பிரதமர் அலுவலகம்

மின்சக்தித் துறையில் மத்திய பட்ஜெட்டை திறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

Posted On: 18 FEB 2021 6:14PM by PIB Chennai

வணக்கம் நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நாட்டின் எரிசக்தித் துறை மிகப்பெரும் பங்காற்ற வேண்டியுள்ளது. வாழ்வை எளிமையாக்குதல் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிமையாக்குதல் ஆகியவற்றின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் துறை இத்துறை. இன்று நாடு சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் எரிசக்தித் துறை, நமது மின் துறை மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறை மீது அதிக கவனம் செலுத்துவது ஆகியவை முக்கிய பங்காற்றும். இத்துறையில் முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்துவதற்காக, பட்ஜெட் அறிவிக்கப்படுவதற்கு முன்னால், இத்துறையைச் சார்ந்த நிபுணர்கள் பலரின் ஆலோசனைகள்,ருத்தில் கொள்ளப்பட்டன. உங்களது ஆலோசனைகளை பட்ஜெட்டில் இணைத்துக் கொள்ள எங்களது குழு கவனமாகச் செயல்பட்டது.

மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. உங்களது துறையில் நிதி நிலை அறிக்கையின் தாக்கம் குறித்து நீங்கள் அனைவரும் நெருக்கமாகப் பரிசீலனை செய்திருப்பீர்கள். எந்தெந்த அம்சங்கள் காரணமாக இழப்புகள் நேரிடக் கூடும் அல்லது லாபம் கிடைக்கும் என்பது குறித்தும், எவ்வாறு உங்கள் துறையில் மேலும் அதிக டிவிடெண்ட் ஈட்டலாம் என்பது குறித்தும் நீங்கள் மிக ஆழமாகப் பரிசீலனை செய்திருப்பீர்கள் என்பது உறுதி. உங்களது ஆலோசகர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலமாக இதற்கான வரைபடத்தையும் இப்போதைக்குள் தயாரித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இப்போது, செயல்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும், மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தி, உங்கள் துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும். அரசும், தனியார் துறையும் தாமாகவே முன்வந்து கலந்துரையாடி, பரஸ்பர நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்.

நண்பர்களே,

எரிசக்தித் துறை குறித்து அரசு எப்போதும் மிக முழுமையான அணுகுமுறை கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு எங்கள் கட்சி பொறுப்பேற்ற போது மின்துறை எத்தகைய நிலையில் இருந்தது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக அறிவீர்கள். மின் துறையுடன் தொடர்புடைய விநியோக நிறுவனங்கள் எத்தகைய மோசமான நிலையில் இருந்தன என்பதை நான் மீண்டும் இங்கு எடுத்துரைக்க தேவையே இல்லை. வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகிய இரு தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு நாங்கள் கொள்கைகளை வடிவமைப்பதிலும், மேம்படுத்துவதிலும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்றடைதல், மீண்டும் வலியுறுத்துதல், சீர்திருத்தம், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆகியவை குறித்து நாங்கள் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

நண்பர்களே,

நாட்டின் தொலைதூர கடைசி மைலில் உள்ள வீட்டுக்கும், மின்சார வசதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, எல்லாவித முயற்சிகளையும் நாம் மேற்கொண்டோம். தற்போது மின்சாரம் கிடைத்த மக்களுக்கு இது ஒரு புதிய உலகாகவே தோன்றுகிறது. 21வது நூற்றாண்டில் கூட இவர்களது வாழ்க்கையில் மின்சாரம் பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லை.

நம்முடைய திறனைப் பொறுத்தவரையில் மின்பற்றாக்குறை இருந்த நாடாக இருந்த இந்தியா, தற்போது தேவைக்கும் அதிகமான அளவிற்கு மின் உற்பத்தியுள்ள நாடாக மாறியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நமது உற்பத்தித் திறன் 139 ஜிகாவாட் ஆக அதிகரித்துள்ளது. "ஒரு நாடு, ஒரு தொகுப்பு, ஒரு அலைவரிசை" என்ற இலக்கை இந்தியா அடைந்துள்ளது. சில சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. உதய் யோஜனா திட்டத்தின் கீழ் நாம் ரூ.2,32,000  கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளோம். மின்சத்தித் துறையில் நிதி மற்றும் இயக்கத் திறன் அதிகரிப்பதை இது ஊக்குவித்தது. மின் தொகுப்பு சொத்துக்களை பணமாக்குவதற்காக, இன்விட் என்ற உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு விட்டது. இது விரைவில் முதலீட்டாளர்களுக்கு திறந்து விடப்படும்.

நண்பர்களே,

மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, புதுப்பிக்கக்கூடிய எரிசக்திப் பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறாண்டு காலத்தில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திறனை நாம் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளோம். இதே காலத்தில் சூரிய சக்தி எரிசக்தித் திறன் 15 மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் இந்தியா கண்டுள்ளது. சர்வதேச சூரிய சக்தி ஒப்பந்தம் மூலமாக, இன்று இந்தத் துறையில், இந்தியா உலக அளவில் தலைமை வகிக்கிறது.

நண்பர்களே,

இருபத்தோராம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக , கட்டமைப்புத் துறையில் அதிக அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டையும் இந்த ஆண்டு பட்ஜெட் வெளிப்படுத்தியுள்ளது. மிஷன் ஹைட்ரஜன் திட்டத்தை அறிமுகப் படுத்துதல், சூரிய சக்தி செல்களை உள்நாட்டிலேயே தயாரித்தல் அல்லது புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் பெரிய அளவிலான மூலதனத்தைக் கொண்டு வருதல் போன்ற எந்தத் திட்டமாக இருந்தாலும், இந்தியா ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நம் நாட்டிற்கான சூரிய சக்தி தேவை நம்முடைய தற்போதைய உற்பத்தித் திறனை விட 12 மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு மிகப்பெரிய சந்தை நமக்காகக் காத்திருக்கிறது. எதிர்காலத்தில் இத்துறையில் உள்ள மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகளை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். நமது நாட்டின் தேவை இவ்வாறு மிகப்பெரும் அளவில் உள்ளது.

நம்முடைய நிறுவனங்கள் நம்முடைய உள்நாட்டு நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக மட்டுமல்லாமல் உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாக அமையவேண்டும். உலக அளவில் உற்பத்தி செய்யும் தலைமை நாடாக உருவாக வேண்டும்.

உயர் திறன் கொண்ட சூரிய சக்தி பிவி மாட்யூல்களை அரசு பிஎல்ஐ-யுடன் இணைத்துள்ளது. இதற்காக ரூ.4,500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. ஜிகாவாட் அளவிலான சூரிய சக்தி பிவி உற்பத்தி வசதிகளை இந்தியாவில் ஏற்படுத்த, இந்த முதலீடுகள் உதவும். பிஎல்ஐ திட்டம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. மொபைல் தயாரிப்பு, இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட போது, உடனடியாக பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் உயர் திறன் கொண்ட சூரிய சக்தி பி வி மாட்யூல்கள் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்படுவதால் இதற்கும் அதே மாதிரி நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎல்ஐ திட்டத்தின் கீழ் 10,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி பிவி ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலைகள் ஏற்படுத்தப்படும். இவற்றுக்காக சுமார் ரூ.14,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அடுத்த ஐந்தாண்டு காலங்களில் 17 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான அளவிற்கு தேவை ஏற்படும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. சூரிய சக்தி பி வி உற்பத்தியில் மொத்த சூழல் அமைப்பின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் இது மிகப் பெரும் பங்கு வகிக்கும்.

