சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

30 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்: ஐதராபாத்தின் பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடமிருந்து பெறவிருக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்

Posted On: 03 JUN 2021 8:00AM by PIB Chennai

ஐதராபாத்தில் இயங்கும் பயாலஜிக்கல்-இ என்ற கொவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திடமிருந்து 30 கோடி தடுப்பூசி டோஸ்களை பெறுவதற்கான பணிகளை மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்த தடுப்பூசி டோஸ்கள், வரும் ஆகஸ்ட்- டிசம்பர் மாதங்களில் உற்பத்தி செய்து, வழங்கப்படும். இதற்கென முன்பணமாக ரூ.1500 கோடியை சுகாதார அமைச்சகம், பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் அளிக்கும்.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றி அடைந்ததை அடுத்து, பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரிக்கும் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை‌ தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் திட்ட முன்மொழிவை கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு முறையாக ஆய்வு செய்து அதன் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிதி உதவியில் ஆதரவு அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பயாலஜிக்கல்-இ நிறுவனத்துடனான இந்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

தற்சார்பு இந்தியா நிதி உதவித் திட்டம் 3.0-வின் ஒரு பகுதியாக, கொவிட்-19 தடுப்பூசியின் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய கொவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டமான கொவிட் சுரக்‌ஷா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723933

 


(Release ID: 1724013) Visitor Counter : 326