பிரதமர் அலுவலகம்

பிரதமர் தலைமையில் சிஎஸ்ஐஆர் சொசைட்டி கூட்டம்


இந்தப் பத்தாண்டு மற்றும் வரும் பத்தாண்டுகளுக்கான தேவைகளுக்கு நாம் தயாராக வேண்டும்; பிரதமர்

Posted On: 04 JUN 2021 1:56PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) சொசைட்டி கூட்டத்திற்கு காணொலி மூலம் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சவாலாக கொரோனா பெருந்தொற்று உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், கடந்த காலங்களில் மனித குலத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், சிறப்பான எதிர்காலத்திற்கான வழியை அறிவியல் தயாரித்துள்ளது. நெருக்கடியான காலங்களில் தீர்வுகளையும், வாய்ப்புகளையும் கண்டறிவதன் மூலம் புதிய வலிமையை உருவாக்குவதே அறிவியலின் அடிப்படை இயல்பு என்று அவர் கூறினார்.

பெருந்தொற்றிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காக, ஓராண்டுக்குள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் வேகத்தையும், ஆற்றலையும் பிரதமர் பாராட்டினார். வரலாற்றில் இத்தகைய பெரிய விஷயம் நடந்திருப்பது இதுவே முதன்முறையாகும் என்று அவர் கூறினார். கடந்த நூற்றாண்டில், மற்ற நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள் நடந்தன என்றும், இந்தியா அவற்றைப் பெற பல ஆண்டுகள் காத்திருந்தது என்றும் அவர் கூறினார். ஆனால், இன்று நமது நாட்டின் விஞ்ஞானிகள், பிற நாடுகளுக்கு இணையாக அதே வேகத்துடன் பணியாற்றியுள்ளனர். கோவிட்-19 தடுப்பூசிகள், பரிசோதனை உபகரணங்கள், தேவையான கருவிகள், கொரோனாவுக்கு எதிரான புதிய செயல்திறன் மிக்க மருந்துகள் ஆகியவற்றில் இந்தியாவை தன்னிறைவு பெற்றதாக மாற்றிய விஞ்ஞானிகளை அவர் பாராட்டினார். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை வளர்ந்த நாடுகளுக்கு இணையாகப் பயன்படுத்துவது தொழில் மற்றும் சந்தைக்கு சிறந்தது என்று அவர் கூறினார்.

நம் நாட்டில் அறிவியல், சமுதாயம் மற்றும் தொழில் துறையை ஒரே பக்கத்தில் வைத்திருக்கும் ஏற்பாட்டு நிறுவனமாக சிஎஸ்ஐஆர் பணியாற்றுவதாக பிரதமர் குறிப்பிட்டார். நமது இந்த நிறுவனத்துக்கு தலைமைப்பண்பை வழங்கிய சாந்தி ஸ்வரூப் பட்னாகர் போன்ற திறமை மிக்க விஞ்ஞானிகளை இந்நிறுவனம் நாட்டுக்கு அளித்துள்ளது. சிஎஸ்ஐஆர் ஆற்றல்மிக்க ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் காப்புரிமையைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், நாடு எதிர்நோக்கும் பல சவால்களைத் தீர்க்க இந்நிறுவனம் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

நாட்டின் இன்றைய இலக்குகள், 21-ம் நூற்றாண்டின் நாட்டு மக்களின் கனவுகள் ஆகியவை ஒரு அடித்தளத்தின் அடிப்படையிலானவை என்று பிரதமர் தெரிவித்தார். ஆகவே, சிஎஸ்ஐஆர் போன்ற நிறுவனங்களின் இலக்குகளும் அசாதாரணமானவை. இன்றைய இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், உயிரி தொழில்நுட்பம் முதல் மின்கல தொழில்நுட்பங்கள் வரை, வேளாண்மை முதல் வானியல் வரை, பேரிடர் மேலாண்மை முதல் பாதுகாப்பு தொழில்நுட்பம் வரை, தடுப்பூசிகள் முதல் மெய்நிகர் எதார்த்தம் வரை ஒவ்வொரு துறையிலும் அதிகாரமளிப்பதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறது. நீடித்த வளர்ச்சி மற்றும் தூய்மையான மின்சாரத் துறைகளில் இந்தியா உலகுக்கே வழிகாட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று, மென்பொருள் முதல் செயற்கைக்கோள் வரை, இந்தியா மற்ற நாடுகளின் வளர்ச்சியை அதிகரித்து வருவதுடன், உலகத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய உந்துசக்தி என்னும் பங்கை ஆற்றி வருகிறது. எனவே, இந்தியாவின் இலக்குகள், இந்தப் பத்தாண்டின் தேவைகளுக்கு ஏற்றதாகவும், அடுத்த பத்தாண்டின் தேவைகளுக்கு உரியதாகவும் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் குறித்து உலகம் முழுவதும் வல்லுனர்கள் தொடர்ந்து பெரும் அச்ச உணர்வை வெளியிட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்கள் அறிவியல் அணுகுமுறையுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். கார்பன் விடுவிப்பு, எரிசக்தி சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் வரை ஒவ்வொரு துறையிலும் முன்னெடுப்பை மேற்கொள்ளுமாறு அவர் விஞ்ஞானிகளைக் கேட்டுக் கொண்டார். சமுதாயத்தையும், தொழில்துறையையும் சிஎஸ்ஐஆர் ஒன்றாகக் கொண்டு செல்லுமாறு அவர் வலியுறுத்தினார். தமது அறிவுரையைத் தொடர்ந்து, மக்களிடம் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியதற்காக அந்நிறுவனத்தை அவர் பாராட்டினார். 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரோமா இயக்கத்தில் சிஎஸ்ஐஆர்-ன் பங்கு பற்றி அவர் புகழ்ந்துரைத்தார். இன்று நாட்டின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மலர்வளர்ப்பு மூலம் தங்கள் வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இறக்குமதியை நம்பியிருந்த நிலையை மாற்றி, இந்தியாவுக்குள்ளேயே பெருங்காய உற்பத்திக்கு உதவிய சிஎஸ்ஐஆர்- அவர் பாராட்டினார்.

சிஎஸ்ஐஆர் ஒரு நிச்சயமான, உறுதியான செயல்திட்டத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தக் கொரோனா பெருந்தொற்று வளர்ச்சியின் வேகத்தைப் பாதித்திருக்கக்கூடும். ஆனால், தற்சார்பு இந்தியாவின் கனவை நனவாக்கும் உறுதிப்பாடு அப்படியேதான் உள்ளது. நம் நாட்டில் உள்ள வாய்ப்புகளை பெருமளவுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். வேளாண்மை முதல் கல்வித்துறை வரை ஒவ்வொரு துறையிலும், நமது எம்எஸ்எம்இ-க்கள், ஸ்டார்ட் அப்களுக்கு மகத்தான வளம்  நிறைந்திருப்பதாக அவர் கூறினார். கொரோனா தொற்று காலத்தில் ஒவ்வொரு துறையும் அடைந்த வெற்றியை மீண்டும் கொண்டு வர அனைத்து விஞ்ஞானிகளும், தொழில்துறையும் முன்வரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

***



(Release ID: 1724417) Visitor Counter : 261