பிரதமர் அலுவலகம்

ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

குஜராத்தில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை ராஜ்காட் எய்ம்ஸ் அளிக்கும்: பிரதமர்
கோவிட்டுக்கு எதிரான செயல்பாடுகளில் வழிகாட்டிய குஜராத்: பிரதமர்
10 புதிய எய்ம்ஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளைக் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன: பிரதமர்
சுகாதார சவால்கள் நிறைந்ததாக 2020 இருந்தது, சுகாதாரத் தீர்வுகள் அளிப்பதாக 2021 இருக்கும்: பிரதமர்

உலக சுகாதாரத்தின் மையமாக 2021ல் இந்தியா தனது நிலையை பலப்படுத்தும்: பிரதமர்
இந்த ஆண்டின் கடைசி நாளில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்கள வீரர்களின் பங்களிப்பை பிரதமர் நினைவுகூர்ந்தார்

Posted On: 31 DEC 2020 12:55PM by PIB Chennai

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

          நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், கொரோனா காலத்தில் பொது மக்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து முன்களத்தில் நின்று பணியாற்றி வரும் 9 மில்லியன் டாக்டர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். விஞ்ஞானிகளின் முயற்சிகளை அவர் பாராட்டினார். சிரமமான இந்த காலக்கட்டத்தில் ஏழைகளுக்கு முழு அர்ப்பணிப்புடன் உணவளித்த அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

          இந்தியா ஒன்றுபட்டு நின்றால் மிக மோசமான நெருக்கடிகளையும் திறமையாக சமாளிக்க முடியும் என்பதை இந்த ஆண்டு நிரூபித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். சிறந்த நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா காலத்தில் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். தடுப்பு மருந்து அளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கும் தடுப்பு மருந்துகள், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சரியான முறையில் சென்று சேருவதை உறுதி செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உலகின் மிகப் பெரிய அளவில் தடுப்பூசி மருந்து அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முழு வேகத்தில் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். முடிவடையும் ஆண்டில் நோய்ப் பரவலைத் தடுப்பதில் வெற்றி கண்டதைப் போல, தடுப்பூசி போடும் இயக்கத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் சுகாதாரக் கட்டமைப்பு, மருத்துவக் கல்வி வசதிகள் பெருகுவதுடன், குஜராத்தில் வேலைவாய்ப்புகளும் பெருகும் என்று திரு. மோடி கூறினார். நேரடியாக 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக அதே அளவிலும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார். கோவிட் பாதிப்புக்கு எதிராக குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், இந்த விஷயத்தில் குஜராத் மாநிலம் வழிகாட்டியாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டார். குஜராத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், கொரோனா சவாலை எதிர்கொள்வதில் குஜராத்தின் சிறப்பான அணுகுமுறை ஆகியவை பற்றியும் திரு. மோடி பாராட்டு தெரிவித்தார். மருத்துவத் துறையில் குஜராத்தின் இந்த வெற்றிக்கு, இரண்டு பத்தாண்டு கால ஓய்வற்ற உழைப்பு, அர்ப்பணிப்பு, உறுதி ஆகிய பின்னணிகள் இருப்பதாக அவர் கூறினார்.

இதற்கு முன்னர், இந்தியாவில் 6 எம்ய்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருந்தன. அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் காலத்தில் 2003 ஆம் ஆண்டில் மேலும் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில் 10 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளுடன், 20 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும் உருவாக்கப் படுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

          2014 ஆம் ஆண்டுக்கு முன்புவரையில், நமது சுகாதாரத் துறையின் பல்வேறு செயல்பாடுகள் வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்தன என்றும், 2014-க்குப் பிறகு, முழுமையான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டதால் நோய்த் தடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நவீன சிகிச்சை வசதிகளை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றும் பிரதமர் தெரிவித்தார். ஏழைகளுக்கான சிகிச்சை செலவைக் குறைக்கவும், அதேசமயத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தொலைதூரப் பகுதிகளில்  1.5 மில்லியன் சுகாதார மற்றும் நலன் மையங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் ஏற்கெனவே 50 ஆயிரம் மையங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன என்று பிரதமர் தெரிவித்தார். அவற்றில் குஜராத்தில் மட்டும் 5 ஆயிரம் மையங்கள் உள்ளன என்றார் அவர். சுமார் 7000 மக்கள் மருந்தக மையங்கள் மூலம், 3.5 லட்சம் ஏழைகள் குறைந்த விலைகளில் மருந்துகள் வாங்கியுள்ளனர். மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளைப் பிரதமர் பட்டியலிட்டார்.

2020 ஆம் ஆண்டு சுகாதார சவால்கள் நிறைந்ததாக இருந்தது என்றால், 2021 ஆம் ஆண்டு சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை அளிப்பதாக இருக்கும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். சிறப்பான விழிப்புணர்வு மூலமாக சுகாதாரத் தீர்வுகளை நோக்கி உலகம் பயணிக்கும். 2020 சுகாதார சவால்களை சிறப்பாக எதிர்கொண்டதைப் போல, சுகாதாரத் தீர்வுகள் அளிப்பதில் 2021-ல் இந்தியா முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய மருத்துவ நிபுணர்களின் திறமை, சேவை மனப்பான்மை, அதிக அளவில் தடுப்பு மருந்துகள் அளிப்பதில் உள்ள அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், உலகிற்கு சிறந்த மற்றும் சிக்கனமான தீர்வுகளை நம்மால் அளிக்க முடியும் என்று பிரதமர் கூறினார். சுகாதாரத் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சுகாதாரத் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து செயல்படுவதால், எல்லோருக்கும் சுகாதார சேவை கிடைக்கச் செய்ய முடியும். ``எதிர்கால ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தின் எதிர்காலத்தில் இந்தியா முக்கிய பங்காற்றப் போகிறது'' என்று திரு. மோடி கூறினார்.

நோய்கள் இப்போது உலக அளவில் பரவும்நிலையில், உலக அளவில் சுகாதாரத் தீர்வுகள் காண்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தேவைக்கு ஏற்ப தீர்வுகளை அளித்து இந்தியா தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. உலக ஆரோக்கியத்தின் மையமாக இந்தியா உருவாகி வருகிறது. 2021ல் நாம் இதை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

******



(Release ID: 1685060) Visitor Counter : 252