குடியரசுத் தலைவர் செயலகம்

4 நாட்டு தூதர்களின் நியமன உத்தரவு காணொலி காட்சி மூலம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு

Posted On: 18 MAR 2021 1:48PM by PIB Chennai

பிஜி, டொமினிக் குடியரசு, ஆப்கானிஸ்தான், கயானா ஆகிய 4 நாடுகளின் தூதர்களிடமிருந்து நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலம் இன்று ஏற்றுக் கொண்டார்.

நியமன சான்றிதழை அளித்த தூதர்கள்:

1. மேதகு திரு. கமலேஷ் ஷாஷி பிரகாஷ், பிஜி குடியரசு தூதர்.

2. மேதகு திரு. டேவிட் இம்மானுவேல் பிக் பு செல், டொமினிக் குடியரசு தூதர்.

3. மேதக திரு. ஃபரித் மாமுண்ட்சே ஆப்கானிஸ்தான் தூதர்.

4. மேதகு திரு சரண்தாஸ் பெர்சாத், கயானா தூதர்.   

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், புதிய தூதர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த 4 நான்கு நாடுகளுடனும், இந்தியா நல்ல நட்புறவை வைத்துள்ளது எனவும், இந்த உறவுகள் அமைதி மற்றும் வளம் என்ற பொதுவான தொலைநோக்கில்  ஆழமாக வேரூன்றியுள்ளது எனவும் அவர் கூறினார்.

.நா பாதுகாப்பு கவுன்சிலில் 2021-22ம் ஆண்டுக்கான நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா இருப்பதற்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்த 4 நாடுகளின் அரசுகளுக்கும் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார்.

கொவிட் 19 சூழலில், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் பொருளாதார வளத்தை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் உலகளாவிய முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் இந்தியா முன்னணியில் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்

இந்திய அரசின்தடுப்பூசி நட்பு’  நடவடிக்கையின் கீழ், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விலை குறைவான கொவிட் தடுப்பூசிகள் பல நாடுகளைச் சென்றடைந்துள்ளது என்றும், உலகின் மருந்தகம் என்ற புகழை இந்தியா மீண்டும் செயல்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவுடன், தங்கள் நாடுகள் சிறப்பான உறவை கொண்டுள்ளன என்றும், இதை மேலும் வலுப்படுத்த தங்கள் நாட்டு தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகவும், வெளிநாட்டு தூதர்கள் குறிப்பிட்டனர்.

பல துறைகளில் வளர்ச்சிக்கான உதவியை தொடர்ந்து அளிப்பதற்கு அவர்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

தங்கள் நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கிய மனிதநேய செயலுக்காகவும், அவர்கள் இந்தியாவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

-----



(Release ID: 1705806) Visitor Counter : 133