நிதி அமைச்சகம்
தற்சார்பு இந்தியாவின் ஆறு முக்கிய தூண்களுள் சுகாதாரமும் நல்வாழ்வும்
Posted On:
01 FEB 2021 2:04PM by PIB Chennai
மத்திய நிதி பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-இல் சுகாதாரம், நல்வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இவை தற்சார்பு இந்தியாவின் அடித்தளமாக அமைகிறது. சுகாதாரம், நல்வாழ்விற்கு 137 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற ஜல் ஜீவன் இயக்கம் துவங்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 4,378 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2.86 கோடி வீடுகளுக்கு தண்ணீர் இணைப்புகள் வழங்கப்படுவதுடன், அம்ருத் என்று அழைக்கப்படும் புத்துயிர் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டத்தின் 500 நகரங்களில் திரவ கழிவு மேலாண்மையும் அமைக்கப்படும். ரூ. 2,87,000 கோடி செலவில் ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தியாவின் நகரப் பகுதிகளை மேலும் தூய்மையாக்கும் முயற்சியில் மனித கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு, தரம் பிரிக்கப்பட்ட குப்பை, ஒருமுறை மட்டுமே உபயோகப்படும் நெகிழியின் பயன்பாட்டை குறைத்தல், கட்டுமான மற்றும் தகர்ப்பு நடவடிக்கைகளின் கழிவு மேலாண்மை மற்றும் உயிரிகளை பயன்படுத்தி மாசை கட்டுப்படுத்தும் வழிகள் வாயிலாக காற்று மாசை குறைப்பது போன்றவற்றிற்கும் நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 2021-2026 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ரூ. 1,41,678 கோடி மதிப்பில் நகர்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0 செயல்படுத்தப்படும்.
“காற்று மாசடைவதை கட்டுப்படுத்துவதற்காக பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 42 நகர்ப்புற மையங்களுக்கு ரூ. 2217 கோடியை இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்குகிறேன்”.
பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் வகையில் தன்னார்வ வாகன ரத்து கொள்கையும் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் எரிவாயு சேமிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசும் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யின் தொகையும் குறையும். தனிநபர் வாகனங்களுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகும், வணிக ரீதியான வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகும் தர பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693905
(Release ID: 1694103)
Visitor Counter : 279