பிரதமர் அலுவலகம்
கேரளாவில் மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான முக்கியத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து, அடிக்கல் நாட்டினார்
இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், கேரளாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியது : பிரதமர்
கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியாவின் சூரியசக்தித் திறன் 13 மடங்கு அதிகரித்துள்ளது : பிரதமர்
நமது உணவுக் களஞ்சியங்களை, மின் உற்பத்தி மையங்களாக மாற்ற விவசாயிகள் சூரியசக்தித் திட்டங்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றனர் : பிரதமர்
வளர்ச்சிப் பணிகளும், நல் ஆளுகையும், சாதி, மதம், இனம், பாலினம், பிராந்தியம் அல்லது மொழியை அறியாதவை : பிரதமர்
Posted On:
19 FEB 2021 6:22PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திரமோடி, கேரளாவில் இன்று, புகளூர் – திருச்சூர் மின்சார பகிர்மானத் திட்டம், காசர்கோடு சூரியசக்தி மின்சாரத் திட்டம் மற்றும் அருவிக்கரா தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை காணொளிக்காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, ஒருங்கிணைந்த பாசனத் திட்டம், கட்டுப்பாட்டு மையம் மற்றும் திருவனந்தபுரம் நவீன சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன், மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர்(தனிப் பொறுப்பு) திரு.ராஜ் குமார் சிங் மற்றும் வீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், கேரளாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளன என்றார். இவை, இந்தியாவின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் மக்களைக் கொண்ட எழில்மிகு கேரள மாநிலத்திற்கு ஆற்றலையும் அதிகாரத்தையும் வழங்கும்.
இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள 2000 மெகாவாட் அதிநவீன புகளூர் – திருச்சூர் உயர் மின்னழுத்த நேர் மின்சார பகிர்மானத் திட்டம், கேரளாவை தேசியத் தொகுப்புடன் இணைக்கும் முதலாவது உயரழுத்த நேர் மின்சாரத் திட்டம் என்பதோடு, மாநிலத்தின் அதிகரித்துவரும் மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்ய ஏதுவாக, பெருமளவிலான மின்சாரத்தை எடுத்துச் செல்லவும் உதவும்.
மின்சாரப் பகிர்மானத்திற்காக, விஎஸ்சி மின்மாற்றித் தொழில்நுட்பமும் நாட்டில் முதல் முறையாக இப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் பருவகாலத் தன்மை காரணமாக, மாநிலத்திலேயே மின் உற்பத்தி மேற்கொள்ள இயலாததால், மின்சாரத் தேவைகளுக்காக, தேசிய மின் தொகுப்பிலிருந்து இறக்குமதி செய்வதையே கேரளா பெருமளவு சார்ந்திருக்கும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த இடைவெளியைப் பூர்த்தி செய்ய உயரழுத்த நேர் மின்சாரத் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உயரழுத்த நேர் மின்சாரத் திட்ட உபகரணங்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பதால், சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கும் இது வலுசேர்க்கும்.
சூரியசக்தி மின் உற்பத்தியில் நாம் பெற்றுள்ள ஆதாயங்கள், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக வலிமையாக போராடுவதை உறுதி செய்வதோடு, நமது தொழில்முனைவோருக்கும் ஊக்கமளிக்கும். நமது உணவுக் களஞ்சியங்களை, மின் உற்பத்தி மையங்களாக மாற்ற ஏதுவாக, விவசாயிகள் சூரியசக்தித் திட்டங்களுடன் இணைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பிரதமரின் சோலார் பம்பு மானிய திட்டத்தின்கீழ், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சூரியசக்தி பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில், நாட்டின் சூரியசக்தி மின்னுற்பத்தித் திறன் 13 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டணி மூலம், உலக நாடுகளை இந்தியா ஓரணியில் திரட்டியுள்ளது. நம் நாட்டிலுள்ள நகரங்கள், வளர்ச்சிக்கான இயந்திரங்களாகவும், புதுமை கண்டுபிடிப்புக்கான ஆற்றல் மையங்களாகத் திகழ்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். நமது நகரங்கள், ஊக்கமளிக்கக்கூடிய மூன்று போக்குகளைக் கண்டு வருகின்றன : தொழில்நுட்ப மேம்பாடு, சாதகமான புவியியல் அமைப்பு மற்றும் அதிகரித்துவரும் உள்நாட்டுத் தேவை ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
நவீன நகரங்கள் இயக்கத்தின்கீழ் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், மேம்பட்ட நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கும் உதவுகின்றன. இதுவரை 54 கட்டளை மையத் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்திருப்பதுடன், அதுபோன்ற 30 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மையங்கள், குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் பயனுள்ளவையாக இருந்தன. நவீன நகரங்கள் இயக்கத்தின்கீழ், கேரளாவின் இரண்டு நவீன நகரங்களான கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை கணிசமாக முன்னேற்றம் அடைந்துள்ளன. ரூ.773 கோடி மதிப்பிலாள 27 திட்டப்பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருப்பதுடன், ரூ.2,000 கோடி மதிப்பிலான 68 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நகரங்களை விரிவுபடுத்தவும், அவற்றின் கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பை மேம்படுத்தவும் அம்ருத் திட்டம் பேருதவி புரிந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அம்ருத் திட்டத்தின்கீழ், கேரளாவில் ரூ.1,100 கோடிக்கும் அதிக மதிப்பீட்டில், கேரளாவில் மொத்தம் 175 குடிநீர் வினியோகத் திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
9 அம்ருத் நகரங்களில், உலகளாவிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று தொடங்கி வைக்கப்பட்ட அருவிக்கரா தண்ணீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள், ரூ.70 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இத்திட்டம், சுமார் 13 லட்சம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுடன், திருவனந்தபுரத்தில் வினியோகிக்கப்படும் தண்ணீரின் அளவை, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100 லிட்டரிலிருநது 150 லிட்டராக அதிகரிக்கவும் உதவும்.
சத்ரபதி சிவாஜி மகராஜின் வாழ்க்கை, இந்தியா முழுவதும் உள்ள மக்களை கவர்ந்திழுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். சுயராஜ்யத்திற்கு சிவாஜி முக்கியத்துவம் அளித்து வந்ததாக குறிப்பிட்ட பிரதமர், சுயராஜ்யத்தில்தான், வளர்ச்சித் திட்டங்களின் பலன், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் என்றும் கூறினார். சிவாஜி, வலுவான கடற்படையை உருவாக்கியதோடு, கடலோரப்பகுதிகளின் மேம்பாடு மற்றும் மீனவர்களின் நலனுக்காகவும் கடுமையாக பாடுபட்டதாக சுட்டிக்காட்டிய அவர், அவரது தொலைநோக்கு சிந்தனையை அரசு தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் சுயசார்பு நிலையை அடையும் நிலையில் இந்தியா சென்றுகொண்டு இருப்பதாகவும் பிரதமர் கூறினார். பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில், வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய முயற்சிகள், திறமைமிக்க இந்திய இளைஞர்கள் பலருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா நீலப் பொருளாதாரத்தில் முதலீடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மீனவ சமுதாயத்தின் நலனுக்கான நமது முயற்சிகள் : அதிக கடன், அதிகரிக்கப்பட்ட தொழில்நுட்பம், உயர்தர கட்டமைப்பு மற்றும் அரசின் ஆதரவான கொள்கைகள் அடிப்படையில் அமைந்தவை. அரசின் கொள்கைகள், இந்தியா கடல் உணவு ஏற்றுமதி மையமாக மாறுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
மலையாளக் கவிஞர் குமாரநேசனின்,
“சகோதரியே நான் உனது
சாதியைக் கேட்கவில்லை,
நான் தண்ணீர் தான் கேட்கிறேன்,
நான் தாகத்துடன் இருக்கிறேன். “ என்ற கவிதை வரிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், வளர்ச்சிக்கும், நல் ஆளுகைக்கும் சாதி, மதம், இனம், பாலினம், பிராந்தியம் மற்றும் மொழி தெரியாது என்றும் தெரிவித்தார். வளர்ச்சிப் பணிகள் அனைவருக்குமானவை என்பதோடு, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை என்பதன் சாராம்சம். ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் வளர்ச்சி என்ற தொலைநோக்கு சிந்தனையை அடைய, கேரள மக்கள் அனைவரும் முன்னேறிச் செல்ல ஒத்துழைக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
--------
(Release ID: 1699529)
Visitor Counter : 247
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam