பிரதமர் அலுவலகம்

கொவிட் மற்றும் தடுப்பூசி சம்பந்தமான நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்


மார்ச் மாதத் துவக்கத்தில் வாரத்திற்கு 50 லட்சமாக இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை, தற்போது 1.3 கோடியாக உயர்வு

உள்ளூர்மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு உத்திகள், காலத்தின் கட்டாயம்: பிரதமர்

பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் அதிகரிக்கும் பகுதிகளில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் உத்தரவு

ஊரகப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு, கண்காணிப்பில் ஈடுபடுவதில் கவனம் செலுத்துவதற்காக சுகாதார வளங்களை அதிகரிக்க பிரதமர் வலியுறுத்தல்

ஊரகப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தேவையான சாதனங்களுடன் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அதிகாரமளித்தல்: பிரதமர்

ஊரகப் பகுதிகளில் பிராணவாயு முறையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம்: பிரதமர்

செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் இதர உபகரணங்களை கையாளுவதில் சுகாதார பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்: பிரதமர்

Posted On: 15 MAY 2021 2:28PM by PIB Chennai

நாட்டில் கொவிட் மற்றும் தடுப்பூசி சம்பந்தமான நிலவரம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் கொவிட் சம்பந்தமான தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர். மார்ச் மாதத் துவக்கத்தில் வாரத்திற்கு 50 லட்சமாக இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை, தற்போது 1.3 கோடியாக உயர்ந்திருப்பதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. பாதிப்பின் சதவீதம் குறைந்து வருவது பற்றியும், குணமடைதல் சதவீதம் அதிகரிப்பது பற்றியும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். நாளொன்றிற்கு 4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் மருத்துவ பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசின் நடவடிக்கைகளின் பலனாக  தற்போது குறைந்து வருவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொவிட் தொற்று, பரிசோதனை, பிராணவாயுவின் இருப்பு, மருத்துவ உள்கட்டமைப்பு, தடுப்பூசித் திட்டம் ஆகியவற்றின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிலைகளை அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் அதிகரிக்கும் பகுதிகளில் உள்ளூர்மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு உத்திகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் கூறினார். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக, பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் அதிகரிகமாக உள்ள பகுதிகளில் ஆர்டி பிசிஆர் மற்றும் விரைவான பரிசோதனைகள் இரண்டையும் பயன்படுத்தி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் அவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக பதிவுசெய்ய மாநிலங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். ஊரகப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு, கண்காணிப்பில் ஈடுபடுவதில் கவனம் செலுத்துவதற்காக சுகாதார வளங்களை அதிகரிக்க வேண்டும் என்றார் பிரதமர்.

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை தேவையான சாதனங்களுடன் நியமிப்பது தொடர்பாகவும் அவர் பேசினார். வீட்டுத் தனிமை மற்றும் சிகிச்சை பற்றி ஊரகப் பகுதிகளில்எளிய மொழியில் வழிகாட்டுதல்கள் இடம் பெற வேண்டும் என்று பிரதமர் கோரிக்கைவிடுத்தார்.

கிராமப்புற பகுதிகளில் பிராணவாயுவின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக பிராணவாயு செறிவூட்டிகளை உள்ளடக்கிய விநியோகத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் உத்தரவிட்டார். மருத்துவ உபகரணங்கள், மின் விநியோகம் போன்ற சாதனங்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்காக சுகாதார பணியாளர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

சில மாநிலங்களில் செயற்கை சுவாசக் கருவிகள் பயன்பாடின்றி கிடப்பில் இருப்பதாக ஒருசில அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது பற்றி கடுமையாகக் கண்டித்த பிரதமர், மத்திய அரசு வழங்கும் செயற்கை சுவாசக் கருவிகளின்  நிறுவுதல் மற்றும் இயக்கம் குறித்து உடனடியாக தணிக்கை செய்யுமாறு உத்தரவிட்டார். தேவை ஏற்பட்டால் முறையாக இயங்கும் செயற்கை சுவாசக் கருவிகள் பற்றி மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

கொவிட் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம், விஞ்ஞானிகள் மற்றும் துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களால் தொடர்ந்து வழி நடத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தடுப்பூசித் திட்டம் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு மாநிலவாரியான தடுப்பூசி வழங்கல் பற்றி அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். வருங்காலத்தில் தடுப்பூசியின் இருப்பிற்கான திட்டமும் விவாதிக்கப்பட்டது.

தடுப்பூசியை விரைவாக வழங்குவது தொடர்பாக மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

*****************



(Release ID: 1718818) Visitor Counter : 254