சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா: உரிய சிகிச்சையால் குணமடைந்து வருகின்றன

Posted On: 04 MAY 2021 3:28PM by PIB Chennai

ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.

ஐதராபாத், நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன.

 இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு  கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டதாக இந்த பரிசோதனையை மேற்கொண்ட சிசிஎம்பி-லாகோன்ஸ் மையம்  இன்று வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

இந்த தொற்று மாறுபட்ட வகை கொரோனா அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொவிட் பாதிப்புக்கு உள்ளான 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.  அவை வேகமாக குணமடைந்து வருகின்றன.

தற்போது அவை இயல்பாக நடமாடி, உணவு உண்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உயிரியல் பூங்காவில் தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.  தொற்று பாதிப்பை குறைப்பதற்காக உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது.

கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதால், உயிரியல் பூங்காக்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் வழங்கியுள்ளது.

கடந்தாண்டும் இதேபோல் உலகின் பல இடங்களில் உள்ள உயிரியல் பூங்காங்களில் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.  ஆனால் விலங்குகளில் இருந்து இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு எந்த உண்மையான ஆதாரமும் இல்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715909

*****************


(Release ID: 1715938) Visitor Counter : 291