குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தொழில்நுட்ப படிப்புகளை மாநில மொழிகளில் வழங்க குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 05 JAN 2021 1:27PM by PIB Chennai

தொழில்நுட்ப படிப்புகளை, உயர் கல்வி நிறுவனங்கள், மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள கணித அறிவியல் மையத்தில் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு பேசியதாவது:

”அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்(ஸ்டெம்) ஆகிய பாடப்பிரிவுகளில் பெண் பட்டதாரிகளை உலகளவில் அதிகமாக சுமார் 40 சதவீதம் இந்தியா உருவாக்குகிறது. ஆனால், இத்துறைகளின் வேலை வாய்ப்பில் பெண்களின் பங்கு மிக குறைவாக 14 சதவீதம் என்ற அளவில் உள்ளதுஇதை அதிகரிக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புகளிலும், ஆராய்ச்சிப் படிப்புகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இதை சரி செய்ய விரைவான நடவடிக்கை தேவை. ஐஐடிக்களில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளால், 2016ம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, தற்போது 20 சதவீதமாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின்பெண் விஞ்ஞானிகள் திட்டம்பாராட்டுக்குரியது. இது அறிவியல், கணிதத் துறை வேலை வாய்ப்புகளில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது. பெண் விஞ்ஞானிகளை நாம் கொண்டாட வேண்டும். பெண் குழந்தைகளுக்காக, அறிவியல் துறையில் முன் மாதிரிகளை உருவாக்க வேண்டும்

வேலை வாய்ப்பை உருவாக்குவதில், தரவு அறிவியல் புரட்சியின் திறனை நாம் பயன்படுத்த வேண்டும்வர்த்தகம் செய்யப்படும் வழியை தரவு மாற்றிவிட்டது. வழக்கமான பொறியியல் பாடத்திட்டத்தைத் தாண்டி, புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள நாம் இளம் பட்டதாரிகளைத் தயார்படுத்த வேண்டும். இது தற்போதைய தொழில் துறை தேவைக்கு தொடர்புடைய வகையில் இருக்க வேண்டும்.

ஐஐடிக்கள் வழங்கும் தொலை தூரக் கல்வி பரவியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் பலர் பயனடையும் வகையில் தொழில்நுட்ப படிப்புகள் மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும்.

அறிவியல் கல்விகளை உள்நாட்டு மொழிகளில் வழங்குவது, மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கும். இது புத்தாக்கத்துக்கு உதவும். எந்த மொழியையும், திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது. முடிந்த அளவு அனைத்து மொழிகளையும் கற்க வேண்டம். தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கணித துறையில், இந்திய கணித அறிஞர் சீனிவாச ராமனுஜன் மதிப்பிட முடியாத பங்களிப்பை அளித்தார். குழந்தைகளுக்குள் இருக்கும் திறனை வெளியே கொண்டுவர வேண்டும்குழந்தைகளிடம் திறமைக்கு பஞ்சம் இல்லை. அந்த திறமையைக் கண்டறிந்து வளர்ப்பது முக்கியம்.

கொவிட் 19 தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் சாத்தியமாக்கியுள்ளனர். இது அறிவியலில் மிகப் பெரிய வளர்ச்சி. நமது விஞ்ஞானிகளின் சிறந்த முயற்சிகள், இளம் ஆராய்ச்சியாளர்களின் உற்சாகம் ஆகியவை நாடு சிறந்த எதிர்காலத்தை சந்திக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறதுஅனைத்து ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சியின் நோக்கம், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான்.

 

நாம் இயற்கையை மதிக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தின் எதிர்மறை தாக்கங்கள், நமது வாழ்வை பாதிக்கும். அதனால் இயற்கையுடன் நாம் இணக்கமாக வாழ வேண்டும். யோகா, முறையாக சமைத்த, சத்தான உணவுகளை சாப்பிட்டு மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை முறையைப் பின்பற்ற வேண்டும்.

தற்போது, இளைஞர்கள் செல்போன்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது தேவையற்ற கவனச் சிதறல்களை ஏற்படுத்தும்மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, அவர்களின் பாடத்திட்டங்களில் யோகா, தோட்டம் அமைத்தல், சமூக பணி ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்

பல குழந்தைகளுக்கு கணிதம் கற்பது பயத்தை ஏற்படுத்துகிறது. மனப்பாடம் செய்வதற்கு  மாற்றாக, படைப்பாற்றல் முறைகளை கல்வியாளர்கள்  கொண்டு வந்து, கணிதத்தை குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மாற்ற வேண்டும்.

இதற்கு புதிய கல்வி முறையைப் பின்பற்றி, ஆரம்ப கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அறிவியல் வேலை வாய்ப்புகளுக்கு செல்ல குழந்தைகளை ஊக்குவிப்பதன் மூலம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் பாடங்களில் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். இத்துறைகளின் ஆராய்ச்சியை வலுப்படுத்த, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்திய நியூட்ரினோ ஆய்வகம் உட்பட அடிப்படை ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்த கணித அறிவியல் மையம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம், அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவின் உலகளாவிய நிலையை உயர்த்தும். தமிழகத்தில் அறிவியல் திட்டங்களை இந்த மையம் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. மக்களிடம், குறிப்பாக குழந்தைகளிடம் அறிவியல் மனநிலையை வளர்ப்பதுதான் இப்போதைய தேவை.”

இவ்வாறு குடியரசுத் தலைவர் திரு வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை பல்லாவரத்தில் அமைக்கப்பட்டுள்ள, கணித அறிவியல் மையத்தின், புதிய பிரிவை, குடியரசுத் துணைத் தலைவர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக கல்வி அமைச்சர் திரு கே.பி அன்பழகன், கணித அறிவியல் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் வி.அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686221

************



(Release ID: 1686257) Visitor Counter : 144