பிரதமர் அலுவலகம்

உர மானியத்தை உயர்த்தும் வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் நல முடிவை அரசு எடுத்துள்ளது


டிஏபி உரங்கள் மீதான மானியம் 140% உயர்த்தப்பட்டுள்ளது

ஒரு மூட்டை டிஏபிக்கு ரூ 500 ஆக இருந்த மானியத்திற்கு பதிலாக ரூ 1200-ஐ விவசாயிகள் பெறவுள்ளனர்

ஒரு மூட்டை டிஏபி-ஐ ரூ 2400-க்கு பதில் ரூ 1200-க்கு விவசாயிகள் பெறவுள்ளனர்

இந்த மானியத்திற்காக கூடுதலாக ரூ 14,775 கோடியை அரசு செலவிடவுள்ளது

சர்வதேச விலையேற்றத்திற்கு இடையிலும் பழைய விலைகளுக்கே உரங்களை விவசாயிகள் பெற வேண்டும்: பிரதமர்

அரசின் முயற்சிகளின் மையமாக விவசாயிகள் நலன் உள்ளது: பிரதமர்

Posted On: 19 MAY 2021 7:45PM by PIB Chennai

உர விலைகள் குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். உர விலைகள் குறித்த விரிவான விளக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது.

பாஸ்பொரிக் அமிலம், அம்மோனியா உள்ளிட்டவற்றின் விலைகள் சர்வதேச அளவில் அதிகரித்து வருவதால் உர விலைகள் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. சர்வதேச விலையேற்றத்திற்கு இடையிலும் பழைய விலைகளுக்கே உரங்களை விவசாயிகள் பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கான மானியத்தை ரூ 500-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்த்துவது தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது 140% கூடுதலாகும். இதன் மூலம், சர்வதேச சந்தைகளில் விலையேற்றத்திற்கு இடையிலும், டிஏபி தொடர்ந்து ரூ 1200-க்கே விற்கப்படும், விலையேற்றத்தின் அனைத்து சுமையையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். ஒரு மூட்டைக்கான மானியம் இந்தளவுக்கு இதுவரை உயர்த்தப்பட்டதில்லை.

கடந்த வருடம், ஒரு மூட்டை டிஏபியின் விலை ரூ 1,700 ஆக இருந்தது. அதில் ரூ 500- மத்திய அரசு மானியமாக வழங்கியது. இதன் காரணமாக ஒரு மூட்டை உரத்தை ரூ 1200-க்கு நிறுவனங்களால் விற்க முடிந்தது.

சமீப காலத்தில், டிஏபியில் பயன்படுத்தப்படும் பாஸ்பொரிக் அமிலம் மற்றும் அம்மோனியா உள்ளிட்டவற்றின் விலை சர்வதேச சந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு மூட்டை டிஏபியின் விலை ரூ 2400 ஆக இருக்கும் நிலையில், ரூ 500 மானியம் போக ரூ 1900-க்கு உர நிறுவனங்களால் விற்க முடிந்திருக்கும். ஆனால், இன்றைய முடிவின் காரணமாக, ஒரு மூட்டை டிஏபி ரூ 1200-க்கு விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும்.

விவசாயிகளின் நலன் மீது அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், விலையேற்றத்தின் சுமை விவசாயிகள் மீது திணிக்காத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் ரசாயன உரங்களின் மானியங்களுக்காக ரூ 80,000 கோடியை அரசு செலவிடுகிறது. டிஏபி மானியம் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, கரிப் பருவத்தில் கூடுதலாக ரூ 14,775 கோடியை இந்திய அரசு செலவிடும்.

அக்ஷய திருதியை அன்று பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ 20,667 கோடியை நேரடியாக பரிவர்த்தனை செய்த பிறகு எடுக்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய விவசாயிகள் நலன் சார்ந்த முடிவு இதுவாகும்.

------



(Release ID: 1720091) Visitor Counter : 321