நடவடிக்கையாகும்.

உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பும், திட்டங்கள் தொடங்க திட்டமிடப்பட்டன. ஆனால், அவற்றுக்கு லக்னோவில் தடை விதிக்கப்பட்டது. வளர்ச்சியின் முடிவுகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய, உத்தரப் பிரதேச முதல்வர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

உத்தரப் பிரதேசத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதுஒரு காலத்தில் மாபியா மற்றும் தீவிரவாதம் கட்டுப்பாடின்றி இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறி சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது.

  • , நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சத்துடன் இருந்த நிலை எல்லாம் தற்போது மாறிவிட்டது. இன்று உத்தரப் பிரதேச அரசு, முன்னேற்றம் கண்டு, வளர்ச்சியில் இயங்குகிறது. அதனால், ஊழல் மற்றும் உறவினர்களுக்கு சலுகை காட்டுதல் போன்றவை நடக்கவில்லை. அதனால்தான், உத்தரப் பிரதேசத்தில், திட்டங்களின் பயனை மக்கள் நேரடியாக பெறுகின்றனர். அதனால்தான் இன்று, புதிய தொழிற்சாலைகள் உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்கின்றன, வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

நண்பர்களே, இந்த வளர்ச்சி பயணத்திலும், முன்னேற்றத்திலும், .பி.யின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் பங்குண்டு. உங்களது பங்களிப்பும், ஆசிகளும், மாநிலத்தை புதிய உச்சத்துக்கு கொண்டுச் செல்லும். கொரோனா மீண்டும் வலுப்பெற உத்தரப் பிரதேச மக்கள் அனுமதிக்க கூடாது. இந்தப் பெரும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

 கொரோனா தொற்று பரவல் தற்போது குறைந்திருந்தாலும், கவனக்குறைவாக இருந்தால், மிகப் பெரிய அலையை ஏற்படுத்தி விடும் என்பதை மறந்துவிடலாகாது. ஏராளமான நாடுகளின் அனுபவம் நம் முன்பு உள்ளது. எனவேகொவிட் நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பாபா விஸ்வநாதர், கங்கை அன்னையின் ஆசி நமக்கு உண்டு. இந்த வாழ்த்துக்களுடன், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹர ஹர மகாதேவ்!!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

 

-----
 


(Release ID: 1736431) Visitor Counter : 276