ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இந்தியாவில் ரெம்டெசிவிர் கிடைப்பதை அதிகரிக்க அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள்

Posted On: 17 MAY 2021 2:58PM by PIB Chennai

கொவிட் -19 சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கிடைப்பது, உற்பத்தி செய்தல், வழங்கல் ஆகியவற்றைக் கண்காணிப்பதை மருந்துத் துறை தீவிரப்படுத்தியது, 2021 ஏப்ரல் தொடக்கத்தில், கொவிட் -19 தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. ரெம்டெசிவிர் ஒரு காப்புரிமை பெற்ற மருந்து. இது 7 இந்திய மருந்து நிறுவனங்களில்(சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெட்டெரோ, ஜூபிலண்ட் பார்மா, மைலன், சின்கீன் மற்றும் ஜைடஸ் காடிலா), காப்புரிமை பெற்ற கிலியட் லைஃப் சயின்சஸ் யுஎஸ்ஏ வழங்கிய தன்னார்வ உரிமங்களின் கீழ், இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்க, ரெம்டெசிவிர் தயாரிக்கும் உரிமை பெற்ற ஏழு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு விரைவாக உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டது. மத்திய அரசு மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறன் முன்னெப்போதும் ல்லாத வகையில் மாதத்திற்கு 38 லட்சம் குப்பிகளில் இருந்து கிட்டத்தட்ட 119 லட்சம் குப்பிகளாக அதிகரித்துள்ளது.

இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தியின் மூலம் மருந்து கிடைப்பதை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

2021 ஏப்ரல் 21 அன்று, 19 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 11 லட்சம் குப்பிகள், ஏப்ரல் 21 முதல் 30ந்தேதி  வரையிலான காலத்திற்கான இடைக்கால ஒதுக்கீடாக வழங்கப்பட்ட. இதற்கிடையே அதிகமான குப்பிகள் கிடைக்கப் பெற்றதால், ஏப்ரல் 24 ஆம் தேதியன்று இந்த ஒதுக்கீடு 16 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கப்பட்டது. இது அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்பட்டது. பின்னர் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒதுக்கீடுகளில், சமீபத்திய ஒதுக்கீடு மே 16 அன்று வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 76 லட்சம் குப்பிகளை, 2021 மே 23 வரையிலான காலத்திற்கு, மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது.

 மேலே குறிப்பிட்டுள்ள ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, 16.05.2021 தேதியின்படி, மற்ற நாடுகள் / அமைப்புகளிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட மொத்தம் 5.26 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளும், வணிக ரீதியாக இறக்குமதி செய்யப்பட்ட 40000 குப்பிகளும் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன மத்திய இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

*****


(Release ID: 1719340) Visitor Counter : 273