சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாவட்ட ஆட்சியர் சான்றளித்தால், 48 மணி நேரத்தில் காப்பீடு தொகை: சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் புதிய முறை அறிமுகம்

Posted On: 01 JUN 2021 3:30PM by PIB Chennai

மாவட்ட ஆட்சியர் சான்றளித்தால், 48 மணி நேரத்தில்  காப்பீடு தொகை கிடைக்கும் வகையில், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19-ஐ எதிர்த்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின்(PMGKP)  கீழ் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு  கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி தொடங்கியது.  முதலில் 90 நாட்கள் அளவில் இத்திட்டம் இருந்தது. பின்பு ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பின்பு கடந்த ஏப்ரல் 24ம் தேதி  முதல் இத்திட்டம் மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்தில் ரூ. 50 லட்சம் காப்பீடு தொகையாக இருந்தது. சமுதாய சுகாதார ஊழியர்கள் மற்றும் தனியார் சுகாதார ஊழியர்கள் உட்பட அனைத்து சுகாதாரப்பணியாளர்களுக்கும் இந்த காப்பீடு திட்டம் பொருந்தும். நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 இந்த திட்டத்தின்  கீழ் இழப்பீடு கோரினால், இதற்கான நடைமுறை தாமதமாவதாக மாநிலங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் புகார் எழுப்பினர். இந்த தாமத்தை குறைக்கவும், நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி எளிதாக்க புதிய முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் ஒவ்வொரு இழப்பீடுக் கோரிக்கைகளும், நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் படி உள்ளதா என   மாநில அரசுகளே மாவட்ட ஆட்சியர்  அளவில் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அளிக்கும் சான்றிதழ் அடிப்படையில், காப்பீடு நிறுவனம், காப்பீடு தொகையை 48 மணி நேரத்தில் வழங்கும். இந்த நடைமுறை ஒரே மாதிரியாக இருக்க, மத்திய அரசு மருத்துவமனைகள், எய்ம்ஸ், ரயில்வே மருத்துமனை ஆகியவற்றில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களின் குடும்பத்தினர்  இழப்பீடு கோரினாலும், மாவட்ட ஆட்சியரே சான்றளிக்க வேண்டும். 

*****************



(Release ID: 1723450) Visitor Counter : 331