சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
லேசான பாதிப்புள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்த வழிகாட்டுதல்களை எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்குகின்றனர்
Posted On:
15 MAY 2021 1:47PM by PIB Chennai
காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, சுவை மற்றும் வாசனை இழப்பு, தொண்டை எரிச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு மற்றும் வெகு சில பாதிப்புகளில் கண்கள் சிவப்பாதல் ஆகியவை கொவிட்-19 நோயாளிகளிடம் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் ஆகும்.
மேற்கண்டவற்றில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் உங்களை நீங்களே உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கான "வீட்டு தனிமைப்படுத்துதலுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பு" எனும் தலைப்பிலான இணைய கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது எய்ம்ஸ் புது தில்லியின் மருத்துவர் டாக்டர் நீரஜ் நிஷ்ச்சல் தெரிவித்தார்.
பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள 80 சதவீத நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்து அறிகுறிகள் தொடர்ந்தால் மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவமனை அனுமதி தேவையா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
முறையான அளவில் சரியான நேரத்தில் மருந்துகள் உட்கொள்ளப் பட வேண்டும். நோயாளிகள் மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவற்றை எவ்வாறு, எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொண்டால் மட்டுமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் நீரஜ் மேலும் தெரிவித்தார்.
அறுபது வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நாள்பட்ட நோய்கள் உடையவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்துதல் குறித்து முடிவெடுக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான மருந்துகளையும் வீட்டு தனிமையில் உள்ளோர் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இணைய கருத்தரங்கில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்தனர்.
************************
(Release ID: 1718836)
Visitor Counter : 2830