சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் தடுப்பூசிக்குப்பின் இரத்தப்போக்கு மற்றும் ரத்தம் உறைதல் சம்பவங்கள் இந்தியாவில் மிகக் குறைவு
Posted On:
17 MAY 2021 2:32PM by PIB Chennai
இந்தியாவில் கொவிட் தடுப்பூசி போடப்பட்ட பின், இரத்தப் போக்கு மற்றும் இரத்தம் உறைதல் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டது மிகக் குறைவு என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில், எதிர்ப்பு மருந்துக்குப்பின் ஏற்படும் பாதக விளைவை ஆராயும் தேசியக் குழு (AEFI) தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த அஸ்ட்ராஜெனிகா (இந்தியாவில் கோவிஷீல்டு) தடுப்பூசி போட்ட பின்பு, ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவதாக சில நாடுகளில் கடந்த மார்ச் 11ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டன. இதையடுத்து, இந்தியாவில் இந்த பாதகமான விளைவு குறித்து விரிவான பகுப்பாய்வை உடனடியாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
2021 ஏப்ரல் 3ம் தேதிவரை நாட்டில் 75,435,381 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும், இவற்றில் கோவிஷீல்டு - 68,650,819; கோவாக்சின் 6,784,562 என ஏஇஎப்ஐ குழு தெரிவித்தது.
இவற்றில் 65,944,106 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும், 9,491,275 தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாகவும் போடப்பட்டன. கொவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடங்கியதிலிருந்து, 23,000-க்கும் மேற்பட்ட பாதக விளைவுகள் குறித்து கோ-வின் இணையதளம் மூலமாக, நாட்டில் 753 மாவட்டங்களில் இருந்து 684 மாவட்டங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 700 பேர் மட்டுமே ( 10 லட்சம் டோஸ்கள் போடப்பட்டதில், 9.3 பேர் என்ற அளவில்) மோசமான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட 498 பேரின் மருத்துவ அறிக்கையை ஏஇஎப்ஐ குழு விரிவாக ஆய்வு செய்து முடித்துள்ளது. இவர்களில் 26 பேருக்கு மட்டுமே, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டபின் ரத்தம் உறைதல் அல்லது ரத்தப் போக்கு மூலம் மற்றொரு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட சாத்தியமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பத்து லட்சம் பேருக்கு 0.61 என்ற அளவில் உள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி போட்டபின்பு இரத்தம் உறைதல் சம்பவம் நடந்ததாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ரத்தம் உறைதல் சம்பவம் மிகக்குறைவு, ஆனால் உறுதியான சம்பவங்கள் நடந்துள்ளன என இந்தியாவில் ஏஇஎப்ஐ தரவுகள் காட்டியுள்ளன. இந்தியாவில் இந்த பாதிப்பு 10 லட்சம் டோஸ்களுக்கு 0.61 என்ற அளவில் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஒழுங்குமுறை அமைப்பான மருத்துவம் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்த அளவுகோலான 10 லட்சம் பேருக்கு 4 என்ற அளவைவிட, இந்தியாவில் நடந்த சம்பவங்களின் அளவு குறைவு. 10 லட்சம் டோஸ்களுக்கு 10 ரத்தம் உறைதல் சம்பவங்கள் நடந்ததாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
ரத்தம் உறைதல் சம்பவம் மக்களுக்கு தொடர்ந்து ஏற்படுகிறது. ஆனால், ஐரோப்பிய மக்களுடன் ஒப்பிடுகையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பாதிப்பு 70 சதவீதம் குறைவு என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.
கொவிட் தடுப்பூசி போட்ட பின்பு (குறிப்பாக கோவிஷீல்டு) 20 நாட்களுக்குள், சந்தேகத்திற்குரிய ரத்தம் உறைதல் அறிகுறிகள் பற்றி விழிப்புடன் இருப்பதை ஊக்குவிப்பதற்காகவும், பாதிப்பு அறிகுறிகளை தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் தெரிவிக்கும்படி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தடுப்பூசி பயனாளிகளுக்கு தனித்தனியாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுத்தல்களை வழங்கியுள்ளது.
* மூச்சுத்திணறல்
* நெஞ்சு வலி
* கை, கால்களில் வலி அல்லது வீக்கம்.
* தடுப்பூசி போடப்பட்ட இடுத்தை தாண்டி பிற இடங்களில் தோலில் சிவப்பு புள்ளி அல்லது சிராய்ப்பு.
* வாந்தியுடன் கூடிய வயிற்று வலி அல்லது வாந்தி இல்லாமல் ஏற்படும் வயிற்று வலி.
* முந்தைய பாதிப்பு இல்லாத நிலையில், வாந்தியுடன் கூடிய அல்லது வாந்தி இல்லாமல் ஏற்படும் வலிப்புகள்.
* வாந்தி மற்றும் வாந்தி இல்லாமல் ஏற்படும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான தலைவலி. (முந்தைய பாதிப்பு இல்லாத நிலையில்)
* பலவீனம் / கை, கால்கள் முடக்கம், அல்லது உடலின் ஒரு பகுதி (முகம் உட்பட);
* வெளிப்படையான காரணமின்றி தொடர்ச்சியான வாந்தி
* பார்வை மங்குதல் அல்லது கண்ணில் வலி அல்லது இரட்டை உருவமாக தெரிதல்;
* மனநிலையில் மாற்றம் அல்லது குழப்பம் அல்லது உணர்வு குறையும் நிலை
* மற்ற அறிகுறிகள் அல்லது பயனாளி அல்லது குடும்பத்தினர் கவலைப்பட கூடிய சுகாதார நிலை
கோவிஷீல்ட், தடுப்பூசி, உலகெங்கிலும் மற்றும் இந்தியாவிலும் கொவிட்-19 காரணமாக ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்கும், இறப்புகளைக் குறைப்பதற்கும் மிகப்பெரிய ஆற்றலுடன் ஒரு திட்டவட்டமான நேர்மறையான தடுப்பு மருந்தாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 2021 ஏப்ரல் 27ம் தேதி வரை 13.4 கோடிக்கும் மேற்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொவிட்-19 தடுப்பூசிகளின் பாதுகாப்புத்தன்மையை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது மற்றும் சந்தேகத்திற்குரிய பாதக விளைவுகளை தெரிவிப்பதை ஊக்குவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719293
*****************
(Release ID: 1719347)
Visitor Counter : 2604