நண்பர்களே,

புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் முதலீட்டை அதிகரிப்பதற்காக இந்தியாவில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அமைப்பிற்கு மேலும் ஆயிரம் கோடி ரூபாயை, கூடுதலாக அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இந்திய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளர்ச்சி முகமையிலும் கூடுதலாக 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இது ஒரு சாதனை நடவடிக்கையாகும்.

நண்பர்களே,

மின்சத்தித் துறையில் வர்த்தகம் செய்வதை எளிமையாக்குவதை மேம்படுத்துவதற்காக, விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான இயக்கம் ஒன்றையும் அரசு மேற்கொண்டுள்ளது. மின்துறை முன்பு பார்க்கப்பட்ட கண்ணோட்டம் குறித்து எங்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. இப்போது மின்துறையில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் அனைத்தும், மின்துறையை எரிசக்தித் துறையின் ஒரு பகுதியாகக் கருதாமல் மின் துறையை ஒரு தனிப்பட்ட துறையாகக் கருதியே செய்யப்பட்டு வருகிறது.‌

மின்துறை பெரும்பாலும் தொழில் துறையின் ஒரு உதவி அமைப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் மின்சாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த முக்கியத்துவம் தொழில் துறைக்காக மட்டுமானதல்ல. இந்தக் காரணத்தால் தான் இன்று சாதாரண மக்களுக்கும் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவில் கவனம் செலுத்தப்படுகிறது.

அரசின் கொள்கைகள் காரணமாக இந்தியாவின் மின்சாரத் தேவை சாதனை அளவை எட்டியுள்ளது! மின்சார விநியோகம் மற்றும் விநியோகப் பிரிவில் நாடு முழுவதும் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மின் விநியோக நிறுவனங்கள் தொடர்பான விதிமுறைகள் மற்றும் அதற்கு தேவையான கொள்கைகள் உருவாக்கப்படவுள்ளன. நுகர்வோருக்கு, மற்ற சில்லறைப் பொருட்கள் கிடைப்பது போல மின்சாரமும் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மின் விநியோகத் துறையில் நுழைவதற்கு உள்ள நுழைவுத் தடைகளைக் குறைப்பதற்காகவும், மின் விநியோகம் மற்றும் மின் சப்ளை செய்ய உரிமம் இல்லாமல் செயல்படவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்கள் நவீனப்படுத்துதல் மற்றும் ஃபீடர் செபரேஷன் அமைப்புகள் தொடர்பான கட்டமைப்பு பற்றி வினியோக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அரசு திட்டமொன்றை வகுத்து வருகிறது.

நண்பர்களே,

இந்தியாவில் சூரிய சக்தி எரிசக்தி செலவு மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக மக்களும் சூரிய எரிசக்தி பயன்பாட்டுக்கு எளிதாக மாறி வருகிறார்கள். நமது உழவர்கள், எரிசக்தி வழங்குபவர்களாகவும் மாற பிரதமர் குசும் திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டம் மூலமாக உழவர்களின் நிலங்களில் சிறிய மின் ஆலைகளை அமைப்பதன் மூலம் 30 ஜிகாவாட் சூரிய சக்தி மின் சக்தியை உருவாக்குவதே இலக்காகும். இதுவரை சுமார் நான்கு ஜிகாவாட் ரூஃப்டாப் சூரிய சக்தி திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக சுமார் 2.5 ஜிகா வாட் விரைவில் ஏற்படுத்தப்படும். அடுத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ரூஃப்டாப் சூரியசக்தி திட்டங்கள் மூலமாக 40 ஜிகாவாட் சூரியசக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இனிவரும் நாட்களில் மின் துறையை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் அதிக முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறோம். உங்களது பரிந்துரைகள் எங்களது முயற்சிகளுக்கு மேலும் உறுதி சேர்க்கும். இன்று நம் நாட்டின் மின்சத்தித் துறை, புத்துணர்ச்சியுடன் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ள வேண்டும். நீங்கள் முன் நின்று வழி நடத்துங்கள்.

