பிரதமர் அலுவலகம்
பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
24 FEB 2021 7:18PM by PIB Chennai
பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக அமலாக்குவது குறித்து இன்று காணொலி மூலம் நடந்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
இந்தியாவை மீண்டும் உயர் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் துறையின் வலுவான பங்களிப்பில் பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுத் துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலமும், இன்றைய காலமும் மாறுபட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். மக்கள் பணத்தை சரியாகச் செலவு செய்ய வேண்டும் என்பது தான் இந்த சீர்திருத்தங்களின் மிகப் பெரிய இலக்காக உள்ளது என்றார் அவர். பல பொதுத் துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன, மக்களின் வரிப் பணத்தில் கிடைக்கும் உதவியில் இயங்குகின்றன என்றும், அதனால் பொருளாதாரத்தில் சுமை ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன என்ற காரணத்துக்காக பொதுத் துறை நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது கிடையாது. நாட்டின் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்றாலும், தொழில் செய்வது அரசின் வேலை கிடையாது என்று அவர் கூறினார்.
மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை அமல் செய்வதில் தான் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், தேவையில்லாமல் மக்கள் வாழ்வில் அரசு தலையிடும் செயல்களைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார் அவர். மக்களின் வாழ்வில், அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அளிக்க முடியாத நிலையில் அரசு இருக்கக் கூடாது. அதேபோல தேவையில்லாமல் அவர்கள் வாழ்வில் குறுக்கிடவும் கூடாது. நாட்டில் குறைவாக பயன்படுத்தப்படும் மற்றும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சொத்துகள் நிறைய உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு தேசிய சொத்து பணமாக்கல் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. `பணமாக்குதல் & நவீனமாக்குதல்' என்ற வார்த்தைகளை மந்திரமாக ஏற்றுக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. அரசு பணமாக்கல் நடவடிக்கையை எடுக்கும்போது, அந்த இடைவெளியை தனியார் துறையினர் நிரப்புகிறார்கள். அவர்கள் முதலீட்டையும், உலகளவிலான சிறந்த நடைமுறைகளையும் கொண்டு வருவார்கள் என்று பிரதமர் கூறினார்.
இந்த முயற்சிகள் மூலம் அரசுக்குக் கிடைக்கும் பணத்தை பொது நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிடலாம் என்று அவர் குறிப்பிட்டார். தனியார்மயமாக்கலால் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ராணுவ முக்கியத்துவமான துறைகள் தவிர அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. முதலீடுகளுக்கான தெளிவான திட்டங்கள் வரையறை செய்யப்படும். இதனால் ஒவ்வொரு துறையிலும் புதிய முதலீடுகள் வருவதுடன், அதிக வேலைவாய்ப்புகள் பெருகும் என்று அவர் கூறினார்.
இந்த செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையாக நடப்பதையும், போட்டியை உறுதி செய்ய சரியான நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்ய, நிலையான கொள்கையை பின்பற்ற வேண்டியது அவசியம்.
முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்கும் செயலாளர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதால், ஒரே சந்தை - ஒரே மாதிரியான வரி என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. சிக்கலான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு, தொழில் துறையினர் தெரிவிக்கும் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப் படுகின்றன என்று பிரதமர் கூறினார்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சீர்திருத்தங்களைச் செய்திருப்பதுடன், முதலீட்டாளர்களை ஊக்குவிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் நவீன கட்டமைப்பு வசதி உருவாக்குதல் மற்றும் பன்முக போக்குவரத்து இணைப்பு வசதி ஏற்படுத்தும் பணிகளை வேகமாக செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் நமது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேசிய கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.111 டிரில்லியன் அளவுக்கு செலவிடப்படும் என்றார் அவர். உலகில் அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நாடு குறித்து உலக நாடுகள் நிறைய எதிர்பார்ப்புகள் வைத்துள்ளன. தனியார் துறையினரும் இதே அளவுக்கு எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளனர். தொழில் செய்யும் விருப்பத்தை இது அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்புகளை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்வோம்.
(Release ID: 1700792)
Visitor Counter : 191
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam