சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் 92,61,227 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு : மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 02 FEB 2021 4:20PM by PIB Chennai

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார்  சவுபே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

மாநிலங்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகள் ஒதுக்கீடு

நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. 

அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் கொவிட் தடுப்பூசிகள்  வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5,32,605 சுகாதார பணியாளர்கள் உட்பட, நாடு முழுவதும் 92,61,227 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்:

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் சோதனை அடிப்படையில் 6 யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த ஜனவரி 21ம் தேதி வரை 6,30,478 சுகாதார  அடையாள குறியீடுகள் (ஐ.டி) உருவாக்கப்பட்டுள்ளன.  தனிநபர் சுகாதார தரவுகள் எல்லாம், அவர்களின் சம்மதத்துடன் ஒருங்கிணைந்த கட்டமைப்பில் சேமித்துவைக்கப்படுகிறது.

 

இதன் மூலம் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம், சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய குடிமக்களின் தனிநபர் ரகசியத்தில் எந்த விதிமுறை மீறலும் இருக்காது.

மேலும், மருத்துவ ஆவணங்கள், தனிநபர் மற்றும் அவரின் நியமனதாரர் சம்மதத்துடன், யாருக்கும் கிடைக்கும்.

 

எய்ம்ஸ் நிலவரம்:

பிரதமரின் ஆரோக்யா சுரக்‌ஷா திட்டத்தின் கீழ் 22 எய்ம்ஸ் மருத்துவ மனைகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டில் உள்ளன. மற்ற 16 புதிய எய்ம்ஸ் கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைப்பெற்று வருகின்றன.

மாநில சுகாதார திட்டங்களுடன், ஆயுஷ்மான் பாரத்  இணைப்பு :

ஆயுஸ்மான் பாரத் திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மாநிலங்கள் தங்கள் சொந்த சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களையும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த முடியும். இதற்கான நிதியை மத்திய மாநில அரசுகள்  60:40 என்ற  விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.  வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதி மாநிலங்கள் 90:10 என்ற விதித்தில் பகிர்ந்து கொள்கின்றன. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 100 சதவீத பங்களிப்பை அளிக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.57 பேர், ரூ.19,506 கோடி மதிப்பில் சிகிச்சை பெற்றுள்னர்.

* கொவிட் -19 நோயாளிகளின் மருத்துவ கழிவுகள் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிமுறைப்படி அழிக்கப்படுகின்றன. இதற்கான வசதிகள் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் உள்ளன.

* முன்னுரிமை அடிப்படையில்  மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதை நிர்வகிக்க தேசிய நிபுணர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கொவிட்-19 தடுப்பூசி மேலாண்மை குறித்த அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது. 

* கடந்த 2016 ஆம் ஆண்டில், தேசிய மனநல கணக்கெடுப்பை,  பெங்களூரில் உள்ள மனநல மற்றும் மூளை நரம்பியல் தேசிய மையம் (நிம்ஹன்ஸ்)  மூலம் மத்திய அரசு நடத்தியது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோரில் 10.6 சதவீதம் பேர் மன நல பிரச்னையில் இருப்பது தெரியவந்தது.   தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் 692 மாவட்டங்களில், மாவட்ட மனநல சுகாதார திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உளவியல் ஆலோசனை வழங்க 24 மணி நேர உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை மத்திய சுகாதாரத்துறையின் இணையதளத்தில்   (https://www.mohfw.gov.in/) “Behavioural Health – Psychosocial helpline”  என்ற தலைப்பின் கீழ் உள்ளது.

* கொவிட் மேலாண்மைக்காக 2020-21ம் நிதியாண்டில் ஜனவரி 19ம் தேதி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 6309.91 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் ஏழைகள் நலன் காப்பீடு திட்டம், ஆஷா பணியாளர்கள் உள்பட அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கொவிட்-19 காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.50 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. கொவிட் 19-க்கு எதிராக போராடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. கடந்தாண்டு நவம்பர் வரை 9,53,445 ஆஷா பணியாளர்கள், 36,716 ஆஷா உதவியாளர்கள் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர்.

* கொவிட் -19 மேலாண்மைக்காக கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல், இதுவரை 38, 867 வென்டிலேட்டர்கள், ரூ.1850.76 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694433

                                                                                -------(Release ID: 1694576) Visitor Counter : 271