பிரதமர் அலுவலகம்

அசாமில் ‘மகாபாகு-பிரம்மபுத்ரா’வை பிரதமர் தொடங்கி வைத்தார், இரண்டு பாலங்களுக்கு அடிக்கல் நாட்டினார்


அசாம், வடகிழக்கின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் தொடர்பு ஆகியவை அரசின் முன்னுரிமைகள் ; பிரதமர்

ரோ-பாக்ஸ் சேவைகள் தூரத்தை வெகுவாக குறைக்கும்; பிரதமர்

Posted On: 18 FEB 2021 2:57PM by PIB Chennai

அசாமில் ‘மகாபாகு-பிரம்மபுத்ரா’வை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்ததுடன்,  இரண்டு பாலங்களுக்கு அடிக்கல்லையும் நாட்டினார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், மத்திய சட்டம், நீதி, தொலைத் தொடர்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் , மத்திய துறைமுகங்கள் (தனிப்பொறுப்பு) , கப்பல், நீர்வழிகள் துறை இணையமைச்சர், அசாம், மேகாலாயா மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

‘மகாபாகு-பிரம்மபுத்ரா’வைத் தொடங்கி வைப்பதன் அடையாளமாக, நேமதி- மஜுலி தீவு, வடக்கு கவுகாத்தி-தெற்கு கவுகாத்தி, துப்ரி-ஹஸ்திங்கிமரி இடையே ரோ-பாக்ஸ் கப்பல்கள்  இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். ஜோகிகோபாவில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து முனையத்துக்கும், பிரம்மபுத்ரா ஆற்றின் கரைகளில் பல்வேறு சுற்றுலா படகுத்துறைகளுக்கும் பிரதமர் அடிக்கல்லை நாட்டினார்.

எளிதில் வர்த்தகம் புரிவதற்கான டிஜிடல் தீர்வுகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நேற்று கொண்டாடப்பட்ட விவசாயத்துடன் தொடர்புடைய அலி-ஆயே-லிகாங் பண்டிகையை யொட்டி மிசிங் சமுதாயத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். ஆண்டாண்டு காலமாக இந்தப் புனித நதி சமூகத்துடனும், தொடர்புடனும் சம்பந்தப்பட்டு வந்துள்ளதாக அவர் கூறினார். பிரம்மபுத்ராவுடன் போதிய அளவு இணைப்பு பணிகள் முன்பு நடந்ததில்லை என அவர் கூறினார். இக்காரணத்தால், அசாமுக்கு உள்ளேயும், வடகிழக்கு பகுதியிலும் போக்குவரத்து தொடர்பு எப்போதும் பெரிய சவாலாகவே இருந்து வந்தது. தற்போது இத்திட்டங்கள் வேகமாக நடைபெற்று, இப்பிராந்தியம் முழுவதிலும், புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியிலும் தூரத்தை வெகுவாகக் குறைத்துள்ளன. அசாம் உள்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதிலும் ஒருமைப்பாடு சமீபத்திய ஆண்டுகளில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் பூபேன் ஹசாரிகா பாலம், போகிபீல் பாலம், சாரைக்காட் பாலம் போன்ற பல பாலங்கள் அசாமில் வாழ்க்கையை இன்று எளிதாக்கி இருக்கின்றன என்று பிரதமர் கூறினார்.

இது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தி இருப்பதுடன், நமது வீரர்களுக்கு சிறந்த வசதியை அளித்துள்ளன. அசாம், வடகிழக்கு இணைப்பு இயக்கம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அசாம் முதலைமைச்சரும், அவரது குழுவினரும் இதனை சாதித்துள்ளதாக பிரதமர் பாராட்டினார். மஜுலி அசாமின் முதல் ஹெலிப்பேடை பெற்றுள்ளதுடன், வேகமாக வளர்ந்து வருகிறது. பாதுகாப்பான சாலைகள் வேண்டும் என்ற நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த கோரிக்கை நிறைவேறியுள்ளது. கலிபாரியையும், ஜோர்காத்தையும் இணைக்கும் 8 கி.மீ தூர பாலத்துக்கு பூமி பூஜை நடைபெற்றுள்ளது. ‘’ இது வசதி மற்றும் வாய்ப்புகளுக்கான பாலமாக இருக்கப் போகிறது’’ என பிரதமர் தெரிவித்தார்.  

இது போல, துபாரியிலிருந்து, மேகாலயாவின் புல்பாரி வரையிலான 19 கி.மீ தூர பாலம் பாரக் சமவெளியில் போக்குவரத்து தொடர்பை மேம்படுத்தும். அது, மேகாலயா, மணிப்பூர், மிஜோரம், அசாம் இடையே 250 கி.மீ அளவுக்கு சாலை தூரத்தை குறைக்கும். இன்று, மேகாலயாவுக்கும், அசாமுக்கும் இடையே 250 கி.மீ அளவுக்கு தூரம் குறைந்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இது 19-20 கி.மீ ஆக குறையும் என்று அவர் தெரிவித்தார்.

‘ மகாபாகு-பிரம்மபுத்ரா’ திட்டம் குறித்து பேசிய திரு. மோடி, பிரம்மபுத்ரா நீர் வழி தொடர்பை இது வலுப்படுத்தும் என்றார். இன்று தொடங்கப்பட்டுள்ள மூன்று ரோ-பாக்ஸ் சேவைகள், இதை இயக்கும் முன்னணி மாநிலமாக அசாமை மாற்றியுள்ளது. இத்துடன், நான்கு சுற்றுலா படகுத் துறைகளும், வடகிழக்கு பிராந்தியத்துடனான அசாமின் தொடர்பை கணிசமான அளவுக்கு முன்னேற்றும்.

பல ஆண்டுகளாக போக்குவரத்து தொடர்பு புறக்கணிக்கப்பட்டு வந்ததால், மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரதமர் குற்றம்சாட்டினார். உள்கட்டமைப்பு சீர்குலைந்து, நீர்வழிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து, ஸ்தம்பித்து இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக, அசாமில் பல்முனை தொடர்புகளை  உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அசாம், வடகிழக்கு பகுதியை இதர கிழக்காசிய நாடுகளுடன், நமது கலாச்சாரம் மற்றும் வர்த்தக மையமாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு நீர்வழி பணிகள் இங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் கூறினார். நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தம் பங்களாதேசுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரம்மபுத்ராவுடன் பாரக் ஆற்றை இணைக்க,  ஹூக்ளி ஆற்றின் குறுக்கே இந்திய-பங்களாதேஷ் முக்கிய பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடகிழக்கு பகுதியை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைப்பதன் மூலம், குறுகிய வழித்தடத்தை நம்பி இருக்கும் நிலை குறைக்கப்படும். ஜோகிகோபா ஐடபிள்யுடி முனையம், அசாமை நீர் வழி மூலமாக ஹால்டியா துறைமுகம், கொல்கத்தாவுடன் இணைக்கும் மாற்றுப் பாதையை வலுப்படுத்தும். இந்த முனையத்தில் பூடான், பங்களாதேஷ் சரக்குகள் கையாளப்படும். ஜோகிகோபா பல்முனை சரக்கு பூங்கா, பிரம்மபுத்ரா ஆற்றின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து வசதிகளுக்கு வழிவகுக்கும்.

இந்தப் புதிய வழிகள் சாதாரண மக்களின் வசதிக்காகவும், இப்பிராந்தியத்தின் மேம்பாட்டிற்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மஜுலி, நேமதி இடையிலான ரோ-பாக்ஸ் சேவைகள், 425 கி.மீ தூரத்தை வெறும் 12 கி.மீ.ஆக குறைக்கும் என்று அவர் கூறினார். இந்தப் பாதையில் இரண்டு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்தக் கப்பல்கள் ஒரே நேரத்தில் 1600 பயணிகள் மற்றும் பல வாகனங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. கவுகாத்தியில் தொடங்கப்பட்டுள்ள இதுபோன்ற வசதி, வடக்கு மற்றும் கவுகாத்திக்கு இடையே 40 கி.மீ தூரத்தை வெறும் 3 கி.மீ ஆக குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பயனாளர்கள் துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கு வசதியாக இ-வலைதளங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். சரக்கு மற்றும் கப்பல் போக்குவரத்து குறித்த தேசிய நீர்வழி தரவுகளை பெறுவதற்கு கார் டி-போர்ட்டல் உதவும். நீர்வழி உள்கட்டமைப்பு தொடர்பான தகவல்களையும் அது வழங்கும். ஜிஐஎஸ் அடிப்படையிலான இந்தியா மேப் போர்ட்டல், இங்கு வர்த்தகத்துக்காக வருவோருக்கு உதவும் என்று அவர் கூறினார்.

அசாம், வடகிழக்கை இணைக்கும் நீர்வழி, ரயில்வே, நெடுஞ்சாலை ஆகியவற்றுடன் இணையத் தொடர்பும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பிரதமர் கூறினார். இதுதொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டுடன், கவுகாத்தியில் வடகிழக்கின் முதல் தரவு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த தரவு மையம், 8 மாநிலங்கள், ஐடி அடிப்படையிலான தொழில், பிபிஓ சூழல் முறை, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதி ஸ்டார்ட் அப்களை இ-நிர்வாகம் மூலம் வலுப்படுத்தும் தரவு மையமாக செயல்படும்.

வடகிழக்கு உள்பட நாட்டில், சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்ற நோக்குடன் அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார். மஜுலி பகுதியின் கலாச்சார ஆழம், வளமை, அசாம் கலாச்சாரம், உள்ளூர் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

கலாச்சார பல்கலைக் கழகம், மஜுலிக்கு பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய அந்தஸ்து, தேஜ்பூர்-மஜுலி-சிவசாகர் பாரம்பரிய சுற்று, நமாமி பிரம்மபுத்ரா, நமாமி பாரக்  போன்ற கொண்டாட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார்.

இந்த நடவடிக்கைகள் அசாமின் அடையாளத்தை மேலும் செழுமைப் படுத்தியுள்ளன என்று பிரதமர் கூறினார். இன்று தொடங்கப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகள் சுற்றுலாவுக்கு புதிய வழிகளை ஏற்படுத்துவதுடன், அசாம் சுற்றுலா கப்பல் போக்குவரத்து மையமாக உருவெடுக்க வழி கோலும்  என அவர் நம்பிக்கை வெளியிட்டார். ‘’ அசாம், வடகிழக்கு பகுதியை தற்சார்பு இந்தியாவின் வலுவான தூணாக மாற்ற நாம் இணைந்து பாடுபட வேண்டும்’’ என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

***



(Release ID: 1699152) Visitor Counter : 214