மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் இந்தியா திட்டம் 6 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
Posted On:
30 JUN 2021 12:44PM by PIB Chennai
இந்தியாவை மின்னணுத் துறையில் மேம்பட்ட சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றும் முயற்சியில் உருவாக்கப்பட்ட முக்கிய முன்முயற்சியான டிஜிட்டல் இந்தியா திட்டம், 2021, ஜூலை 1 அன்று, 6 வருடங்களை நிறைவு செய்கிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தனது சேவைகள், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்துதல், பொது மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற செயல்களால் புதிய இந்தியாவின் மிகப்பெரும் வெற்றித் திட்டங்களுள் ஒன்றாக இன்றுவரை விளங்குகிறது.
இத்திட்டம் 6 வருடங்களை நிறைவு செய்வதை முன்னிட்டு வரும் ஜூலை 1-ஆம் தேதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுவதுடன், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயனாளிகளுடனும் கலந்துரையாடுவார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதி மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் துவக்க உரை வழங்கும் இந்த நிகழ்ச்சியில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் சாதனைகளை எடுத்துரைக்கும் காணொளியும், அதைத்தொடர்ந்து பயனாளிகள்-பிரதமர் கலந்துரையாடும் அமர்வும் நடைபெறும். அமைச்சகத்தின் செயலாளர் திரு அஜய் சாவ்னே, இந்த கலந்துரையாடலுக்கு நடுவராக செயல்படுவார்.
“மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் உரையாடுவார். அவரது ஈடு இணையற்ற வழிகாட்டுதல் மற்றும் ஆதரவால் இது நமக்கு ஓர் பெருமை வாய்ந்த தருணமாக அமைந்துள்ளது. அவரது ஆற்றல் வாய்ந்த தலைமையின்கீழ் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம்”, என்று டிஜிட்டல் இந்தியா கழகத்தின் மேலாண் இயக்குநர், தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியும், அமைச்சகத்தின் மின்- ஆளுகைப் பிரிவின் தலைவருமான திரு அபிஷேக் சிங் தெரிவித்தார்.
கலந்துரையாடலுக்குப் பிறகு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பல்வேறு சாதனைகளின் சாராம்சம் பற்றியும், மக்களை இணைப்பதில் இத்திட்டம் அடைந்துள்ள வெற்றி குறித்தும் பிரதமர் உரையாற்றுவார்.
வருங்காலத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பற்றியும் அவர் எடுத்துரைப்பார்.
அனைத்துக் கலந்துரையாடல்களும், உரைகளும் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும். https://pmindiawebcast.nic.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 1-ஆம் தேதி காலை 11 மணி முதல் இந்த நிகழ்ச்சியை அனைவரும் நேரலையாகக் காணலாம். முகநூல், வலையொளி முதலிய டிஜிட்டல் இந்தியாவின் சமூக ஊடக தளங்களிலும் இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731392
*****************
(Release ID: 1731409)
Visitor Counter : 1716