பிரதமர் அலுவலகம்

இந்திய பொம்மை கண்காட்சி 2021 ஐ பிரதமர் துவக்கி வைத்தார்


இந்திய பொம்மை கண்காட்சி 2021, சுயசார்பு இந்தியாவை அமைப்பதற்கான ஒரு முக்கிய படியாகும்: பிரதமர்

சூழலியல், உளவியல் ஆகிய இரண்டிற்கும் ஏற்ற வகையிலான சிறந்த பொம்மைகளை உருவாக்குங்கள்: பிரதமர்

மிகச்சிறந்த பொம்மைகளை உருவாக்குவதற்குத் தேவையான பாரம்பரியம், தொழில்நுட்பம், கருத்துகள் மற்றும் திறன், இந்தியாவிடம் உள்ளது: பிரதமர்

Posted On: 27 FEB 2021 1:01PM by PIB Chennai

இந்திய பொம்மை கண்காட்சி 2021 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொளி மாநாடு மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான துறை ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி; மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி ஆகியோர் கலந்து கொண்டனர். பொம்மை கண்காட்சி 2021 பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

கர்நாடகாவின் சன்னபட்னா, உத்தரபிரதேசத்தின் வாரணாசி, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களிலிருந்து வந்த் பொம்மை தயாரிப்பாளர்களுடன் பிரதமர் உரையாடினார். இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது; ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம் பொம்மைகளை உற்பத்தி செய்வதற்கும், வாங்குவதற்கும் ஏற்ற உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்குவது பற்றி விவாதிப்பதற்காக இந்த பொம்மை கண்காட்சியின் மூலம், அரசாங்கமும் தொழில்துறையும் ஒன்றிணைகின்றன.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவில் பொம்மைத் தொழிலின் ஒளிந்து கிடக்கும் திறனை வெளிக்கொணரவும், சுயசார்பு இந்தியாவுக்கான இயக்கத்தின் ஒரு பெரும் பகுதியாக அது அடையாளம் பெற வகை செய்யவும் அழைப்பு விடுத்தார். இந்த முதலாவது பொம்மை கண்காட்சி, ஒரு வர்த்தக அல்லது பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டம் நாட்டின் பண்டைக்கால விளையாட்டு கலாச்சாரத்தையும், உற்சாகத்தையும் வலுப்படுத்துவதற்கான இணைப்பாகும். பொம்மை வடிவமைப்பு, புதுமை, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், பேக்கேஜிங் பற்றி விவாதிக்கவும், தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடியதாகவும் அமைந்த ஒரு தளமாகும் இந்த பொம்மை கண்காட்சி. சிந்து சமவெளி நாகரிகம், மொஹெஞ்சதாரோ மற்றும் ஹரப்பா காலத்திலிருந்தே பொம்மைகள் குறித்து உலகம் ஆராய்ச்சி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

பண்டைய காலங்களில், உலகத்திலிருந்து பயணிகள் இந்தியாவிற்கு  வந்தபோது, ​​அவர்கள் இந்தியாவில் விளையாட்டுகளைக் கற்றுக் கொண்டனர். தாங்கள் கற்றுக் கொண்டனவற்றை தங்களுடன் எடுத்துச் சென்றனர் என்பதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இன்று உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் சதுரங்கம் (chess) முன்பு இந்தியாவில் 'சதுரங்கா அல்லது சதுரங்கா'' (Chaturanga or Chaduranga') என்று விளையாடப்பட்டது என்று அவர் கூறினார். நவீன லூடோ முற்காலத்தில்  'பச்சீசி' ஆக விளையாடப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் புராணங்களில், பல்ராமுக்கு நிறைய பொம்மைகள் இருந்தன என்று விவரிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார். கோகுலத்தில், கோபால கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே பலூனில் விளையாடுவார். நமது பண்டைய கோவில்களிலும், விளையாட்டு, பொம்மைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்கு தயாரிக்கப்பட்ட பொம்மைகள், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன என்று பிரதமர் கூறினார். மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வது இந்திய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, இது நம் பொம்மைகளிலும் காணப்படுகிறது என்றார் பிரதமர். பெரும்பாலான இந்திய பொம்மைகள், இயற்கையான பொருட்களிலிருந்தும், சுற்றுச்சூழலுக்கு இயைந்த வகையிலான பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன, அவற்றில் பயன்படுத்தப்படும் வண்ணங்களும் இயற்கையானவையாக, பாதுகாப்பானவையாக உள்ளான.  இந்த பொம்மைகள் நம் மனதை, நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் இணைக்கின்றன, சமூக மன வளர்ச்சிக்கும், இந்தியக் கண்ணோட்டம் என்பதை வளர்ப்பதற்கும் இவை உதவுகின்றன என்றார் அவர். சூழலியல் மற்றும் உளவியல் ஆகிய இரண்டிற்கும் ஏற்ற வகையிலான சிறந்த பொம்மைகளை உருவாக்குமாறு நாட்டின் பொம்மை உற்பத்தியாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். பொம்மைகளில் மிகக்குறைந்த அளவிலான நெகிழியைப் பயன்படுத்துமாறும், மறுசுழற்சி செய்யக்கூடியவற்றைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று உலகம் முழுவதும், ஒவ்வொரு துறையிலும், இந்தியக் கண்ணோட்டம் மற்றும் இந்தியக் கருத்துக்கள் பற்றிப் பேசப்படுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். அறிவு, அறிவியல், பொழுதுபோக்கு மற்றும் உளவியல் ஆகியவற்றைத் த்ம்முள் கொண்டவை என்பதே, இந்திய விளையாட்டுகள் மற்றும் பொம்மைகளின் சிறப்பு என்றும் அவர் கூறினார். குழந்தைகள் பம்பரம் சுற்றி விளையாடக் கற்றுக் கொள்ளும்போது, ​​அவர்கள் ஈர்ப்பு விதி மற்றும் சமநிலை விதி குறித்து பாடம் பயின்று விடுகின்றனர். அதே போல், ஒரு குழந்தை ஸ்லிங்ஷாட் (கிட்டிப்புள்)  விளையாடும் போது  பொடென்ஷியல் எனர்ஜி மற்றும் இயக்க ஆற்றல் ஆகியவை பற்றிய அடிப்படைப் பாடன்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. புதிர் பொம்மைகள் சிந்தனையையும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறமையையும் உருவாக்குகின்றன என்றார். இதேபோல், சிறு குழந்தைகளும் கைகளைச் சுழற்றுவதன் மூலம், தங்கள் கைகளால் வட்டம் போடுவது போலான அசைவுகளைச் செய்ய முடியும் (circular movement) என்று  உணரத் தொடங்குகிறார்கள்.

