சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா தொற்றால் உயிரிழப்பு: தொடர்ந்து 16 நாட்களாக 300-க்கும் குறைவாக பதிவு

Posted On: 10 JAN 2021 12:32PM by PIB Chennai

கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் சிறந்த மருத்துவ மேலாண்மையின் உதவியால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் வீதம் தற்போது 1.44 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 16 நாட்களாக உயிரிழப்போரின் எண்ணிக்கை   தொடர்ந்து 300-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

10 லட்சம் மக்கள் தொகையில் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் மிகவும் குறைவு (109). ரஷ்யா, ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

நாட்டில் தற்போது 2,23,335 பேர் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 2.14 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 19,299 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உலகளவில் மிகவும் குறைவு (162). பிரேசில், ரஷ்யா ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து,  அமெரிக்கா ஆகிய நாடுகளில் 10 லட்சம் மக்கள் தொகையில் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்.

நாட்டில் இதுவரை மொத்தம் 1,00,75,950 பேர் (96.42%) குணமடைந்துள்ளனர். புதிதாக குணமடைந்தவர்களில் 79.12 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 5,424 பேரும், மகாராஷ்டிராவில் 2,401 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 1,167 பேரும் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 18,645 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 82.25 சதவீத புதிய தொற்றுக்கள் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. கேரளாவில் 5,528 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3,581 பேரும், சத்தீஸ்கரில் 1,014 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 201 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 73.63 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே  சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 57 பேரும், கேரளாவில் 22 பேரும், மேற்கு வங்காளத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் தோன்றியுள்ள புதிய கொவிட் நோய் தொற்றால் இந்தியாவில் மொத்தம் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687416

------


(Release ID: 1687433)