இன்றைய இணைய வழிக் கருத்தரங்கம், சிறந்த நிபுணர்களின் ஆலோசனைகள், பரிந்துரைகள் ஆகியவற்றுடன் அர்த்தமுள்ள முறையில் நிறைவடையும் என்று நான் நம்புகிறேன். மத்திய நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான எங்களது முயற்சிகளை, உங்களுடைய மேலான ஆலோசனைகள் திடப்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன். நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்காக அரசின் ஒட்டு மொத்த குழுவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து பார்த்தது; ஆலோசனைகளில் ஈடுபட்டது. பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு, வெகு குறுகிய காலத்திலேயே இதுபோன்றதொரு மிகப்பெரிய நடவடிக்கையை மேற்கொள்வது என்பது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு நிச்சயம் மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும் என்பது எனது கருத்து. இப்படியானால்’, இப்படி இருந்திருந்தால்’, ‘இப்படி இருந்திருக்கலாமே’, ‘இப்படி இருந்திருக்க வேண்டும்’, ‘எது சரியாக இருந்திருக்கக்கூடும் என்பது பற்றியெல்லாம் யோசிப்பதற்காக நேரத்தைச் செலவிடுவதற்குக் காலம் கடந்து விட்டது. இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துவது. நம்முன் இருக்கக்கூடியவற்றை எடுத்துக் கொள்வது ஆகியவையே ஆகும். நாம் ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே பட்ஜெட் குறித்து அறிவிக்கத் தொடங்கினோம். அப்படியானால் நாம் பொருளாதார முன்னேற்றத்தை ஒரு மாதகாலம் முன்னதாகவே மேற்கொள்ள வேண்டும். பட்ஜெட் ஏப்ரலில் செயல்படுத்தப்படும். எனவே கட்டமைப்பைப் பொறுத்தவரை இந்த கட்டம் மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பது நமக்குப் புரிகிறது. நாம் ஒரு விவாதத்தைத் தொடங்கினோம் என்றால் நாம் திட்டமிடும் நேரத்தில் ஒரு மாத காலத்தை இழக்க வேண்டியிருக்கும்.

மே மாத இறுதி வாக்கில் நம் நாட்டில் மழைக்காலம் தொடங்கி விடும். கட்டமைப்பு தொடர்பான அனைத்து பணிகளும் ஏறத்தாழ மூன்று மாத காலத்திற்கு முடங்கிவிடும். பணிகள் ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கப்பட்டு விட்டால் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு காலத்தில், கட்டமைப்பு மேம்பாட்டுக்கான காலம் நமக்குக் கிடைக்கும். இவ்வாறு செய்தால், நாம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் சவால்களைச் சமாளிக்க முடியும். அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான காலத்தை உச்சபட்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் பட்ஜெட்டை ஒரு மாதம் முன்னதாகவே அறிவித்தோம்.

அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தானாகவே முன்வந்து செய்து வருகிறது. உங்களைப் போன்ற அனைத்து பங்குதாரர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அரசு, ஒரு டி முன்னால் நிற்கும்.

எனவே நீங்கள் அனைவரும் இதன் பலன்களைப் பெற வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு வலுவான ஆலோசனைகளை நீங்கள் முன்வைக்க வேண்டும் என்று நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். எனது குழுவினர் உங்களுடன் விரிவான ஆலோசனை நடத்துவார்கள். நாம் இரு தரப்பினரும் கரத்தோடு கரம் இணைந்து நாட்டின் கனவுகளை நனவாக்குவோம்.

இந்த இணைய வழிக் கருத்தரங்கு வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமானதாக, ஆழ்ந்த முனைப்புடன் கூடியதாக இருக்கட்டும். நடைமுறைப் படுத்துதல் - என்னுடைய கவனம் நடைமுறைப்படுத்துவதில் மட்டுமே.

இதை மீண்டும் உறுதி செய்யுங்கள்

நன்றிகள் பலப்பல.


(Release ID: 1699888) Visitor Counter : 235