சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்களில் பதிவாகி வரும் கருப்பு பூஞ்சை பாதிப்புகளை தொடர்ந்து, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம்
Posted On:
21 MAY 2021 6:24PM by PIB Chennai
கடந்த சில நாட்களாக, அதிகளவிலான நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
தற்போதைய கொவிட் தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக கருப்பு பூஞ்சை போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் கவலை ஏற்படுத்தி வரும் நிலையில், அவற்றின் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, மருத்துவமனைகளின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த தயார்நிலையை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொவிட் மருத்துவமனைகள் மற்றும் இதர சுகாதார மையங்களில் செயல்திறன் மிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக கீழ்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை மத்திய சுகாதார செயலாளர் தன்னுடைய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
i) மருத்துவமனை தொற்று கட்டுப்பாட்டு குழுவை, மருத்துவமனையின் தலைமை பொறுப்பில் உள்ளவரை தலைவராக கொண்டு உருவாக்க வேண்டும்.
ii) தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய அலுவலரை (நுண்ணுயிரியல் நிபுணர் அல்லது மூத்த தொற்று தடுப்பு செவிலியருக்கு முன்னுரிமை) நியமிக்க வேண்டும்.
iii) சுகாதார மையங்களில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய வழிகாட்டுதல்களில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி ( https://www.mohfw.gov.in/pdf/National%20Guidelines%20for%20IPC%20in%20HCF%20-%20final(1).pdf) தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு திட்டத்தை மருத்துவமனைகளில் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
iv) கொவிட்-19-ஐ கருத்தில் கொண்டு தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு திட்டத்தின் செயல்முறைகளை வரையறுத்து வலுப்படுத்த வேண்டும்.
அ. மருத்துவமனை/சுகாதார மையம் முழுவதும் நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.
ஆ. துளிகள், காற்று மற்றும் தொடர்பு மூலம் நோய் பரவுவதை தடுக்க, சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொற்று சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
v) சூழ்நிலையை மேம்படுத்தி கீழ்காண்பவற்றை செயல்படுத்தவும்:
அ. காற்றோட்டம் இயற்கையாகவும், அதிகளவிலும் உள்ளதை உறுதி செய்தல்
ஆ. 1 சதவீத சோடியம் ஹிப்போகுளோரைட் அல்லது 70% ஆல்கஹால் போன்ற பரிந்துரைக்கப்பட்ட கிருமிநாசினிகளைக் கொண்டு மருத்துவமனை வளாகம் மற்றும் அடிக்கடி தொடக்கூடிய பொருட்களை தூய்மைப்படுத்துதல்
இ. மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் அல்லது உணவு மூலம் பரவும் நோய்களை தடுப்பதற்காக பாதுகாப்பான தண்ணீர் மற்றும் உணவு
ஈ. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின் படி உயிரிமருத்துவ கழிவுகளின் மேலாண்மை இருத்தல் வேண்டும். (https://cpcb.nic.in/uploads/Projects/Bio-Medical-Waste/BMW-GUIDELINES-COVID_1.pdf)
vi) தீவிர சிகிச்சை பிரிவுகளில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கூட்டு அணுகலின் மூலம் உபகரணம் தொடர்புடைய தொற்றுகளான சுவாச கருவி சார்ந்த நிமோனியா அல்லது காத்தெட்டர் சார்ந்த ரத்த ஓட்ட குறைபாடு, சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவை நிகழாமல் தடுக்கப்பட வேண்டும்.
vii) பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்களில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கோள்ளப்பட வேண்டியது அவசியம்.
viii) ஸ்டீராய்டு சிகிச்சையில் உள்ள கொவிட்-19 நோயாளிகள், இணை நோய்த்தன்மை உடையவர்கள் (நீரிழிவு உள்ளவர்களுக்கு கிளைமெகிக் கட்டுப்பாடு உருவக்கப்பட வேண்டும்) ஆகிய நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களின் மேலாண்மையில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை https://www.mohfw.gov.in/pdf/ClinicalGuidanceonDiabetesManagementatCOVID19PatientManagementFacility.pdf எனும் இணைப்பில் காணலாம்
ix) சுவாசக்கருவி சார்ந்த நிமோனியா அல்லது காத்தெட்டர் சார்ந்த ரத்த ஓட்ட தொற்று, சிறுநீர்ப்பாதை தொற்று, அறுவை சிகிச்சை தொற்றுகள், வயிறு-இரைப்பை குறைபாடுகள் ஆகிய சுகாதாரம் சார்ந்த தொற்றுகள் மீது காலப்போக்கில் கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும். எய்ம்ஸ் ஹை வலைப்பின்னலில் இருந்து மேற்கொண்டு வழிகாட்டுதல்களை எடுத்துக்கொள்ளலாம்: https://www.haisindia.com
x) தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து மருத்துவமனையில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
xi) தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை கண்காணித்து, மதிப்பீடு செய்வதற்காக மாநில அளவிலான அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
சுகாதார மையங்களில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கும்.
*****************
(Release ID: 1720763)
Visitor Counter : 314