உள்துறை அமைச்சகம்

கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே கூடுதல் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது

Posted On: 27 JAN 2021 6:11PM by PIB Chennai

கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள்ஆகியவற்றுடன் 2021 பிப்ரவரி 1 முதல் 2021 பிப்ரவரி 28 வரை நடைமுறையில் இருக்கக்கூடிய உத்தரவு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.

கொவிட்-19 பாதிப்புகள் நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பெருந்தொற்றின் பரவலுக்கு எதிராக அடைந்துள்ள பலன்களை தக்கவைத்துக் கொள்வதே இந்த வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கமாகும்.

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு:

* மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகள் மாவட்ட அதிகாரிகளால் கவனமுடன் வரையறுக்கப்பட வேண்டும்.

* இந்தக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

சரியான கொவிட் நடத்தை வழிமுறைகள்:

* சரியான கொவிட் நடத்தை வழிமுறையை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* முகக்கவசங்கள் அணிதல், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், சமூக இடைவெளி ஆகியவை கண்காணிக்கப்பட்டு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுதல்:

கட்டுப்பாடுப் பகுதிகளுக்கு வெளியே கீழ்கண்ட நடவடிக்கைகள் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளோடு அனுமதிக்கப்படும்

* அரங்கத்தின் 50 சதவீத கொள்ளளவுடன், 200 பேருக்கு மிகாமல் சமூக/ஆன்மிக/விளையாட்டு/பொழுதுபோக்கு/கல்வி/கலாச்சார/மதம் சார்ந்த கூட்டங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது இவை சம்பந்தப்பட்ட மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படும்.

* 50 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது இன்னும் அதிகம் பேர் அனுமதிக்கப்படுவர். இது குறித்த திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் வெளியிடப்படும்.

* விளையாட்டு வீரர்களுக்கு நீச்சல் குளங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் அனுமதிக்கப்படுவர். இது குறித்த திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்தால், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் வெளியிடப்படும்.

* வர்த்தகக் கூட்டங்களில் தளர்வுகள் குறித்த நிலையான செயல்பாட்டு வழிமுறையும் அறிவிக்கப்படும்

* சர்வதேச விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளும் நிலைமையை பொருத்து தளர்த்தப்படும்.

பயணக் கட்டுப்பாடுகள்:

மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களிடையேயான போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை. எந்த தனிப்பட்ட அனுமதியும் தேவையில்லை.

ஆரோக்கிய சேது:

ஆரோக்கிய சேது செயலியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

அனைத்து விதிகளூம் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளும் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

-----(Release ID: 1692787) Visitor Counter : 105