சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்ச்சி: புகையிலை பொருட்களை தவிர்க்கும் உறுதிமொழியை தலைமையேற்று நடத்தினார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 31 MAY 2021 3:03PM by PIB Chennai

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்,   புகையிலை பொருட்களை தவிர்க்கும் உறுதிமொழியை தலைமையேற்று நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே காணொலி காட்சி மூலம் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:

இந்தியாவில்  ஒவ்வொரு ஆண்டும் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட இறப்புகள், அதாவது நாள் ஒன்றுக்கு 3,500 பேர் புகையிலை பயன்பாடு காரணமாக இறக்கின்றனர். இது தவிர்க்க கூடிய சமூக பொருளாதார சுமை. இதோடு, புகையிலை மூலம் ஏற்படும் நோய்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கிறது.

புகைப்பிடிப்போர், கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால், இறப்பை சந்திக்கும் அபாயம் 40 முதல் 50 சதவீதம் அதிகமாக உள்ளது. புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்கள் மற்றும் இறப்புகளால், இந்தியாவில் ரூ.1.77 கோடி அளவுக்கு பொருளாதார சுமை ஏற்படுவதாகவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் என உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

நான் கடந்த 1977ம் ஆண்டு, தில்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, புகைப்பிடிப்பதற்கான தடை மற்றும் புகை பிடிக்காதோரின் ஆரோக்கிய பாதுகாப்பு சட்டத்தை தில்லி சட்டமன்றத்தில் நிறைவேறச் செய்தேன்இதுதான் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2002ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப்படிப்பதற்கான  தடை சட்டத்துக்கு முன்மாதிரியாக இருந்தது.

மத்திய, மாநில அரசுகளின் தொடர்ச்சியான முயற்சிகளால், 2009-10ம் ஆண்டில் 34.6 சதவீதமாக இருந்த புகையிலை பயன்பாடு, 2016-17ம் ஆண்டில் 28.6 சதவீதமாக குறைந்தது.

நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான பின்புஎலக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை சட்டம் 2019- கொண்டு வந்தேன். இது இந்தியாவில் -சிகரெட்டுகளின் உற்பத்தி மறறும் விற்பனைக்கு தடை விதிக்கிறது. இந்த சட்டம் சுமூகமாக நிறைவேற, பிரதமர் திரு நரேந்திர மோடி, பல தரப்பினரை சமாதானம் செய்தார்.

புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த, தேசிய சுகாதார கொள்கை 2017-ல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. 2025ம் ஆண்டுக்குள், புகையிலை பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723097

**


(Release ID: 1723141) Visitor Counter : 199