பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்
இந்தியா தனது சுதந்திரப் போராட்ட வீரர்களை மறக்காது: பிரதமர்
கடந்த 6 ஆண்டுகளில் போற்றப்படாத தலைவர்களின் வரலாற்றை பாதுகாக்கும் உணர்வுபூர்வமான முயற்சிகள் எடுக்கப்பட்டன: பிரதமர்
நமது அரசியல் சாசனம் மற்றும் நமது ஜனநாயக பாரம்பரியத்தால் நாம் பெருமிதம் அடைகிறோம்: பிரதமர்
Posted On:
12 MAR 2021 2:15PM by PIB Chennai
இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்திலிருந்து ‘பாதயாத்திரை’(சுதந்திர யாத்திரை) மற்றும் விடுதலையின் அம்ருத் மகோத்சவ முன்னோட்ட நிகழ்ச்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, இதர கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் டிஜிட்டல் நடவடிக்கைகளையும் அவர் தொடங்கி வைத்தார். குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்ரத், மத்திய இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் மற்றும் குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை நினைவு கூறும் வகையில் ‘விடுதலையின் அம்ருத் மகோத்சவம்' என்ற பெயரில் தொடர் நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தவுள்ளது.
மக்கள் சேவை உணர்வுடன், மக்கள் திருவிழாவாக இந்த மகோத்சவம் கொண்டாப்படும்.
சமர்பதி ஆசிரமத்தில் கூடியிருந்தவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், 2022, ஆகஸ்ட் 15ம் தேதிக்கு 75 வாரங்களுக்கு முன்பாக தொடங்கப்படும் விடுதலையின் அம்ருத் மகோத்சவம், 2023 ஆகஸ்ட் 15ம் தேதி வரை தொடரும் என குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தலைவர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்டம், 75ம் ஆண்டில் கருத்துக்கள், 75ம் ஆண்டில் சாதனைகள், 75ம் ஆண்டில் செயல்பாடுகள், 75ம் ஆண்டில் தீர்மானங்கள் என்ற 5 தூண்களை பிரதமர் வலியுறுத்தினார்.
இவை கனவுகள் மற்றும் கடமைகளை உத்வேகமாக வைத்துக் கொண்டு முன்னேறுவதற்கான வழிகாட்டும் சக்தியாக உள்ளன என அவர் குறிப்பிட்டார்.
விடுதலையின் அம்ருத் மகோத்சவம் என்றால், சுதந்திர சக்தியின் அமுதம் என பிரதமர் உறுதிப்பட கூறினார்.
இதற்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தூண்டுதலின் அமுதம் என்று பொருள்; புதிய யோசனைகள் மற்றும் உறுதிமொழிகளின் அமுதம் மற்றும் தற்சார்பு இந்தியாவின் அமுதம் என பிரதமர் கூறினார்.
உப்பின் அடையாளம் பற்றி பேசிய பிரதமர், உப்பை அதன் விலை அடிப்படையில் ஒருபோதும் மதிப்பிடப்பட்டதில்லை. இந்தியர்களை பொறுத்தவரை, உப்பு என்றால் மரியாதை, நம்பிக்கை, விசுவாசம், உழைப்பு, சமத்துவம், மற்றும் தன்னம்பிக்கை என்று அர்த்தம். அந்த நேரத்தில், உப்பு தற்சார்பு இந்தியாவின் அடையாளமாக இருந்தது.
இந்தியாவின் மதிப்புகளுடன், தன்னம்பிக்கையையும் ஆங்கிலேயர்கள் புண்படுத்தினர். இங்கிலாந்தில் இருந்து வரும் உப்பை சார்ந்திருக்க வேண்டிய நிலைய இந்திய மக்களுக்கு ஏற்பட்டது.
நாட்டின் இந்த நீண்ட வலியையும் மக்கள் உணர்வுகளையும் புரிந்து கொண்ட காந்திஜி, அதை ஒரு இயக்கமாக மாற்றினார்.
கடந்த 1857ம் ஆண்டு, இந்திய சுதந்திரத்துக்காக நடந்த முதல் போர், வெளிநாட்டிலிருந்து மகாத்மா காந்தி திரும்பியது, சத்தியாகிரகத்தின் வலிமையை நாட்டுக்கு நினைவூட்டியது, முழு சுதந்திரத்துக்கு லோக்மான்ய திலக் விடுத்த அழைப்பு, சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடந்த தில்லி பேரணி, தில்லி செல்வோம் கோஷம் போன்ற சுதந்திர போராட்டத்தின் முக்கிய தருணங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
சுதந்திர இயக்கத்தின் சுடரை தொடர்ந்து தூண்டும் பணியை, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நமது ஆச்சார்யாக்கள், முனிவர்கள், ஆசிரியர்கள் செய்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
இதே வழியில், தேசிய அளவிலான சுதந்திர இயக்கத்துக்கான தளத்தை பக்தி இயக்கம் தயார் செய்தது என அவர் கூறினார்.