கற்பனையால் உருவாக்கப்படும் பொம்மைகள் குழந்தைகளின் உணர்வுகளை மேம்படுத்தி, அவர்களின் கற்பனைகளுக்கு சிறகுகளைத் தருகின்றன என்று பிரதமர் கூறினார். அவர்களின் கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. அவர்களுக்கு தேவையானது ஒரு சிறிய பொம்மை, அது அவர்களின் ஆர்வத்தை பூர்த்திசெய்து, அவர்களின் படைப்பாற்றலைத் தட்டியெழுப்புகிறது. குழந்தைகளின் கற்றல் முறையில், பொம்மைகள் முக்கிய பங்கு வகிப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாட வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். பொம்மைகளின் அறிவியலையும், குழந்தைகளின் வளர்ச்சியில் அவை ஆற்றும் பங்கையும் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பள்ளிகளில் ஆசிரியர்கள் பொம்மைகளைப் பயன்படுத்வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தத் திசையில், அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசிய பிரதமர், இப் புதிய கல்விக் கொள்கை, பெருமளவில், விளையாட்டு அடிப்படையிலான மற்றும் செயல்பாட்டு அடிப்படையிலான கல்வியை ஒருங்கிணைக்கிறது என்றார். இந்தக் கல்வி முறையின் கீழ், குழந்தைகளின் தர்க்கரீதியான,  ஆக்கபூர்வமான சிந்தனையின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். பொம்மைகள் துறையில், பாரம்பரியமும், தொழில்நுட்பம் கொண்டது, இந்தியா. இந்தியாவிடம் கருத்துக்ளும் மற்றும் திறனும் உண்டு.

சுற்றுச்சூழலுக்கு இயைந்த வகையிலான பொம்மைகளை நோக்கி, உலகத்தை மீண்டும் பயணிக்க வைக்க நம்மால் முடியும்,  நம்முடைய மென்பொருள் பொறியாளர்கள் கணினி விளையாட்டுகள் மூலம் இந்தியாவின் கதைகளை உலகம் முழுதும் பரவச் செய்ய முடியும். இவை அனைத்தும் இருந்த போதிலும், இன்று 100 பில்லியன் டாலர் அளவிற்குள்ள உலக பொம்மை சந்தையில், இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. நாட்டில் 85% பொம்மைகள் வெளிநாட்டிலிருந்து பெறப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

நாடு இப்போது 24 முக்கிய துறைகளில் பொம்மைத் தொழிலை தரப்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். தேசிய பொம்மை செயல் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்களை போட்டித்தன்மை உடையனவாகச் செய்வதற்காகவும், பொம்மைகள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடையவும், இந்தியாவின் பொம்மைகளும் உலகிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்காகவும், 15 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன,. இந்த இயக்கம் முழுமையிலும், பொம்மை தயாரிப்புக் கூட்டு முயற்சிகளில் மாநில அரசுகள் சம பங்கு உடையவையாக ஆக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், பொம்மை சுற்றுலாவிற்கான சாத்தியக் கூறுகளை வலுப்படுத்துவதற்கான  முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் பிரதமர். விளையாட்டு அடிப்படையிலான இந்திய பொம்மைகள் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக டாயாத்தான் 2021 (Toyathon-2021)  ஏற்பாடு செய்யப்பட்டது. ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இன்று, ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை’ என்பதற்கு ஒரு தேவை இருக்கிறது என்றால், ‘இந்தியாவில் கைகளால் தயாரிக்கப்பட்டவை’ என்பதற்கான தேவையும் சம அளவில் அதிகரித்து வருவதாக பிரதமர் கூறினார். இன்று மக்கள் பொம்மைகளை ஒரு பொருளாக மட்டும் வாங்காமல், அந்தப் பொம்மையுடன் தொடர்புடைய அனுபவத்துடன் இணைவிரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். எனவே இந்தியாவில் கைகளால் தயாரிக்கப்பட்டவை’ என்பனவற்றையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்.

 

***


(Release ID: 1701387) Visitor Counter : 262