வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியத் தொழிற்துறையில் தரம், உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான தொடர் இணையக் கருத்தரங்கு -“உத்யோக் மந்தன்” தொடக்கம்
Posted On:
05 JAN 2021 10:26AM by PIB Chennai
இந்தியத் தொழிற்துறையில் தரத்தையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதற்காக, மத்திய வர்த்தக தொழில் அமைச்சகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, இந்திய தர கவுன்சில், தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து ‘உத்யோக் மந்தன்’ என்ற தொடர் இணைய கருத்தரங்குகளை 2021, ஜனவரி 4ம் தேதி முதல் 2021, மார்ச் 2ம் தேதி வரை நடத்துகிறது.
2021 ஜனவரி 6ம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு, மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமை வகிக்கிறார்.
இந்த தொடர் இணையக் கருத்தரங்கில், 45 கூட்டங்கள் நடைபெறும். இதில் உற்பத்தி, சேவைகளில் முக்கிய துறைகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு கருத்தரங்கும் 2 மணி நேரம் நடைபெறும். இதில் தொழில் துறை நிபுணர்கள் தலைமையில் விவாதங்கள் நடைபெறுகின்றன. தொழில்துறை பிரதிநிதிகள், பரிசோதனை மற்றும் தர அமைப்பினர் இதில் கலந்து கொள்கின்றனர். விருப்பமுள்ளவர்கள் கவனிப்பதற்காக, இந்த இணையக் கருத்தரங்குகள் யூ-ட்யூப் சேனலில் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்த உத்யோக் மந்தன் நிகழ்ச்சி, சவால்கள், வாய்ப்புகள், தீர்வுகள், சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை அடையாளம் காணும். இந்த விவாதங்கள், தொழில்துறையினர் பல விஷயங்களை கற்பதற்கும், தரத்தையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்கவும், உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும், தற்சார்பு இந்தியா தொலைநோக்கை உணரவும் வழிவகுக்கும்.
தரம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்படி அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான அம்சங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அப்போதுதான், அதிக தரம், திறமையான உற்பத்தியாளர், வர்த்தகர், சேவை அளிப்பவர் என்ற அந்தஸ்து நம் நாட்டுக்குக் கிடைக்கும்.
************
(Release ID: 1686172)
(Release ID: 1686232)
Visitor Counter : 208