பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 தொற்றைத் தடுப்பதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆய்வு


மாநில மற்றும் மாவட்ட அளவில் கொவிட் நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முன்னணி குறியீடுகள் குறித்து மாநிலங்களுக்கு உதவிகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்க பிரதமர் உத்தரவு

மருந்துகளின் இருப்பை பிரதமர் ஆய்வு செய்தார்

இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு

தடுப்பூசியின் வேகம் குறையாது என்பதை மாநிலங்களுக்கு உணர்த்த வேண்டும்: பிரதமர்

Posted On: 06 MAY 2021 2:51PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 தொடர்பான நிலவரம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று விரிவான ஆய்வை மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் கொவிட் பாதிப்பு குறித்து அவருக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை மேற்கொண்டு வரும் 12 மாநிலங்கள் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. நோயின் தாக்கம் அதிகமுள்ள மாவட்டங்கள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க மாநிலங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முன்னணி குறியீடுகள் குறித்து   மாநிலங்களுக்கு உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.

துரிதமான மற்றும் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்வதன் அவசியம் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 10 சதவீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிராணவாயு படுக்கைகள் அல்லது அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் சேர்க்கப்பட்டிருக்கும்  மாவட்டங்களைக் கண்டறியுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மருந்துகளின் இருப்பு குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளின் உற்பத்தி விரைவாக அதிகரிக்கப்பட்டு வருவது தொடர்பாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசித் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் அடுத்த சில மாதங்களில் தடுப்பூசியின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டம் ஆகியவை தொடர்பாகவும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.

சுமார் 17.7 கோடி தடுப்பூசிகள், மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. தடுப்பூசி வீணாவதில் மாநில வாரியான நிலை பற்றியும் அவர் ஆய்வு செய்தார். 45 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்தோரில், சுமார் 31 சதவீதத்தினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக பிரதமருக்குக் கூறப்பட்டது.

தடுப்பூசியின் வேகம் குறையாது என்பதை மாநிலங்களுக்கு உணர்த்த வேண்டியதன் அவசியம் பற்றி பிரதமர் பேசினார். பொதுமுடக்கத்தின் போதும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வசதியை குடிமக்களுக்கு ஏற்படுத்துவதுடன், தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களை இதர பணிகளுக்கு மாற்றி நியமிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு அமித் ஷா, திருமதி நிர்மலா சீதாராமன், டாக்டர் ஹர்ஷ் வர்தன், திரு பியூஷ் கோயல், திரு மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோருடன் உயரதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

*****************



(Release ID: 1716499) Visitor Counter : 203