கலாசாரத்துறை அமைச்சகம்
சர்வதேச யோகா தினம்: கங்கை கொண்ட சோழபுரம் உட்பட நாடு முழுவதும் 75 பாரம்பரிய இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன
Posted On:
21 JUN 2021 1:04PM by PIB Chennai
ஏழாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் கங்கை கொண்ட சோழபுரம் உட்பட நாடு முழுவதும் 75 பாரம்பரிய இடங்களில் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், தனது துறை அதிகாரிகள், யோகா நிபுணர்கள், யோகா ரசிகர்கள் ஆகியோருடன் தில்லி செங்கோட்டையில் இன்று யோகா பயிற்சி செய்தார்.
விடுதலையின் அம்ரித் மகோத்சவ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ‘‘யோகா, இந்திய பாரம்பரியம்’’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கங்கை கொண்ட சோழபுரம் உட்பட நாட்டின் 75 பாரம்பரிய இடங்களில் இந்த யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கொவிட் தொற்று சூழல் காரணமாக ஒவ்வொரு இடத்திலும் 20 பேர் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் ஆற்றிய உரையை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கேட்டனர்.
யோகா கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்குப்பின், தில்லி செங்கோட்டையி்ல் செய்தியாளர்களிடம் பேசிய திரு பிரகலாத் சிங் படேல் கூறியதாவது:
யோகா நமது மிகச்சிறந்த பாரம்பரியம். இதை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய பெருமை பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சேரும். இதன் காரணமாக ஒட்டு மொத்த உலகமும், சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது. மக்கள் இதை தங்கள் வாழ்க்கையின் அங்கமாக மாற்றிவிட்டனர். சுதந்திரத்தின் 75வது ஆண்டை நினைவு கூறும் வகையிலும், சர்வதேச யோகா தினம் கொண்டாப்படுகிறது.
அதன்படி நாட்டின் 75 பாரம்பரிய இடங்களில் யோகா நிகழ்ச்சிகளை கலாச்சாரத்துறை அமைச்சகம் நடத்தியுள்ளது. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்தை அனுபவிப்பதற்கு இளைஞர்கள் தங்கள் வாழ்வில் யோகாவை மேற்கொள்ள வேண்டும்.
உலகுக்கு இன்று எம்-யோகா செயலி கிடைத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார் இதில் யோகா பயிற்சி பற்றிய பல வீடியோக்கள் பல மொழிகளில் உள்ளன.
இந்த எம்-யோகா செயலி, உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற உதவும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் பேசினார்.
தில்லி செங்கோட்டையில், யோகா செய்முறை விளக்கங்கள், ஆச்சார்ய பிரதிஷ்தா என்பவரின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டது. கலாச்சாரத்துறை செயலாளர் திரு ராகவேந்திர சிங், சுற்றுலாத்துறை செயலாளர் திரு அரவிந்த் சிங் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதேபோல் தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம், அவுரங்காபாத்தில் உள்ள எல்லோரா குகைகள், பீகாரில் உள்ள நாலந்தா, குஜராத்தில் உள்ள சமர்பதி ஆசிரமம், கர்நாடகாவில் உள்ள ஹம்பி, காஷ்மீரின் லே பகுதியில் உள்ள லடாக் சாந்தி ஸ்டுபா, விதிஷாவில் உள்ள சாஞ்சி ஸ்டுபா, பட்டியாலாவில் உள்ள சீஸ் மஹால், சட்டீஸ்கரில் உள்ள ராஜிவ் லோச்சன் கோயில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள போம்டிலா ஆகிய இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728999
-----
(Release ID: 1729087)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam