பிரதமர் அலுவலகம்

கொவிட் 19 நிலை குறித்து 6 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

ஒத்துழைப்பு, ஒற்றுமையான நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பிற்காக மாநிலங்களுக்கு பிரதமர் பாராட்டு

அனைத்து வகையான உதவிகளையும் அளித்து வருவதற்காக பிரதமருக்கு முதல்வர்கள் நன்றி

மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது, கவலை அளிக்கிறது: பிரதமர்

பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவை சோதிக்கப்பட்டு, நிரூபணமாகியுள்ள உத்திகள்: பிரதமர்

மூன்றாவது அலை உருவாவதை தடுப்பதற்காக நாம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: பிரதமர்

உள்கட்டமைப்பு வசதிகளில், குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும்: பிரதமர்

கொரோனா இன்னும் நீங்கவில்லை, தளர்வுகளுக்குப் பிந்தைய பழக்கவழக்கங்களின் காட்சிகள் கவலை அளிக்கிறது: பிரதமர்


Posted On: 16 JUL 2021 1:44PM by PIB Chennai

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொவிட் 19 சம்பந்தமான நிலை குறித்து சம்பந்தப்பட்ட முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் அளித்ததற்காக முதலமைச்சர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்கள். தடுப்பூசித் திட்டத்தின் தற்போதைய நிலை பற்றியும், தங்களது மாநிலங்களில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பிரதமரிடம் விளக்கினார்கள். தடுப்பூசித் திட்டத்தின் உத்தி பற்றிய தங்களது கருத்துக்களையும் அவர்கள் வழங்கினார்கள் .

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி பேசிய முதலமைச்சர்கள், எதிர்காலத்தில் பாதிப்பு அதிகரித்தால் அவற்றை சமாளிப்பதற்கான தங்களது பரிந்துரைகளையும் முன்வைத்தனர். கொவிட் தொற்றுக்குப் பிறகு நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அதுபோன்ற நிலைகளில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர். தொற்றின் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தங்களது சிறப்பான செயல்பாடுகளை அளித்து வருவதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

ஜூலை மாதத்தில் ஏற்பட்ட மொத்த பாதிப்புகளில் சுமார் 80%  இந்த 6 மாநிலங்களில் பதிவாகி இருப்பதாகவும், இவற்றில் ஒரு சில மாநிலங்களில் தொற்று உறுதி வீதம் அதிகமாக இருப்பதாகவும், உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் கொவிட் பாதிப்புகள் பற்றியும், சரியான நடத்தை விதிமுறையை மீண்டும் தீவிரமாக அமல்படுத்துவது குறித்தும், பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தினார்.

இதுபோன்ற மாவட்டங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நிறைவுரை வழங்கிய பிரதமர், பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் கற்றலுக்காக மாநில அரசுகளைப் பாராட்டினார். மூன்றாவது அலை பற்றிய அச்சுறுத்தல்கள் அனைவர் மத்தியிலும் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வருவதாக  பிரதமர் கூறினார். பாதிப்பு குறைந்து வருவதாக நேர்மறையான சமிக்ஞைகளை நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையிலும், ஒரு சில மாநிலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த வாரத்தில் 80% பாதிப்புகளும், 84% உயிரிழப்புகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநிலங்களில் பதிவாகியிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இரண்டாவது அலை தொடங்கிய மாநிலங்களில் இயல்பு நிலை முதலில் திரும்பும் என்று முன்னதாக நிபுணர்கள் கருதினார்கள். எனினும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இதேபோன்ற நிலை இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் காணப்பட்டதாக பிரதமர் எச்சரித்தார்.  அதனால்தான், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் மாநிலங்களில் மூன்றாவது அலை உருவாவதை தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நீண்ட காலத்திற்கு பாதிப்பு அதிகரித்தால், கொரோனா தொற்றின் உருமாறும் தன்மை அதிகரிப்பதற்கும், புதிய மாறுபாடுகள் உருவாகும் அபாயமும் ஏற்படக்கூடும் என்ற நிபுணர்களின் கருத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். எனவே பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகிய உத்திகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு, மிகச்சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். அதிக பாதிப்புகள் ஏற்படும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் திரு மோடி வலியுறுத்தினார். பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் தடுப்பூசியை ஓர் உத்தியாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், அதன் முறையான பயன்பாட்டையும் எடுத்துரைத்தார்.

தங்களது ஆர்டி-பிசிஆர் பரிசோதனையின் திறனை மேம்படுத்துவதற்காக இந்தத் தருணத்தை பயன்படுத்தி வரும் மாநிலங்களை பிரதமர் பாராட்டினார்.

 

அவசர சிகிச்சைப்பிரிவில் படுக்கைகள் மற்றும் பரிசோதனையின் திறன் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி பற்றியும் பிரதமர் பேசினார். அவசரகால கொவிட் எதிர்வினை தொகுப்பிற்காக ரூ. 23,000 கோடி வழங்க அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மாநிலங்கள் இந்த நிதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

உள்கட்டமைப்பு வசதிகளில், குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள இடைவெளியை, நிரப்புமாறு மாநிலங்களுக்கு பிரதமர் கோரிக்கை விடுத்தார். பல்வேறு வளங்கள் மற்றும் தரவுகளை பொதுமக்கள் எளிதாக, வெளிப்படைத்தன்மை வாயிலாக அணுகுவதற்கும், இது போன்ற சிக்கல்களில் இருந்து நோயாளிகள் விடுபடுவதற்காகவும், தகவல் தொழில்நுட்ப அமைப்புமுறைகள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்களை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 332 அழுத்த விசை தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆலைகளுள் 53 ஆலைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்தப் பணியை விரைந்து நிறைவு செய்யுமாறு முதலமைச்சர்களை அவர் கேட்டுக்கொண்டார். குழந்தைகளை பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக அனைத்து வகையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

ஐரோப்பா, அமெரிக்கா, வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பல்வேறு நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியாவிற்கும், உலகிற்குமான எச்சரிக்கை என்று கூறினார்.

 

கொரோனா இன்னும் நீங்காத போதும், தளர்வுகளுக்குப் பிந்தைய பழக்கவழக்கங்களின் காட்சிகள் கவலை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பெரும்பாலான மாநிலங்களில் அதிக மக்கள் தொகையுடன் கூடிய பெருநகரங்கள் அமைந்துள்ளதால், நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, கூட்ட நெரிசலைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வை உருவாக்குமாறு அரசியல் கட்சிகள், சமூக நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

*****************(Release ID: 1736163) Visitor Counter : 64