பிரதமர் அலுவலகம்
பிரதமர் மோடி, கேரளாவின் கொச்சியில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடங்கிவைத்தார்
பல்வேறு துறைகளிலும் இன்று ஏராளமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவை, இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு புத்தெழுச்சியூட்டும் : பிரதமர்
கேரளாவில் சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது: பிரதமர்
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் : பிரதமர்
வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நலனில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கும், தமது வேண்டுகோளுக்கு செவிசாய்த்தமைக்காகவும் வளைகுடா நாடு அரசுகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
Posted On:
14 FEB 2021 6:29PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திரமோடி, இன்று கேரளாவின் கொச்சியில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கேரள ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர்கள் திரு.மன்சுக் மண்டாவியா, திரு.வி.முரளீதரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பல்வேறு துறைகளிலும் இன்று ஏராளமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இவை இந்தியாவின் வளர்ச்சிப்பாதைக்கு ஊக்கமளிக்கும். இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள புரொப்பிலீன் அடிப்படையிலான பெட்ரோகெமிக்கல் திட்டம், அன்னியச் செலாவணியை பெருமளவிற்கு மிச்சப்படுத்தும் என்பதால், இது சுயசார்பு இந்தியா இயக்கத்தை வலுப்படுத்த உதவும் என்றார். ஏராளமான தொழிற்சாலைகள் பலனடைவதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். அதேபோன்று, ரோ-ரோ படகு சேவை மூலம், சாலை மார்க்கமாக 30 கிலோமீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ளும் பயணத்தை, நீர்வழிப்பாதைகள் மூலம் 3.5கிலோமீட்டர் தொலைவிலேயே மேற்கொள்வதால் நெரிசல் குறைய வழிவகுப்பதோடு, அதிக வசதி கொண்டதாகவும், வர்த்தக ரீதியாகவும், திறன் உருவாக்கவும் உதவிகரமாக இருக்கும்.
கேரளாவில், சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். கொச்சியில், சகாரிகா சர்வதேச படகுப் போக்குவரத்து முனையம் தொடங்கப்பட்டிருப்பது, இதற்கு ஒரு உதாரணம். சகாரிகா படகு முனையம், படகுப் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்களின் தேவையை பூர்த்தி செய்யும். பெருந்தொற்று காரணமாக, சர்வதேச பயணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உள்நாட்டு சுற்றுலா அதிகரித்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். உள்ளூர் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது ஒரு கூடுதல் வாழ்வாதார வாய்ப்பாக அமைவதுடன், நமது கலாச்சாரம் மற்றும் நமது இளைஞர்களிடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். புதிய தொழில் தொடங்க விரும்புவோர், சுற்றுலா சார்ந்த புதுமையான தொழில்களைத் தொடங்குவது பற்றி சிந்திக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். உலக சுற்றுலா அட்டவணையில், முன்பு அறுபந்தைந்தாம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 34-வது இடத்திற்கு முன்னேறியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். தேச வளர்ச்சிக்கு, திறன் உருவாக்கம் மற்றும் எதிர்காலத்திற்கேற்ற கட்டமைப்பு வசதிகள், இரண்டு முக்கிய அம்சங்களாகத் திகழ்வதாகவும் பிரதமர் கூறினார். "விஞ்ஞான் சாகர்" -ல் தற்போது மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தெற்கு நிலக்கரி இறங்குதள மறுநிர்மாணம் ஆகியவை, இவ்விரு துறைகளுக்கும் பெரிதும் பயனளிக்கும். கொச்சி கப்பல்கட்டும் தளத்தின் புதிய அறிவாற்றல் வளாகமாகத் திகழும் விஞ்ஞான் சாகர், கடல்சார் பொறியியல் படிப்பை விரும்புவோருக்கு உதவிகரமாக இருக்கும். தெற்கு நிலக்கரி இறங்குதளம், போக்குவரத்து செலவைக் குறைப்பதோடு, சரக்குக் கையாளும் திறனையும் அதிகரிக்கும். கட்டமைப்பு என்பதற்கான அர்த்தமும், வாய்ப்பும் தற்போது முற்றிலும் மாறிவிட்டதையும் பிரதமர் எடுத்துரைத்தார். தரமான சாலைகளுக்கு அப்பால்; வளர்ச்சிப் பணிகள் மற்றும் சில நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து இணைப்புகளும், கட்டமைப்பின் கீழ் வருகின்றன. தேசிய குழாய்வழி கட்டமைப்புத் திட்டத்தின் மூலம், கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக, ரூ.110லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் பற்றிக் குறிப்பிட்ட திரு.மோடி, "இந்தத் துறையில் நமது தொலைநோக்கும், பணிகளும் : மேலும் பல துறைமுகங்களை உருவாக்குதல், தற்போதுள்ள துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஆழ்கடல் எரிசக்தி, நீடித்த கடல்சார் வளர்ச்சி மற்றும் கடலோரப் பகுதி இணைப்பு" ஆகியவையும் அடங்கும் என்றார். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மீனவ சமுதாயத்தின் பல்வேறுபட்ட தேவைகளை இது பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார். அதிக கடன் கிடைப்பதையும் இது உறுதி செய்யும். மீனவர்கள், கிசான் கடன் அட்டைத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். அதேபோன்று, இந்தியாவை, கடல் உணவு ஏற்றுமதி மண்டலமாக மாற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட், கேரளாவிற்கு பயனளிக்கக்கூடிய பல்வேறு ஆதாரங்கள் மற்றும் திட்டங்களைக் கொண்டதாக உள்ளது. கொச்சி மெட்ரோ-வின் அடுத்தகட்டப் பணிகளும் இதில் அடக்கம்.
கொரோனா ஏற்படுத்திய சவாலை இந்தியா உறுதியுடன் எதிர்கொண்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், வெளிநாடுவாழ் இந்தியர்கள், குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிப்போருக்கு உதவ அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவுகூர்ந்தார். வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களால், நாடு பெருமிதம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். வந்தே பாரத் இயக்கத்தின் ஒரு பகுதியாக, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், கேரளாவைச் சேர்ந்தவர்கள். வளைகுடா நாடுகளில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களை விடுவிக்க, இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு, உணர்வுப்பூர்வ அணுகுமுறையை கடைப்பிடித்த வளைகுடா நாடுகளுக்கும், இந்த தருணத்தில் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். "நான், நேரடியாக விடுத்த வேண்டுகோளை, வளைகுடா நாடுகளின் மன்னர்கள் ஏற்று, இந்தியர்களின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தினர். இந்தியர்கள் நாடு திரும்புவதற்கும் அவர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர். இந்த நடைமுறைக்கு உதவியாக, ஏர் பபுள்ஸ் முறையை ஏற்படுத்தியிருக்கிறோம். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் நலனை உறுதிசெய்ய, எனது அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதை அவர்கள் மறந்துவிடக்கூடாது" என்றும் பிரதமர் தெரிவித்தார்.
*********
(Release ID: 1697999)
Visitor Counter : 250
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam