நிதி அமைச்சகம்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22: சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ.‌1,18,101 கோடி ஒதுக்கீடு

இதுவரை இல்லாத வகையில் ரூ. 1,08,230 கோடி, மூலதனமாக அறிவிப்பு
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 8500 கிலோமீட்டருக்கு அனுமதி வழங்க இலக்கு
2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 11,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் தடம் நிறைவடையும்.
பல்வேறு பொருளாதார வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன

Posted On: 01 FEB 2021 1:50PM by PIB Chennai

2021-22  மத்திய நிதிநிலை அறிக்கையில் சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஏராளமான அறிவிப்புகளை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ. 1,18,101 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அதிகளவில் ரூ. 1,08,230 கோடி, மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 5.35 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 3.3 லட்சம் கோடி மதிப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ள 13000 கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகளில் 3800 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மக்களவையில் அறிவித்தார். வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 8500 கிலோ மீட்டருக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், கூடுதலாக 11000 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் தடமும் நிறைவடையும்.

சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு பொருளாதார வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்: 

1.      தமிழகத்தில் 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ரூ.1.03 லட்சம் கோடி  செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

2.      கேரளாவில் 1,100 கிலோமீட்டர் தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் ரூ.65,000  கோடி  செலவில் அமைக்கப்படும்.  கேரளாவில் 600 கிலோமீட்டர் தொலைவிலான மும்பை- கன்னியாகுமரி  வழித்தடமும் இதில் அடங்கும்.

3.      கொல்கத்தா- சிலிகுரி  சாலை மேம்பாட்டுப் பணிகள் உட்பட மேற்கு வங்காளத்தில் 675 கிலோமீட்டர் தொலைவிலான நெடுஞ்சாலைப் பணிகள் ரூ. 25,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

4.      அசாமில் ரூபாய் 19 ஆயிரம் கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில் 1300 கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் ரூ. 34,000 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

முன்னோடி திட்டங்கள்: சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள்:

தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள முன்னோடி திட்டங்கள் பின்வருமாறு:

•        பெங்களூரு- சென்னை எக்ஸ்பிரஸ் வழித்தடம்: நடப்பு நிதியாண்டில் 278 கிலோமீட்டர் தொலைவிலான பணிகள் தொடங்கும். 2021-22ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் துவங்கும்

•        சென்னை- சேலம் வழித்தடம்: 277 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் அனுமதி வழங்கப்பட்டு 2021- 22ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693896



(Release ID: 1693980) Visitor Counter : 459