தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பிற்காக இந்தியா, ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 15 JAN 2021 5:01PM by PIB Chennai

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் இன்று கையெழுத்திட்டன. மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் மற்றும் ஜப்பான் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் திரு தக்கேடா ரையோட்டா ஆகியோரிடையே காணொலி கூட்டம் ஒன்றில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பங்கள், தொலைதொடர்பு பாதுகாப்பு, இந்திய தீவுகளுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை அமைப்பு, அலைக்கற்றை மேலாண்மை, பொலிவுறு நகரங்கள், இணைப்பு இல்லாத பகுதிகளில் அதிவேக அகண்ட அலைவரிசை, பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய அரசின் தொலைதொடர்பு துறையும், ஜப்பான் அரசின் தகவல் தொடர்பு துறையும் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

அமைச்சகங்கள் அளவிலான ஒத்துழைப்பை தவிர, சி-டாட் மற்றும் ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய அரசு நிறுவனங்களும் தங்களது ஜப்பானிய பங்குதாரர்களோடு இணைந்து இந்த ஒத்துழைப்பில் பங்கேற்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் பேசிய திரு ரவி சங்கர் பிரசாத், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை கடலுக்கடியிலான கண்ணாடி இழை அமைப்பு மூலம் குறித்த நேரத்தில் இணைத்தது இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒத்துழைப்புக்கு ஒரு நல்ல உதாரணம் என்றார்.

ஆரோக்கிய சேது போன்ற புதுமையான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொவிட்-19 பெருந்தொற்றின் போது இந்தியா பயன்படுத்தியது என்று கூறிய அமைச்சர், ஆதார் சார்ந்த பரிவர்த்தை அமைப்பின் மூலம் இந்திய தபால் துறையால் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று நிதியுதவி வழங்கப்பட்டதாகக் கூறினார்.

கொவிட்-19-இன் போது கூட அதிக அளவிலான முதலீடுகளை மின்னணு உற்பத்தி துறையில் இந்தியா ஈர்த்ததாகக் கூறிய திரு பிரசாத், இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜப்பானிய மின்னணு தொழில் நிறுவனங்களை கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688812

                                                                              -----


(Release ID: 1688846) Visitor Counter : 778