சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு தேவைப்படும் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பில் எந்தவித குறைபாடும் இல்லை: நிதி ஆயோக் உறுப்பினர்

Posted On: 01 JUN 2021 6:09PM by PIB Chennai

குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட்-19  பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, பெருந்தொற்றை புதிய வகையில் எதிர்கொள்ளவும், நாட்டின் தயார் நிலையை வலுப்படுத்தவும் தேசிய நிபுணர் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

 நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இல்லாத அறிகுறிகளை இக்குழு ஆய்வு செய்தது. மேலும், கையிருப்பில் உள்ள தரவுகள், மருத்துவ அறிக்கைகள், நாட்டின் அனுபவம், நோயின் பரிணாமங்கள், வைரஸ் மற்றும் பெருந்தொற்றின் தன்மை குறித்து இக்குழு பரிசீலித்தது.

மேற்கண்ட தகவல்களை, தில்லி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தேசிய ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற மத்திய சுகாதார அமைச்சகத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட்-19  பாதிப்பு குறித்து அரசு கவனித்து வருவதாக தெரிவித்த அவர், கொவிட்-19 பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளுக்கு தேவைப்படும் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என்று கூறினார். குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதாகவும் மருத்துவமனை சிகிச்சை வெகு சிலருக்கே தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

இருந்தபோதிலும், பெருந்தொற்று மற்றும் வைரஸில் ஏற்படும் மாறுபாடுகள் நிலைமையை மாற்றி தொற்றின் அளவை அதிகரிக்க செய்யக்கூடும். குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை உள்கட்டமைப்பில் இதுவரை எந்த சுமையும் ஏற்படவில்லை. ஆனால், பாதிப்புக்குள்ளாகும் 2 முதல் 3 சதவீத குழந்தைகளுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட்-19  பாதிப்பின் இரண்டு வகைகள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட்-19  பாதிப்பு இரண்டு வகைகளில் இருக்கலாம் என்று டாக்டர் பால் தெரிவித்தார்.

முதல் வகையில் இருமல் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டு சிலருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம்.

இரண்டாம் வகையில், அறிகுறிகள் இல்லாத பாதிப்பு ஏற்பட்டு 2 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு, காய்ச்சல், சரும ஒவ்வாமை, கண்ணெரிச்சல், சுவாசக் கோளாறு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்டவை சில குழந்தைகளுக்கு ஏற்படலாம். நுரையீரலில் மட்டுமில்லாமல் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பாதிப்பு பரவி இருக்கும். இது கொவிட்டுக்கு பிந்தைய அறிகுறி. இந்த காலகட்டத்தில் உடலில் வைரஸ் இருக்காது, ஆர்டிபிசிஆர் பரிசோதனையிலும் பாதிப்பு இல்லை என்று தெரியவரும். ஆனால் பிறபொருள் எதிரி (ஆன்டிபாடி) பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவரும்.

சில குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் இந்த புதிய வகை பாதிப்புக்கான சிகிச்சை குறித்த வழிகாட்டுதல்கள் வேகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான சிகிச்சை கடினமானது இல்லை என்றாலும் சரியான நேரத்தில் அளிக்கப்படவேண்டும் என்று டாக்டர் பால் கூறினார்.

 *****************(Release ID: 1723517) Visitor Counter : 606