பிரதமர் அலுவலகம்

யாஸ் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை பிரதமர் ஆய்வு செய்தார்


ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வான்வழியாக ஆய்வு செய்தார்.

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது அனுதாபங்களை தெரிவித்தார்.

உடனடி நிவாரண பணிகளுக்காக ரூ.1000 கோடி நிதி உதவியை பிரதமர் அறிவித்தார்.

பாதிப்பின் முழு விவரத்தை மதிப்பிடுவதற்காக, மாநிலங்களை பார்வையிட அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அனுப்பும்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்குவதற்கு அனைத்து உதவிகளும் அளிப்பதாக மத்திய அரசு உறுதி

யாஸ் புயலில் சிக்கி பலியானோருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50,000 மும் கருணைத் தொகை வழங்கப்படும்

Posted On: 28 MAY 2021 3:53PM by PIB Chennai

யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி  மே 28ம் தேதி பயணம் மேற்கொண்டார்.

ஒடிசாவின் பத்ரக் மற்றும் பலேஸ்வர் மாவட்டங்கள் மற்றும் மேற்குவங்கத்தின் புர்பா மெதின்பூர்  மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் வான் வழியாக ஆய்வு செய்தார்.

புவனேஸ்வரில் நடந்த நிவாரணப் பணிகள் ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார். யாஸ் புயலால் ஒடிசாவில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது குறித்தும், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்டின் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது குறித்தும் பிரதமரிடம் விளக்கப்பட்டது.

இங்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள ரூ.1000 கோடி நிவாரண நிதியை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். இதில் ரூ.500 கோடி ஒடிசாவுக்கு உடனடியாக அளிக்கப்படும். மற்றொரு ரூ.500 கோடி மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அடிப்படையில் இந்த நிதி வழங்கப்படும். முழு பாதிப்பை மதிப்பிட, மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அனுப்பும். இதன் அடிப்படையில் மேலும் உதவிகள் வழங்கப்படும்.

இந்த சிக்கலான நேரத்தில், மாநில அரசுகளுடன்  மத்திய அரசு இணைந்து செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டமைப்புகளை மீண்டும் ஏற்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மக்களுக்கு பிரதமர் உறுதி அளித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது அனுதாபங்களையும், உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் பிரதமர் தெரிவித்தார். 

புயலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா  ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50,000 மும் கருணைத் தொகையாக  பிரதமர் அறிவித்தார்.

பேரிடர் சமயத்தில் இன்னும் அதிகமான அறிவியல் மேலாண்மை நடவடிக்கைகளில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கூறினார். அரபிக் கடல் மற்றும் வங்கங்கடலில் உருவாகும் புயல்களால் ஏற்படும் பாதிப்பு அடிக்கடி நடப்பதால்தகவல் தொடர்பு, பாதிப்பை குறைக்கும் முயற்சிகள், தயார்நிலை ஆகியவற்றில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நிவாரண முயற்சிகளில் சிறந்த ஒத்துழைப்புக்கு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார்.

ஒடிசா அரசின் தயார் நிலை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளால் குறைந்த அளவு உயரிழப்பு ஏற்பட்டது. இதற்காக ஒடிசா அரசை பிரதமர் பாராட்டினார். இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள, ஒடிசா அரசு பாதிப்பை குறைக்கும் முயற்சிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். 

பேரிடர் தணிப்பு நடவடிக்கைக்கு  ரூ.30,000 கோடி நிதி வழங்கியதன் மூலம் பேரிடர் தணிப்புக்கு நிதி ஆணையம் முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும்பிரதமர் குறிப்பிட்டார்.

 *****************



(Release ID: 1722483) Visitor Counter : 222