நிதி அமைச்சகம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல் செய்யப்படுவதால் 69 கோடி பயனாளிகள் இந்த வசதியைப் பெற்றுள்ளதாக நிதியமைச்சர் தகவல்

Posted On: 01 FEB 2021 1:43PM by PIB Chennai

பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி மூலம் உயர்விருப்பம் கொண்ட இந்தியாவை உருவாக்குதல் என்பது தான், மத்திய பட்ஜெட் 2021-22-க்கான தூண்களில் ஒன்றாக உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள், குறிப்பாக குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான முன்மொழிவுகளை முன்வைக்க, வழிகாட்டியாக இந்த அம்சம் உள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை மற்றும் தொழிலாளர் விதிகள் அமலாக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்தார். அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க ஒரு முனையம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை

``ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலில் உள்ளது. இதில் 69 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர். அதாவது மொத்த பயனாளிகளில் 86 சதவீதம் பேர் பயன் பெறுகின்றனர்'' என்று அமைச்சர் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் மீதமுள்ள 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இதில் சேர்க்கப்படும் என அவர் உறுதியளித்தார். ரேஷன் அட்டை பயனாளிகள், நாட்டில் எந்தப் பகுதியிலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள இத் திட்டம் வகை செய்கிறது.  குறிப்பாக குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் சொந்த ஊரில் இருக்கும்போது, தாங்கள் வேறு இடத்தில் வேலை பார்க்கும் நிலையில், பகுதியளவு பொருட்களை வாங்கிக் கொள்ளவும், ஊரில் இருப்பவர்கள் மீதியை வாங்கிக் கொள்ளவும் இது வகை செய்கிறது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான முனையம்

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து விசேஷ கவனம் செலுத்தும் வகையில், அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான அரசின் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், ஒரு முனையம் உருவாக்கப்படும் என திருமதி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தனியாக வேலை பார்ப்பவர்கள், கட்டடங்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இதன் மூலம் சேகரிக்கப்படும். குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுகாதாரம், வீட்டுவசதி, தொழில் திறன் பயிற்சி, காப்பீடு, கடன் மற்றும் உணவுப் பொருள் அளிக்கும் திட்டங்களை உருவாக்க இது உதவிகரமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693888


(Release ID: 1694026) Visitor Counter : 326