சைதன்ய மகாபிரபு, ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீமந்த் சங்கர் தேவ் ஆகியோர் தேசிய அளவிலான சுதந்திர போராட்டத்துக்கான தளத்தை உருவாக்கினர்.
இதேபோல், அனைத்து பகுதியில் உள்ள முனிவர்களும், தேசிய சுதந்திர போராட்ட உணர்வுக்கு தங்கள் பங்களிப்பை அளித்தனர். நாடு முழுவதும் ஏராளமான தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கணக்கில் அடங்காத தியாகங்களை செய்தனர். ஆங்கிலேயர்கள் தலையில் சுட்டபோது, தேசியக் கொடியை கீழே விழாமல் பிடித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது கொடிகாத்த குமரனின் தியாகத்தையும் அவர் குறிப்பிட்டார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய முதல் மகாராணி தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியார் என பிரதமர் குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சி மடிய, நமது நாட்டின் பழங்குடியினரும் வீரத்துடன் தொடர்ந்து பணியாற்றினர் என பிரதமர் குறிப்பிட்டார். ஜார்கண்ட்டில், பிர்சா முண்டா ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டார்.
சந்தல் இயக்கத்தை முர்மு சகோதரர்கள் நடத்தினர். ஒடிசாவில், சக்ரா பிசாய், ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்.
காந்திய கொள்கைககள் மூலம் லட்சுமண் நாயக் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆந்திராவில் ராம்பா இயக்கம் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மன்யம் விருது அல்லூரி சிரராம் ராஜு, மிசோரம் மலைப் பகுதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பசல்தா குங்சேரா போன்ற போற்றப்படாத தலைவர்களையும் அவர் பட்டியலிட்டார்.
அசாம் மற்றும் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் கோம்தார் கோன்வர், லச்சிட் போர்புகன் மற்றும் செராட் சிங் ஆகியோரையும் அவர் குறிப்பிட்டார். குஜராத் ஜம்புகோடாவில் நாயக் பழங்குடியினரின் தியாகம், மங்கத் பகுதியில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் படு கொலை செய்யப்பட்டதையும் நாடு எப்போதும் நினைவு கூரும் என அவர் கூறினார்.
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும், நடந்த சுதந்திர போராட்ட வரலாற்றை பாதுகாக்க கடந்த 6 ஆண்டுகளாக நாடு உணர்வுபூர்வமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது என பிரதமர் கூறினார். தண்டி யாத்திரையுடன் தொடர்புடைய இடத்தை புதுப்பிக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது. நாட்டின் முதல் சுதந்திர அரசு ஏற்பட்டவுடன், அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ணக் கொடியை ஏற்றிய இடமும் புதுப்பிக்கப்படுகிறது.
சுதந்திர போராட்டத்துக்குப் பின்புதான் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பெயர் வைக்கப்பட்டது. பாபா சாகேப்புடன் தொடர்புடைய இடங்கள் பஞ்சதீர்த்தாவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் நினைவிடம் மற்றும் பைகா இயக்கம் நினைவிடம் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், நாம் கடின உழைப்பு மூலம் நம்மை நிருபித்துள்ளோம். நமது அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக பாரம்பரியங்களால் நாம் பெருமிதம் அடைகிறோம். ஜனநாயகத்தின் தாயான இந்தியா, ஜனநாயகத்தை வலுப்படுத்த இன்னும் முன்னோக்கி செல்கிறது. இந்தியாவின் சாதனைகள், ஒப்புமொத்த மனித குலத்துக்கும் நம்பிக்கை அளிக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில், தற்சார்பு உணர்வு நிறைந்திருக்கிறது என்றும், அது உலகின் வளர்ச்சி பயணத்துக்கும் உந்துதலை அளிக்க உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நமது சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் நாட்டின் முயற்சிகளை நிறைவேற்றும் பொறுப்பும் இளைஞர்களுக்கும், அறிஞர்களுக்கும் உள்ளது என பிரதமர் வலியுறுத்தினார்.
சுதந்திரப் போராட்டத்தின் சாதனைகளை உலகுக்கு காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பழங்காலத்து தனிச்சிறப்பான கதைகளை ஆராய்ந்து அவற்றுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என கலை, இலக்கியம், நாடகம், மற்றும் திரைத்துறை மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு துறையை சேர்ந்தவர்களை அவர் வலியுறுத்தினார்.
-----
(Release ID: 1704381)
Visitor Counter : 1788
Read this release in:
Urdu
,
Bengali
,
Marathi
,
Odia
,
Telugu
,
Malayalam
,
English
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada