தேர்தல் ஆணையம்
11வது தேசிய வாக்காளர் தினம், ஜனவரி 25ம் தேதி கொண்டாப்படுகிறது
Posted On:
24 JAN 2021 5:19AM by PIB Chennai
11வது தேசிய வாக்காளர் தினத்தை, இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25ம் தேதி கொண்டாடுகிறது.
தில்லி அசோக் ஓட்டலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந், ராஷ்டிரபதி பவனில் இருந்து காணொலி காட்சி மூலம் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய சட்ட அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவதே இந்தாண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப் பொருள். தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதை இது எதிர்நோக்குகிறது.
கொவிட்-19 தொற்று காலத்தில், தேர்தல்களை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டிலும் இது கவனம் செலுத்துகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான். நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் தகலறிந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தில், புதிய வாக்காளர்களுக்கு போட்டோ அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாண்பு மிகு குடியரசுத் தலைவர் 2020-21ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை வழங்குவார். ‘ஹலோ வாக்காளர்கள்’ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோவையும் அவர் தொடங்கி வைக்கிறார். சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகள், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகள், பாதுகாப்பு மேலாண்மை, கொவிட்-19 நேரத்தில் தேர்தல் மேயாண்மை, தேர்தல் விழிப்புணர்வு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691755
*******************
(Release ID: 1691862)